அருள்மிகு காட்கரையப்பன் (வாமனர்) திருக்கோயில், திருக்காக்கரை

அருள்மிகு காட்கரையப்பன் (வாமனர்) திருக்கோயில், திருக்காக்கரை-683 028, எர்ணாகுளம் மாவட்டம் கேரளா மாநிலம்

காலை 5 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் காட்கரையப்பன் (அப்பன்)
தாயார் பெருஞ்செல்வநாயகி, வாத்ஸல்யவல்லி
தீர்த்தம் கபில தீர்த்தம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் திருக்காக்கரை
மாவட்டம் எர்ணாகுளம்
மாநிலம் கேரளா

மகாபலிச்சக்கரவர்த்தி என்பவன் கேட்டவர்க்கு கேட்டதை எல்லாம் கொடுப்பவன். இவன் அசுர குலத்தில் பிறந்தாலும் மிகவும் நல்லவன். ஆனால் ஒரே ஒரு இடத்தில் மட்டும் இடறி விட்டான். தர்மம் செய்வதில் தன்னை விட தலை சிறந்தவர் யாருமில்லை என்ற அகந்தை அவனிடம் ஏற்பட்டு விட்டது. நல்லவனிடத்தில் அகந்தை ஏற்பட்டால் ஆபத்து. இதை உணர்ந்த மகாவிஷ்ணு அதை வளரவிடாமல் தடுக்கவே வாமனராக(குள்ள) வடிவெடுத்து வந்தார்.


விஷ்ணு, மகாபலியிடம் மூன்றடி நிலம் கேட்டார். தாங்கள் குள்ளமானவர். உங்கள் காலுக்கு மூன்றடி நிலம் கேட்கிறீர்களே. அது எதற்கும் பயன்படாதே என்றான் மகாபலி. அவனது குல குரு சுக்ராச்சாரியார், வந்திருப்பது மகாவிஷ்ணு என்பதை அறிந்து தானம் கொடுப்பதை தடுத்தார்.

கேட்டவர்க்கு இல்லை என்று சொன்னால், இதுவரை செய்த தானம் பலனில்லாமல் போய்விடும் என நினைத்தான் மகாபலி. எனவே சம்மதித்தான். பெருமாள் விஸ்வரூபம் எடுத்தார்.

ஓரடியால் பூமியையும், இன்னொரு அடியால் ஆகாயத்தையும் அளந்த பெருமாள், மூன்றாவது அடிக்கு நிலம் எங்கே? எனக் கேட்டார். அகந்தை கொண்டிருந்த மகாபலி பணிந்து தலைவணங்கி நின்றான். “பகவானே, இதோ என் தலை. இதைத்தவிர என்னிடம் வேறெதுவும் இல்லைஎன்றான். பெருமாள் அவனை அப்படியே பூமியில் அழுத்தி, தன்னோடு இணைத்து கொண்டார்.

கேரளத்தில் பழமை வாய்ந்த கோயில் இது. தமிழ் கல்வெட்டுக்கள் இங்கு உள்ளது. தமிழக மக்களுக்கு ஒரு காலத்தில் இது வழிபாட்டுத் தலமாக இருந்துள்ளது. கி.பி. 9 முதல் 12 ம் நூற்றாண்டு வரை சேர மன்னர்கள் இத்தலத்தைப் பிரபலமாக்கியுள்ளனர். 1825ல் திருவிதாங்கூர் அரசு இக்கோயிலை எடுத்துக்கொண்டது. 1948ல் புனர்பிரதிஷ்டை நடந்துள்ளது. இருந்தாலும் இன்றும் புதுப்பொலிவுடன் விளங்குகிறது.

கோயிலுக்கு வெளியே தனி சன்னதியில் தேவி பகவதி, சாஸ்தா, சுந்தர யக்க்ஷி, கோபால கிருஷ்ணன், நாகர் ஆகியோர் உள்ளனர். இக்கோயிலை பரசுராமர் நிறுவியுள்ளார்.

மகாபலி சிறந்த சிவபக்தன். அவன் வழிபாடு செய்ததாக சொல்லப்படும் லிங்கம் இங்கு இருக்கிறது. இந்த வகையில் சைவ, வைணவர்கள் இரு தரப்பினரும் இங்கு வழிபாடு செய்கின்றனர்.

பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று. இக்கோயிலின் நுழைவு வாயிலில் மகாபலியின் ஆஸ்தானம் இருந்துள்ளது. இந்த இடத்தில் தற்போது ஒரு சிம்மாசனம் அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இவ்விடத்தில் விளக்கேற்றி மகாபலியை வழிபடுகின்றனர். கேரளபாணியில் ஓடு வேய்ந்த வட்ட வடிவ கோயில் இது. முகப்பில் உள்ள மண்டபத்தில் பெருமாள் வாமனராக, குள்ள வடிவம் எடுத்து வரும் காட்சி மரத்தில் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. மூலஸ்தானத்தில் வாமன மூர்த்தி அருள்பாலிக்கிறார். இவரை மக்கள் திருக்காக்கரை அப்பன் என செல்லப் பெயரிட்டு அழைக்கிறார்கள்.

நம்மாழ்வார் மங்களாசாஸனம்

நீர்மையால் நெஞ்சம் வஞ்சித்துப் புகுந்து என்னை ஈர்மை செய்து என்னுயிராய் என்னுயிருண்டான் சீர்மல்கு சோலை தென் காட்கரை யென்னப்பன் கார்முகில் வண்ணன்தன் கள்வம் அறிகிலேனே.

நம்மாழ்வார்

திருவிழா:

ஆவணி மாதம் அஸ்தம் நட்சத்திரத்தில் திருவோண உற்சவம் நடக்கும். ஒரு காலத்தில் 28 நாள் திருவிழா நடந்துள்ளது. இப்போது பத்து நாள் திருவிழா நடக்கிறது.

பிரார்த்தனை:

கோரிக்கைகள் நிறைவேறவும், ஞானம் வேண்டியும் இங்கு பிரார்த்தனை செய்து கொள்கின்றனர்.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியதும் திருக்காக்கரை அப்பனுக்கு பால் பாயாசம் வைத்து, அதையே பிரசாதமாக விநியோகித்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

வழிகாட்டி:

எர்ணாகுளத்திலிருந்து 20 கி.மீ. தொலைவில் திருக்காக்கரை அமைந்துள்ளது. அடிக்கடி பஸ் வசதி உள்ளது.

அருகிலுள்ள ரயில் நிலையம் : எர்ணாகுளம்

அருகிலுள்ள விமான நிலையம் : கொச்சி

தங்கும் வசதி :

எர்ணாகுளத்தில் உள்ள விடுதிகளில் தங்கி, கோயிலுக்குச் சென்று வரலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *