அருள்மிகு விளக்கொளி பெருமாள் திருக்கோயில், தூப்புல்

அருள்மிகு விளக்கொளி பெருமாள் திருக்கோயில், தூப்புல், காஞ்சிபுரம்-631501.

+91- 98944 43108 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7.30 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் விளக்கொளி பெருமாள் (தீபப்பிரகாசர், திவ்யபிரகாசர்)
தாயார் மரகதவல்லி
தீர்த்தம் சரஸ்வதி தீர்த்தம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருத்தண்கா, தூப்புல்
ஊர் காஞ்சிபுரம்
மாவட்டம் காஞ்சிபுரம்
மாநிலம் தமிழ்நாடு

படைப்பின் நாயகன் பிரம்மா தனக்கு பூலோகத்தில் கோயில் ஏதும் இல்லை என்ற காரணத்தால் வருத்தப்பட்டு, சிவனை நோக்கி பிரம்மாண்ட யாகம் ஒன்றை நடத்தினார். ஆனால், அந்த யாகத்திற்கு தன் மனைவி சரஸ்வதி தேவியை அழைக்கவில்லை. கோபம் கொண்ட சரஸ்வதி,” பிரம்மா நடத்தும் யாகம், வெளிச்சம் இல்லாமல் இருண்டு போய் தடைபடட்டும்எனச் சாபம் இட்டாள். பிரம்மா காக்கும் கடவுள் விஷ்ணுவிடம், தனது யாகம் தடைபடமால் இருக்க வேண்டினார். விஷ்ணுவும் பிரம்மனின் கோரிக்கையை ஏற்று ஜோதி வடிவில் காட்சி தந்து, பிரம்மனின் யாகம் சிறப்பாக நடக்க அருள்புரிந்தார். இதனால் தான் இங்குள்ள பெருமாள் விளக்கொளி பெருமாள்என்றும் தீபப்பிரகாசர்என்றும் அழைக்கப்படுகிறார். சரஸ்வதியையும் சமாதானம் செய்தார்.

காஞ்சிபுரம் விளக்கொளிபெருமாள் கோயில், பெருமாளின் திவ்யதேசங்கள் 108ல் ஒன்று. சரஸ்வதி தேவிக்கு இத்தலத்தில் பெருமாள் காட்சி தந்துள்ளார். தர்ப்பைப்புல் வளர்ந்த பகுதியாக இருந்த காட்டில் திருமால் காட்சி தந்ததால் இப்பகுதி தூப்புல்எனவும் திருத்தண்காஎனவும் அழைக்கப்படுகிறது. ஆச்சாரியரான வேதாந்த தேசிகன்இங்கு அவதாரம் செய்ததால் அவர் தூப்புல் வேதாந்த தேசிகன்என அழைக்கப்பட்டார். திருமங்கை யாழ்வாரால் 2 பாசுரங்களில் இத்தலம் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது.

வைணவ ஆச்சாரியரான இவரது தாய் தனக்கு குழந்தை வரம் வேண்டி, பெருமாளை வேண்டினார். இவரது வேண்டுதலை ஏற்ற திருப்பதி பெருமாள் தனது கையிலிருக்கும் மணியையே இவருக்கு குழந்தையாக பிறக்கும்படி அருள்பாலித்தார். இதனால் தான் இன்றும் கூட திருப்பதி கோயிலில் பூஜையின் போது மணி அடிப்பதில்லை என்றும் கூறுவார்கள். 1268ம் ஆண்டு தோன்றிய வேதாந்த தேசிகன் 1369 வரை நூறாண்டுகளுக்கு மேல் வாழ்ந்து கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினார். பல நூல்களை வட மொழியிலிருந்து மொழி பெயர்த் தார். அத்துடன் காஞ்சி வரதராஜப் பெருமாள் மீது அடைக்கலப்பத்துஎன்ற பாமாலையைப் பாடினார். இவரது புதல்வர் நயின வரதாச்சாரியார் என்பவர் இந்தப் பெருமாள் கோயிலை முழுவதுமாக கட்டி முடித்தார் என்றும் கூறுவார்கள். கோயிலுக்குள் தாயார் சன்னதி அருகில் வேதாந்த தேசிகனுக்கு தனி சன்னதி உள்ளது. தேசிகன் வணங்கிய இலட்சுமி ஹயக்கிரீவர் விக்ரகம் இன்றும் உள்ளது. சித்திரை ரேவதி நட்சத்திரத்தில் இவருக்கு அவதார உற்சவம் சிறப்பாக நடக்கிறது.

இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம்ஸ்ரீகர விமானம் எனப்படுகிறது. இலட்சுமி, ஹயக்கிரீவர், ஆண்டாள், தீபப்பிரகாசர், ஆழ்வார்கள், கருடன், வேதாந்த தேசிகர் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர்.

பாடியவர்கள்:

திருமங்கையாழ்வார் மங்களாசாஸனம்

முளைக்கதிரை குறுங்குடியுள் முகிலை மூவா மூவுலகும் கடந்தப்பால் முதலாய் நின்ற அளப்பரிய ஆரமுதை அரங்கம் மேய அந்தணனை அந்தணர்தம் சிந்தையானை விளக்கொளியை மரகதத்தை திருத்தண்காவில் வெஃகாவில் திருமாலைப் பாடக் கேட்டு வளர்த்ததனால் பயன்பெற்றேன் வருக என்று மடக்கிளியைக் கைகூப்பி வணங்கினாளே.

திருமங்கையாழ்வார்

திருவிழா:

வைகாசி மாதம் காஞ்சி வரதராஜப்பெருமாள் இத்தலத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி வேதாந்த தேசிகனுக்கு காட்சி கொடுக்கும் விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதத்தில் விளக்கொளிப் பெருமாள் தேசிகர் சன்னதிக்கு புறப்பட்டு செல்வதும், மார்கழி, சித்ரா பவுர்ணமியில் வரதராஜப்பெருமாள் எழுந்தருளி தேசிகனுக்கு மரியாதை செய்வதையும் காணலாம்.

பிரார்த்தனை:

கல்வியில் சிறந்த விளங்கவும், குழந்தை வரம் வேண்டியும் இங்குள்ள இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியதும் பெருமாளுக்கும் தாயாருக்கும் திருமஞ்சனம் செய்து, புது வஸ்திரம் சாத்தி வழிபாடு செய்கின்றனர்.

வழிகாட்டி:

காஞ்சிபுரம் பஸ்ஸ்டாண்டிலிருந்து ஒரு கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது.

அருகிலுள்ள ரயில் நிலையம் : காஞ்சிபுரம்

அருகிலுள்ள விமான நிலையம் : சென்னை

தங்கும் வசதி : காஞ்சிபுரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *