அருள்மிகு கோபாலகிருஷ்ணன் திருக்கோயில், காவளம்பாடி(திருநாங்கூர்)

அருள்மிகு கோபாலகிருஷ்ணன் திருக்கோயில், காவளம்பாடி(திருநாங்கூர்)- 609 106, நாகப்பட்டினம் மாவட்டம்.

+91-4364-275 478 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் கோபாலகிருஷ்ணன் (ராஜகோபாலன்) பாமா, ருக்மணி
தாயார் செங்கமல நாச்சியார், மடலவரல் மங்கை
தீர்த்தம் தடமலர்ப்பொய்கை தீர்த்தம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் காவளம்பாடி, திருநாங்கூர்
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு

காவளம்என்றால் பூஞ்சோலை. துவாரகை போல பூஞ்சோலைகள் மிக்க ஒரு இடம் தேடி, அங்கே பாமாவுடன் தங்க விரும்பினார் கிருஷ்ணர். அப்படி அமர்ந்த இடத்தில் ஒன்று தான் காவளம்பாடி. இன்றைக்கும் கூட இந்த இடம் மிகவும் பசுமையாகத்தான் உள்ளது. இத்தலத்தை வட துவாரகைக்கு இணையாகத் தல புராணம் கூறுகிறது. பாமாவுக்கு பிடித்தமான தேவலோக மலரான பாரிஜாத பூச்செடி கிருஷ்ணனால் பூமியில் நடப்பட்ட இடம் தான் காவளம்பாடி. சிவனுக்கும், சேனைத்தலைவர் விஷ்வக்சேனருக்கும் இங்கு கிருஷ்ணன் காட்சி தந்துள்ளார். கோயில் சிறியது தான் என்றாலும், மிக அருமையாக உள்ளது.

ஆண்டு தோறும் தை அமாவாசைக்கு மறுநாள் இப்பகுதியிலுள்ள 11 திருப்பதி பெருமாள்களும் ஒன்றாக கருட சேவைக்கு மணிமாடக்கோவிலில் எழுந்தருள்வார்கள். இவர்களுக்கு மங்களாசாசனம் செய்வதற்காக திருமங்கையாழ்வார் இங்கு எழுந்தருள்வார். அன்றைய தினம் இந்த ஊரைச்சுற்றியுள்ள வயல் வெளிகளில் உள்ள நெற்பயிர்கள் காற்றினால் ஆடும் சத்தத்தை கேட்டதும், அந்த சப்த வடிவில் திருமங்கையாழ்வாரே வந்து விட்டதாக பக்தர்கள் பரவசமடைவார்கள். பதினொரு பெருமாளையும் மங்களாசாசனம் செய்த பிறகு, திருமங்கையாழ்வாரை மணவாள மாமுனிகள் மங்களாசாசனம் செய்வார். இந்த கண்கொள்ளாக் காட்சியை காண ஏராளமான பக்தர்கள் கூடுவார்கள்.

பெருமாளுக்கு மேல் உள்ள விமானம் வேதாமோத விமானம். இத்தல பெருமாளை சேனைத்தலைவர், ருத்ரன் ஆகியோர் தரிசித்துள்ளனர்.

பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று.

பாடியவர்கள்:

திருமங்கையாழ்வார் மங்களாசாஸனம்

ஏவிளங் கன்னிக் காகி இமையவர் கோனைச் செற்று காவளம் கடிதிறுத்துக் கற்பகம் கொண்டு போந்தாய் பூவளம் பொழில்கள் சூழ்ந்த புரந்தரன் செய்த நாங்கை காவளம் பாடி மேய கண்ணனே களை கனீயே.

திருமங்கையாழ்வார்

திருவிழா:

வைகுண்ட ஏகாதசி, கிருஷ்ணஜெயந்தி

பிரார்த்தனை:

குழந்தை பாக்கியம் பெற இங்குள்ள கிருஷ்ணரிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியதும் கிருஷ்ணருக்கு வெண்ணெய் சாத்தி, பாயசம் செய்து வழிபாடு செய்கின்றனர்.

வழிகாட்டி:

சீர்காழியிலிருந்து பூம்புகார் செல்லும் வழியில் காவளம்பாடி (திருநாங்கூர்) அமைந்துள்ளது.

அருகிலுள்ள ரயில் நிலையம் : சீர்காழி

அருகிலுள்ள விமான நிலையம் : சென்னை, திருச்சி

தங்கும் வசதி : மயிலாடுதுறை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *