அருள் மிகு கள்ளழகர் திருக்கோயில், அழகர் கோவில்

அருள் மிகு கள்ளழகர் திருக்கோயில், அழகர் கோவில்– 625 301, மதுரை மாவட்டம்.

+91 – 452-247 0228, 247 0229 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பரமஸ்வாமி
உற்சவர் சுந்தர்ராஜப் பெருமாள்( ரிஷபத்ரிநாதர்), கல்யாணசுந்தர வல்லி
தாயார் ஸ்ரீதேவி, பூதேவி
தல விருட்சம் ஜோதி விருட்சம், சந்தனமரம்
தீர்த்தம் நூபுர கங்கை
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருமாலிருஞ்சோலை
ஊர் அழகர்கோவில்
மாவட்டம் மதுரை
மாநிலம் தமிழ்நாடு

எமதர்ம ராஜனுக்கு சாபம் ஏற்பட்டது. இச்சாபத்தை போக்க பூலோகத்தில் விருசுபகிரி(கோயில் இருக்கும் அழகர் மலை) என்னும் இம்மலையில் தபசுசெய்தார். இம்மலை 7 மலைகளை கொண்டது.

எமதர்மராஜனின் தபசை மெச்சிப் பெருமாள் காட்சிதந்தார். இறைவனின் கருணையைப் போற்றும் விதமாக எமதர்மராஜன் பெருமாளிடம் தினந்தோறும் உன்னை ஒரு மு‌றையாகிலும் பூஜை செய்ய வரம் தர வேண்டும் என்று கேட்டார். அதன்படியே பெருமாளும் வரம் தர, இன்றும் இக்கோயிலில் தினமும் நடக்கும் அர்த்த ஜாம பூஜையை எமதர்ம ராஜனே நடத்துவதாக ஐதீகம். எல்லா மக்களுக்கும் அருள் தருமாறு வேண்டிய, எமதர்ம ராஜன் விருப்பத்தின் பேரில் விஸ்வகர்மாவினால் சோமசந்த விமானம்(வட்ட வடிவ) உள்ள ‌கோயில் கட்டப்பட்டது.

இத்தலத்தில் காவல் தெய்வமாக விளங்கும் கருப்பண்ணசுவாமி மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம். பதினெட்டாம் படியான் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறார். இவரை கும்பிட்டால் நினைத்த காரியங்கள் கைகூடும்.

விவசாயிகள் விளைச்சல் அறுவடைக்கு முன்பு தங்கள் நிலத்தில் குறிப்பிட்ட இடத்தில் கோட்டை கட்டி, அதில் இருக்கும் தானியங்களை அழகருக்கு காணிக்கையாகச் ‌‌செலுத்துவார்கள்.

காணிக்கையாகக் கிடைக்கும் தானியங்களை அரைத்து மாவாக்கி, அதில் கோயில் சார்பாக தோசை சுட்டு பிரசாதமாகத் தரப்படுகிறது. இது பழநி பஞ்சாமிர்தம், திருப்பதி லட்டு போன்று மிகவும் புகழும், சிறப்பும் உடையது.

நூபுர கங்கை என்னும் சிலம்பாறு ராக்காயி (அம்மன் கோயில்) அம்மன் கால் சிலம்பிலிருந்து மலைக்குகைக்குள் வற்றாத ஜீவ நதியாக வந்து கொண்டிருக்கிறது.

பெருமாள் சப்தரிஷிகள், சப்த கன்னிகள், பிரம்மா, விகனேஷ்வர் ஆகியோரால் ஆராதிக்கப்படுகிறார்.

6 ஆழ்வார்களாலும் பாடல் பெற்ற முக்கிய திவ்ய தேசம்

சக்கரத்தாழ்வார் சப்த கன்னிகளால் ஆராதிக்கப்படுகின்றார்.

புத்தம், சமணம், இசுலாம் என்று எல்லா சமயங்களை சேர்ந்தவர்களும் வணங்கியதற்காக சரித்திர சான்றுகள் உள்ளன. வைணவம், சைவம் என்ற பேதமில்லாமல் இக்கோயிலில் ஆராதனை நடைபெறுவது மற்றொரு சிறப்பு.

மூலவருக்கு, அணையா விளக்கு இத்தலத்தில் எரிந்து கொண்டே இருக்கும். மற்ற தலங்களில் நின்ற கோலத்தில் மட்டுமே காட்சி தரும் ஆண்டாள் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். பஞ்சாயுதம் (சங்கு, சக்கரம், கதை, வில், வாள்) தாங்கிய நிலையில் நின்ற திருக்கோலத்தில் பெருமாள் காட்சி தருகிறார்.

பாடியவர்கள்:

பெரியாழ்வார், ஆண்டாள், பேயாழ்வார், திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார், நம்மாழ்வார். மங்களாசாஸனம்

சிந்துரச் செம்பொடி போல் திருமாலிருஞ் சோலையெங்கும் இந்திர கோபங்களே எழுந்தும் பரந்திட்டனவால் மந்தரம் நாட்டி யன்று மதுரக் கொழுஞ் சாறு கொண்ட சுந்தரத் தோளுடையான் சுழலையினின் றுய்துங் கொலோ.

ஆண்டாள்

திருவிழா:

சி்த்திரைத் திருவிழா – 10 நாட்கள்.

ஆடிப் பெருந்திருவிழா – 13 நாள். ‌

ஐப்பசி தலை அருவி உற்சவம் – 3 நாள்.

இவை தவிர வைகுண்ட ஏகாதசி, கிருஷ்ண ஜெயந்தி, தீபாவளி, பொங்கல், தமிழ் ஆங்கில வருடப்பிறப்பின் போதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுவர். வாரத்தின் சனி ஞாயிற்று கிழமைகளில் கோயிலில் பக்தர்கள் கூட்டம் மிகவும் அதிகமாக இருக்கும். மாதந்தோறும் இக்கோயிலில் திருவிழாக்கள் நடந்த வண்ணம் இருப்பது மிகவும் சிறப்பானது.

பிரார்த்தனை:

இங்குள்ள அழகுமலையானை வணங்கினால் விவசாயச் செழிப்பு, வியாபார விருத்தி, புதிய ‌தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் ஆகியவை சாத்தியமாகும். மேலும் மழைவரம் வேண்டுவோர் இத்தலத்தில் பெருமா‌ளை வணங்கலாம். இவை தவிர பெரும்பாலும் குடும்ப நலம், கல்யாண வரம், குழந்தை வரம் ஆகியவற்றுக்காக பக்தர்கள் இங்கு வருகிறார்கள்.

நேர்த்திக்கடன்:

தங்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொடு்த்த அழகருக்கு பக்தர்கள் தங்கள் நேர்த்திகடனாக முடி காணிக்கை தருகின்றனர். எடைக்கு எடை நாணயம், எடைக்கு எடை தானியங்கள் ஆகியவற்றை தருகின்றனர். இத்தலத்தில் துலாபாரம் மிகவும் சிறப்பு. பெருமாளுக்கு தூய உலர்ந்த ஆடை சாத்தலாம். ஊதுவத்தி, வெண்ணெய், சிறு விளக்குகள், துளசி தளங்கள், பூக்கள் பூ‌மாலைகள் முதலியன படைக்கலாம். பிரசாதம் செய்து அழகருக்கு பூஜை செய்து பக்தர்களுக்கு கொடுக்கலாம். இது தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.

இருப்பிடம் :

மதுரையிலிருந்து 20 கி.மீ. தூரத்தில் அழகர் கோவில் உள்ளது.

அருகிலுள்ள ரயில் நிலையம் : மதுரை

அருகிலுள்ள விமான நிலையம் : மதுரை

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *