அருள்மிகு காளமேகப்பெருமாள் திருக்கோயில், திருமோகூர்
அருள்மிகு காளமேகப்பெருமாள் திருக்கோயில், திருமோகூர்-625 107, மதுரை மாவட்டம்.
+91- 452- 2423 444, 98654 17902 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். சனிக்கிழமைகளில் காலை 5.30 மணிக்கு திறக்கப்படும்.
மூலவர் | – | காளமேகப்பெருமாள் |
உற்சவர் | – | திருமோகூர் ஆப்தன் |
தாயார் | – | மோகனவல்லி |
தல விருட்சம் | – | வில்வம் |
தீர்த்தம் | – | தாளதாமரை புஷ்கரிணி, பாற்கடல் தீர்த்தம் |
ஆகமம்/பூசை | – | பாஞ்சராத்ரம் |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன் |
புராணப் பெயர் | – | மோகன க்ஷேத்ரம் |
ஊர் | – | திருமோகூர் |
மாவட்டம் | – | மதுரை |
மாநிலம் | – | தமிழ்நாடு |
யானை மலையின் நீளம் சுமார் 3 km. இந்த மலையின் முகப்பு யானையின் வடிவத்தை ஒத்துள்ளது.
பாற்கடலைக் கடைந்து எடுத்த அமுதத்தைப் பங்கிட்டுக் கொள்வதில் தேவர்கள், அசுரர்களுக்கிடையே சர்ச்சை உண்டானது. தங்களுக்கு உதவும்படி தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். அவர்களின் வேண்டுதலை ஏற்ற சுவாமி, மோகினி வேடத்தில் வந்தார். அசுரர்கள் அவரது அழகில் மயங்கியிருந்த வேளையில், தேவர்களுக்கு அமுதத்தைப் பரிமாறினார். இதனால் பலம் பெற்ற தேவர்கள், அசுரர்களை ஒடுக்கி வைத்தனர். பாற்கடலில் அமிர்தம் கடையும் போது அதிலிருந்து ஒரு துளி அமிர்தம் இக்கோயிலில் உள்ள குளத்தில் விழுந்ததால், இக்கோயில் குளத்திற்கு பெரிய திருப்பாற்கடல், சிறிய திருப்பாற்கடல் என்ற பெயர் உண்டானது.
பிற்காலத்தில் புலஸ்தியர் என்னும் முனிவர், மகாவிஷ்ணுவின் மோகினி வடிவத்தைத் தரிசிக்க வேண்டுமென விரும்பினார். சுவாமி, அவருக்கு அதே வடிவில் காட்சி தந்தார். அவரது வேண்டுகோள்படி பக்தர்களின் இதயத்தைக் கவரும் வகையில் மோகன வடிவத்துடன் இங்கே எழுந்தருளினார்.
காளமேகம் (கருமேகம்) நீரைத் தனக்குள் வைத்துக்கொண்டு, அதை மக்களுக்கு மழையாக பெய்விப்பதுபோல இத்தலத்தில் மகாவிஷ்ணு, அருள் என்னும் மழையை தருகிறார். எனவே இவர், “காளமேகப்பெருமாள்” என்று அழைக்கப்படுகிறார். பஞ்சாயுதங்களுடன் காட்சி தரும் இவர், மார்பில் சாளக்ராம மாலை அணிந்து, வலது கையால் தன் திருவடியைக் காட்டியபடி இருக்கிறார். இங்குள்ள உற்சவர், “ஆப்தன்” என்று அழைக்கப்படுகிறார். “நண்பன்” என்பது இதன் பொருள். தன்னை வழிபடுபவர்களுக்கு உற்ற நண்பனாகவும், அவர்களது இறுதிக்காலத்திற்கு பிறகு வழித்துணைவனாகவும் அருளுவதால், இவருக்கு இப்பெயர் ஏற்பட்டது.
“தூங்கிக்கொண்டிருப்பவரை எழுப்பலாம். ஆனால் தூங்குவது போல நடிப்பவரை எழுப்ப முடியாது” என்பர். இவ்வாறு தூங்குவது போல நடிப்பதை, “கள்ளத்தூக்கம்” என்பர். இத்தலத்தில் கள்ளத்தூக்க கோலத்தில், பெருமாளுக்கு சன்னதி இருக்கிறது. தேவர்கள், தங்களைக் காக்க மகாவிஷ்ணுவிடம் முறையிடச் சென்றபோது அவர், ஏதுமறியாதவர் போல சயனித்திருந்தாராம். தேவர்களுக்கு, சுவாமியின் நித்திரைக்கு இடையூறு இன்றியும், அதே சமயம் தங்களது குறையையும் சொல்ல வேண்டும் என்ற நிலையில், அவரை எழுப்ப விரும்பாத அவர்கள், ஸ்ரீதேவி, பூதேவியிடம் தாங்கள் வந்த நோக்கத்தைச் சொல்லிவிட்டு திரும்பிவிட்டனர். இப்போது தாயார்கள் இருவருக்கும், தேவர்களின் வேண்டுதலை சுவாமியிடம் சொல்ல வேண்டும். அதேசமயம் அவரது நித்திரையைக் கலைக்கக்கூடாது என்ற நிலை. எனவே, அவர்களிருவரும் மனதிற்குள் வேண்டிக்கொள்ளவே, மகாவிஷ்ணு கருணையுடன் கண்திறந்து, மோகினி வடிவில் சென்று தேவர்களுக்கு அருள்புரிந்தார். இந்த நிகழ்வின் அடிப்படையில் இங்கு பெருமாளுக்கு சன்னதி அமைக்கப்பட்டிருக்கிறது. இவர் வலது கையை தலைக்கு வைத்து சயனித்திருக்கிறார். பாதத்திற்கு அருகில் தாயார்கள் இருவரும் கைகளை தாழ்த்தி வைத்து, பிரார்த்தனை செய்யும் கோலத்தில் காட்சி தருகின்றனர். இவருக்கு, “பிரார்த்தனை சயனப்பெருமாள்” என்று பெயர். இந்த சன்னதிக்கு கீழே திருப்பாற்கடல் தீர்த்தம் இருப்பதாக ஐதீகம். பாற்கடலின் ஒரு துளி இதில் விழுந்ததால் இப்பெயரில் அழைக்கப்படுகிறது.
நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகிய இரு ஆழ்வார்களும் இத்தலப் பெருமாளை மங்களாசாசனம் செய்துள்ளனர். அழகர்கோவில் கள்ளழகரையும், திருமோகூர்ப் பெருமாளையும் இணைத்து, “சீராறும் மாலிருஞ்சோலை திருமோகூர்” என்று திருமங்கையாழ்வார் பாடியுள்ளார். நம்மாழ்வார், இறைவனை சரணாகதியடைய வேண்டிப் பாடிய திருவாய்மொழியில், இத்தலம் பற்றி பாடியுள்ளார். இங்கு வேண்டிக்கொள்ள மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. எனவே சுவாமிக்கு, “மோட்சம் தரும் பெருமாள்” என்றும் பெயருண்டு.
பெருமாள், பெண் வடிவம் எடுத்த தலமென்பதால், அவருக்கு மரியாதை தரும்விதமாக தாயார் மோகனவல்லி, சன்னதியை விட்டு வெளியேறுவதில்லை. இவளுக்கென விழாவும் கிடையாது. இவளது சன்னதியில் சடாரி சேவை, தீர்த்த பிரசாதமும் தரப்படுவதில்லை. நவராத்திரியின்போது மட்டும் விசேஷ பூஜை செய்கின்றனர். பங்குனி உத்திரத்தன்று சுவாமி, தாயார் சன்னதிக்கு எழுந்தருளி, சேர்த்தியாகக் காட்சி தருகிறார். இந்த வைபவம் மூன்று மணி நேரம் மட்டுமே நடக்கும்.
மோகனவல்லித் தாயார், சன்னதியை விட்டு வெளியேறுவதில்லை என்பதால், சுவாமியுடன் ஆண்டாள் பிரதானமாக புறப்பாடாகிறாள். வைகாசி பிரம்மோத்சவத்தில் காளமேகப்பெருமாள், ஆண்டாளின் மாலையை அணிந்தபடி, சேர்த்தியாக காட்சி தருவார். பங்குனி உத்திரம், அதற்கு மறுநாள் நடக்கும் தெப்பத்திருவிழா, மார்கழி 28 ஆகிய நாட்களிலும் சுவாமியுடன், ஆண்டாளை தரிசிக்கலாம். வைகாசி பிரம்மோத்சவத்தின் எட்டாம் நாள், மாசி மகம் ஆகிய நாட்களில் மோகினி வடிவில் சுவாமி காட்சி தருவார். மாசி மகத்தன்று சுவாமி, ஒத்தக்கடை நரசிம்மர் கோயிலுக்குச் செல்கிறார். அங்கு அவருக்கு மோகினி வடிவில் அலங்காரம் செய்து, சடை பின்னி, எண்ணெய் தடவி, தைலக்காப்பு செய்கின்றனர். அன்று நள்ளிரவில் சுவாமி, கருட வாகனத்தில் எழுந்தருளி, கஜேந்திரனுக்கு மோட்சம் கொடுக்கும் வைபவம் நடக்கும்.
சிவ பூஜைக்கு உகந்த வில்வம், அவருக்கான தலங்களில் மட்டுமே பிரதான விருட்சமாக இருக்கும். ஆனால், பெருமாள் தலமான இங்கும் வில்வமே, தல விருட்சமாக இருக்கிறது. தாயார் மோகனவல்லிக்கும், வில்வ இலை அர்ச்சனை செய்யப்படுகிறது. பித்ருக்களுக்கு திதி, தர்ப்பணம் செய்பவர்கள், செய்ய மறந்தவர்கள் காளமேகப்பெருமாளை வேண்டி, அரிசி மாவில் செய்த தீபத்தில், நெய் விட்டு தீபமேற்றி வழிபடுகின்றனர். இதை “மோட்ச தீபம்” என்பர். 3, 5, 9 என்ற எண்ணிக்கையில் இந்த தீபம் ஏற்றலாம். சுவாமி சன்னதியில் தரும் தீர்த்தத்தைப் பெற்றுச்சென்று, உயிர் பிரியும் நிலையில் இருப்பவர்களுக்குப் புகட்டுகிறார்கள். இதனால், அவர்கள் அமைதியான மரணத்தைச் சந்திப்பர் என்பதுடன், மோட்சமும் பெறுவர் என்பது நம்பிக்கை.
சக்கரத்தாழ்வார் சிலையின் மேல் பகுதியில், மடியில் இரணியனை கிடத்தி சம்ஹாரம் செய்யும் நரசிம்மரும், கீழ் பகுதியில் லட்சுமி வராகரும் காட்சி தருகின்றனர். இவரது திருநட்சத்திர தினமான ஆனி சித்திரையில், விசேஷ ஹோமம் செய்து, எண்ணெய் காப்பிடுகின்றனர்.
சக்கரத்தாழ்வாருக்கு பின்புறமுள்ள நரசிம்மர், நான்கு கரங்களிலும் சக்கரத்துடன் காட்சி தருகிறார். சங்கு இல்லை. தற்போது சக்கரத்தாழ்வார் சன்னதியில் தங்க விமானம் அமைக்கும் திருப்பணி நடந்து வருகிறது.
கோயில் முன்மண்டபத்தில் எதிரெதிரே மன்மதன், இரதி சிற்பங்கள் தூண்களில் வடிக்கப்பட்டுள்ளன. அழகில்லாத காரணத்தால் திருமணம் தடைபடுபவர்களும், அழகில்லை என வருந்துபவர்களும் இவர்களிடம் வேண்டிக்கொள்கிறார்கள். ஆண்கள் மன்மதனுக்கும், பெண்கள் இரதிக்கும் சந்தனம் பூசி, நெய் தீபம் ஏற்றி, கல்கண்டு படைத்து வழிபடுகிறார்கள்.
மகாவிஷ்ணு, மோகினி வடிவில் காட்சி தந்த தலமென்பதால் இதற்கு, “மோகன க்ஷேத்ரம்” என்றும், சுவாமிக்கு, “பெண்ணாகி இன்னமுதன்” என்றும் பெயர் உண்டு. திருமோகூர் ஆப்தன், சுடர்கொள்ஜோதி, மரகதமணித்தடன், குடமாடுகூத்தன் என்பது பிற திருநாமங்கள்.
வைகாசி பிரம்மோற்ஸவத்தில் தினமும் சுவாமியுடன், நம்மாழ்வார் காட்சி தருகிறார். ராகு, கேது தோஷ நிவர்த்திக்கு, பிரகாரத்திலுள்ள விநாயகர் சன்னதியில், ராகு காலத்தில் தீபமேற்றி வழிபடுகிறார்கள்.
இங்கு மோட்சதீப வழிபாடு சிறப்பு பெற்றது.
இத்தலத்தில் புராதனமான சக்கரத்தாழ்வார் சன்னதி உள்ளது. இவருக்கான உற்சவர் சிலையில் 154 மந்திரங்களும், மூலவர் சிலையில் மந்திரங்களுக்குரிய 48 அதி தேவதைகளும் பொறிக்கப்பட்டுள்ளன. பதினாறு கைகளில் ஆயுதங்களுடன் காட்சி தரும் இவர், அக்னி கிரீடத்துடன், ஓடி வரும் நிலையில் காட்சி தருகிறார்.
பாடியவர்கள்:
நம்மாழ்வார் மங்களாசாசனம்
நாமடைந்தால் நல்லரண் நமக்கென்று நல்லமரர் தீமை செய்யும் வல்லசுரரை அஞ்சிச் சென்றடைந்தால் காமரூபங் கொண்டு எழுந்தளிப்பான் திருமோகூர் நாமமே நவின்று எண்ணுமின் ஏத்துமின் நமர்காள்!
–நம்மாழ்வார்
திருவிழா:
வைகாசியில் பிரம்மோத்சவம், ஆனியில் சக்கரத்தாழ்வார் திருநட்சத்திரம், வைகுண்ட ஏகாதசி, பங்குனி உத்திரத்தில் திருக்கல்யாணம்.
பிரார்த்தனை
முன்னோர்களுக்கு முக்தி கிடைக்க, செய்யும் செயல்கள் வெற்றி பெற இங்கு வேண்டிக்கொள்ளலாம்.
நேர்த்திக்கடன்:
சுவாமிக்கு அபிஷேகம் செய்வித்து, சர்க்கரைப்பொங்கல் நைவேத்யம் படைத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள்.
வழிகாட்டி:
மதுரை, மேலூர் வழித்தடத்தில் மதுரையிலிருந்து 10 km தொலைவில், இந்த அழகிய காளமேகப் பெருமாள் வீற்றிருக்கும் திருமோகூர் அமைந்துள்ளது. மதுரை மாட்டுத் தாவணி பேருந்து நிலையத்திலிருந்தும், பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்தும் நிறைய பேருந்துகள் இங்கே செல்கின்றன. மதுரையிலிருந்து ஒத்தக்கடை சென்று, அங்கிருந்து ஆட்டோவிலும் இந்த கோயிலுக்கு செல்லலாம்.
மாட்டுத் தாவணி பேருந்து நிலையத்திலிருந்து 7 km தொலைவிலும், பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து 15 km தொலைவிலும், யானைமலை ஒத்தைக்கடை என்னும் ஊரில் இருந்து 2 km தொலைவிலும் அமைந்துள்ளது இந்த திருமோகூர் திருத்தலம்.
அருகிலுள்ள ரயில் நிலையம் : மதுரை
அருகிலுள்ள விமான நிலையம் : மதுரை
தங்கும் வசதி : மதுரை
Leave a Reply