அருள்மிகு பத்ரிநாத் கோவில், பத்ரிநாத்
அருள்மிகு பத்ரிநாத் கோவில், பத்ரிநாத், உத்தராகண்ட்
மூலவர் | – | பத்ரி நாராயணன் |
தாயார் | – | அரவிந்தவல்லி / மஹாலக்ஷ்மி |
தல விருட்சம் | – | பதரி (இலந்தை மரம்) |
தீர்த்தம் | – | தப்த குண்டம் |
விமானம் | – | தப்த காஞ்சன விமானம் |
மாநிலம் | – | உத்ராஞ்சல் |
உத்தராகண்ட் ராஜ்யத்தில் – எழில்மிக்க ரம்யமான மலைச்சிகரங்களுக்கு நடுவில், நீலகண்ட சிகரத்தின் பக்கத்தில் – நர நாராயண பர்வதத்தின் மடியில், பவித்திரமான அலக்நந்தா நதிக்கரையில் பத்ரிநாத் – மேலும் கேதார்நாத் மலைச் சிகரங்களின் மத்தியில், கேதார்நாத் ஆகிய இரண்டு தீர்த்த ஸ்தானங்களும் / புண்ய க்ஷேத்ரங்களும், வெகுகாலமாக கடவுள் பற்றுள்ள பக்தர்களை கவர்ந்து வருகிறது.
பண்டைய காலத்திலிருந்தே நம் தேசத்தின் பல் வேறு திசைகளிலிருந்தும், பக்தியால் உந்தப்பட்டு மிகுந்த உற்சாகத்தோடு, பத்ரி நாராயணனை தரிசனம் செய்யப் பாத யாத்திரையாகவே பத்ரி சென்றடைகின்றனர். பகவானை தரிசனம் செய்து மன நிறைவும், அமைதியும் பெறுகிறார்கள். இது சம்பந்தமாக அவர்களின் கடுமையான முயற்சி போற்றத் தக்கதாகும். வணக்கத்திற்குரியதாகும்.
சனாதனமான, பெரும் புகழ் வாய்ந்த கலாசாரத்தின் நிலையான நம்பிக்கையின் சின்னமாக, ஸ்ரீபத்ரிநாத் / பத்ரிகாச்ரமத்தைத்தவிர, ஸ்ரீகேதார்நாத், கங்கோத்ரீ (கங்கையின் உற்பத்தி ஸ்தானம்), மேலும் யமுனோத்ரி (யமுனையின் உற்பத்தி ஸ்தானம்) ஆகிய 4திவ்ய ஷேத்திரங்கள் இமயத்தில், உத்தராஞ்சலில் உள்ளன. இதில் பத்ரிநாத் முதன்மையாக விளங்குகிறது. இதனால் புனிதமான இந்த க்ஷேத்திரம் தேவபூமி என்ற பெயருடன் வணங்கப்பட்டு வருகிறது.
ஸ்கந்த புராணத்தில் கூறப்பட்டுள்ள படி (முதல் யுகம்) சத்ய யுகத்தின் ஆரம்ப காலத்தில் பகவான் ஸ்ரீமந் நாராயணன் தானே உலக நலத்திற்காகவும், பக்தர்களுக்கு தனது திவ்ய தரிசனத்தை சுலபமாக்கி அனுக்கிரகிக்க, பத்ரிநாத் / பத்ரிகாச்ரமத்தில் (உத்தராகண்ட் – சமோலி மாவட்டம்) அர்ச்சாரூபமாக எழுந் தருளியுள்ளார். பத்ரி நாத் க்ஷேத்ரம் – ரிஷீகேசிலிருந்து 300கி.மீ.(பஸ் மார்க்கத்தில்) உள்ளது. உயரம் 10,350அடி.
ஆழ்வார்கள் பாடல் பெற்ற 108திவ்ய க்ஷேத்ரங்களில் 3க்ஷேத்ரங்கள் இமாலய மலைச்சாரலில் (உத்தராஞ்சல்) உள்ளன.
1. பத்ரிநாத் – பத்ரிகாச்ரமம்
2. திருப்பிருதி (ஜோதிர்மட்)
3. திருக்கண்டங் கடிநகர் (தேவப்ரயாக், ஸ்ரீகண்ட க்ஷேத்ரம்)
வட நாட்டில் ஆழ்வார் பாடல் பெற்ற 9திவ்ய க்ஷேத்ரங்கள் உள்ளன.
1. உத்தராஞ்சல் (3 – திவ்ய க்ஷேத்ரங்கள்)
2. உத்திரபிரதேசம் (4 – திவ்ய க்ஷேத்ரங்கள்)
3. குஜராத் (1 – திவ்ய க்ஷேத்ரம்)
4. நேபால் (1 – திவ்ய க்ஷேத்ரம்)
உத்தராஞ்சல் (நிலப்பரப்புப் பகுதி) முன்பு உத்தரப் பிரதேசத்தின் அங்கமாக இருந்தது. பரப்பளவு கிட்டத்தட்ட 50ஆயிரம் கி.மீ. ஜனத்தொகை 60லக்ஷத்திற்கு மேல் என கூறப்படுகிறது. இரண்டு மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்கள் மலைப்பகுதியில் உள்ளன.
இமாலய மலைப்பகுதியான கந்தமாதன மலையின் மத்தியில், அலக்நந்தா நதிக்கரையில் பத்ரிநாத் அமைந்துள்ளது. குளுமை மிக்க அழகான கந்தமாதன மலைத் தொடரில், நர நாராயணர்கள் தவம் புரிந்த காரணத்தினால், இந்த மலைத் தொடரின் பெயர் நர நாராயண பர்வதம் (மலை) என்றும் விளங்குகிறது. கோயிலுக்கு நாற்புறமும் பனிமலைகளும், எதிரே நாராயண மலையும், வலப்புறத்தில் நீலகண்ட மலையும் உள்ளன.
இந்துக்கள் தன் வாழ்நாட்களில் ஒரு முறையாவது மேற்கண்ட திவ்ய க்ஷேத்ரங்களுக்கு புனித யாத்திரை செய்து, பகவானை தரிசித்து அருளைப் பெற மிக்க ஆவல் உள்ளவர்களாக இருக்கிறார்கள். இவை புண்ய க்ஷேத்ரமாகவும், முக்தி க்ஷேத்ரமாகவும் விளங்குகின்றன.
ஸ்ரீமத் பாகவத புராணத்தில் பகவான் கண்ணன், பத்ரிகாசிரமத்தை தனது ஆச்ரமமாகக் குறிப்பிட்டுக் கூறி தனது அன்பான தோழன் உத்தவரை அங்கு சென்று, தனது தலைசிறந்த திருவடி தீர்த்தமான அலக்நந்தாவின் புனித தீர்த்தத்தால் மேலும் புனிதமடைய உபதேசித்தார்.
இங்கு பகவான் (கோயில்), பாகவத புருஷர்கள், புண்ய தீர்த்தம் ஆகிய எல்லா மகிமைகளும் போற்றப்படுகின்றன.
உத்தராஞ்சல் மாவட்ட மலைச்சிகரங்களில் உற்பத்தியாகும் ஆறுகள், அருவிகள், புஷ்கரிணி ஆகியவைகள் புனிதமானவை. இது தவம் புரியத் த்குதியான இடம்.
கந்தமாதன பர்வதம் உள்ள பகுதியில்தான், பகவான் நாராயணனே மனிதனுக்கு, ”அஷ்டாக்ஷர மந்திரம்” எனும் மூல மந்திரத்தை உபதேசம் செய்தார். இதனால் இந்த இடம் “அஷ்டாக்ஷர க்ஷேத்திரம்” என்றும் கூறப்படுகிறது.
இந்தப் பத்ரி வனத்தில், மணிபத்ரபூர் (மாணாக்ராம்) மாணாகிராமத்தில் ஒரு குகையில் அமர்ந்து பூஜ்ய பகவான் பாதராயண வியாசர் மகாபாரத புராணத்தை இயற்றினார். இது வியாச குகைக்கு எதிரில் உள்ளது.
இலந்தைப்பழம் சம்ஸ்கிருதத்தில் பதரி என்று சொல்லப்படுகிறது.
புராணங்களில் 9 ஆரணியங்கள்(வனங்கள் –காடுகள்) கூறப்படுகின்றன.
பத்ரிகாரண்யத்தில் , பதரி – இலந்தை மரப்புதர்கள் இருக்கின்றன. அதில் இலந்தை போன்ற பழங்கள் விளைகின்றன. இந்தப் புதர்கள் இங்குள்ள மிகக் குளிர்ந்த காற்று, ஜலம் ஆகியவைகளை தாங்க சக்தி உடையவையாக இருக்கின்றன.
பத்ரிநாத்தில் தவம் புரிந்த பல தவசிகளின் பெயரில் அனேக குகைகளும், அருவிகளும், ஆறுகளும், புஷ்கரிணிகளும் உள்ளன.
இலக்குமி சொரூபமான இலந்தை(பதரி) மரத்தின் கீழ் அமைந்த ஆசிரமத்தில் நாராயணன் எழுந்தருளியிருந்ததால் பத்ரிநாத் என்று வணங்கப்படுகிறார்.
எல்லா யுகங்களிலும், அவ்வப்பொழுது நல்லவைகளைக் காக்க பகவான் இந்த உலகத்தில் அவதாரம் எடுக்கிறார். பத்ரிநாத்தில் ஸ்ரீமந்நாராயணன் தானே எழுந்தருளித் தவம் புரிந்த தலம் என்பது புராண வரலாறு.
பின் வந்த யுகத்தில், பகவான் கிருஷ்ணன் – அர்ஜுனனாகவும் அவதரித்தார்கள்.
காலப்போக்கில் பகவானின் தரிசனத்திற்காக பிரம்மா உட்பட பல முனிவர்கள் பகவானை வேண்டினார்கள். அப்பொழுது பகவான், அசரீரி வாவிலாக,”வரப்போகும் கலியுகத்தில் பாசஉணர்வு இல்லாத கல்நெஞ்சம் கொண்ட பெரும்பாலான மக்கள் எனது தரிசனம் பெற இயலாதவர்களாக இருப்பார்கள். அப்போது, நாரத குண்டம்(நீர் நிலை) – அலக்நந்தாவில் இருக்கும் எனது பாஷாண மூர்த்தியை அங்கிருந்து எடுத்து வந்து, பிரதிஷ்டை செய்யுங்கள். என்னைத் தரிசிக்க விரும்பும் பக்தி சிரத்தை மிகுந்த பக்தர்களுக்குக் காட்சி தருவேன்” கூறினார். பகவானின் உத்திரவின்படி பிரம்மா முதலிய தேவர்கள், அலக்நந்தா நாரத குண்டத்தில் இருந்த பகவானின் திவ்ய மங்கள மூர்த்தியை (விக்ரகம்) வெளியில் எடுத்து, பத்ரிநாத்தில் ப்ரதிஷ்டை செய்தனர். பிரதிஷ்டை செய்யப்பட்டு, அன்று முதல் தேவர்களாலும், மனிதர்களாலும் பகவான் பத்ரிநாத் ஆராதிக்கப்பட்டு வருகிறார். இப்படி பத்ரிநாத்தில் வழிபாடு துவங்கியது.
கொஞ்ச காலம் கழித்து, புத்தர் அவதரித்தார். அவர் மூலம் பௌத்த மதம் ஆரம்பிக்கப்பட்டு வளர்க்கப்பட்டது. அவர் உருவ வழிபாட்டை ஒப்புக்கொள்ளவில்லை. அந்த சமயம் அவரைப் பின்பற்றுபவர்களான பௌத்த பிக்ஷுக்கள் கோவிலில் இருந்த பத்ரி நாராயண மூர்த்தி விக்ரகத்தை எடுத்து நாரதகுண்டத்தில் (அலக்நந்தா) போட்டுவிட்டனர்.
பின்னர், காலடி கிராமத்தில் ஜகத்குரு சங்கராசாரியார் அவதரித்தார். சனாதன தர்மத்தின் வளர்ச்சியின் பொருட்டு, தேசம் முழுவதும் பிரசாரத்திற்காக பாத யாத்திரை செய்து பத்ரிநாத் அடைந்தார்.
காலடி, இந்தியாவின் தென்கோடியில் உள்ளது. பத்ரிநாத் பாரதத்தின் வடஎல்லையில் உள்ளது. வெகு நாட்களுக்கு முன்பு, பக்தர்களால், ஆராதிக்கப் பட்ட பகவான் நாராயணனின் விக்ரஹம் (சாளக் கிராமமூர்த்தி) நாரத குண்டத்தில் இருக்கிறது என்பதை ஸ்ரீசங்கரர் அறிந்தார்.
அவர் நாராயணின் மூர்த்தியை நாரத குண்டத்திலிருந்து வெளியில் எடுத்து, மறுபடியும் பத்ரியில், முன்னர் இருந்தபடி கோயிலில் பிரதிஷ்டை செய்தார். பின்னர் தற்போதுள்ள இடத்தில் காஞ்சிபுரம் வரதாசாரியார் என்பவர் இந்தக் கோவிலை புணர் நிர்மாணம் செய்தார்.
தற்சமயம் ஆதி ஜகத்குரு சங்கராசாரியார் அவர்களால் பரம்பரையாக ஏற்படுத்தப்பட்ட ஆராதன முறைப்படி, நம்பூதிரிகளால் மூலம் பகவான் ஆராதனை செய்யப்பட்டு வருகிறது.
பத்ரிநாத் சென்று அடைந்து பக்தர்கள் – கோயிலின் ராஜகோபுரம் முன்பு இருக்கும் தப்த குண்டத்தில், நீராடி, மேலும் நித்தியக் கடன்களை முடித்துக் கொண்டு, சிம்ம துவாரத்தில் இருக்கும் கருட பகவானை தரிசித்துவிட்டு, பத்ரி விசால் பகவானை தரிசிக்க, கோவிலின் பிரகாரத்தை அடைகின்றனர். தப்தகுண்டத்தின் நீர் எப்பொழுதும் இதமான சூடாக உள்ளது. இது பத்ரி யாத்ரிகர்களுக்கு பகவானின் அனுக்கிரகம். இந்தக் குளிர்ந்த இடத்திலும் பக்தர்கள் குளித்து, பூசை செய்ய வசதியாக அமைந்துள்ளது.
கோயிலின் கருவறையில் எழுந்தருளி இருக்கும் சிலை பகவானாகவே வணங்கப்படுகிறார். பத்ரிநாத் பகவானின் மூர்த்தி சுயம்பு. தினந்தோறும் சூரிய உதயத்திற்கு முன்பு, அபிஷேகத்தின் சமயம், பூஜை, அபிஷேகம் செய்யும் நம்பூதிரி சாலக்கிராம சிலையிலான மூல மூர்த்திக்கு ஆரத்தி செய்து, ஒவ்வொரு அங்கத்தையும் தரிசனம் செய்து வைத்து விளக்கம் அளிக்கிறார்.
பத்ரிகாச்ரம புராணத்தில் “பஞ்ச பத்ரி” (5பத்ரி க்ஷேத்ரங் கள்) குறிப்பிடப்பட்டுள்ளன.
1. யோகபத்ரி, 2. வ்ருத்தபத்ரி, 3. த்யானபத்ரி, 4. தபோ பத்ரி (பத்ரி விசால்), 5. பவிஷ்ய பத்ரி
பத்ரிநாத் பகவான் (மூலமூர்த்தி – சாளக் கிராம சிலை) பத்மாசனத்தில் அமர்ந்து, தரிசனம் அளிக்கிறார். பகவானின் ஜடா மண்டல் (ஜடை விழுது) மேலும் கம்புக்ரீவா (மூன்று கீறுள்ள கழுத்து) நன்றாகக் காணப்படுகிறது. பகவானின் நான்கு கரங்கள் தெரியும். சங்கு சக்ர கதாதாரியாக சதுர்புஜ பகவான் பத்ரிநாராயணன் மார்பில் ஸ்ரீவத்ஸ சின்னத்துடன் (விஷ்ணு) நாராயண சொரூபமாக சேவை சாதிக்கிறார்.
பகவானின் கருவறையில், உற்சவமூர்த்தி, நாரதர், தனாதிபதி குபேரர், மேலும் கருட பகவானின் விக்ரகங்களையும், சுதர்சன சக்கரம், சரணபாதுகை முதலியவைகளையும் தரிசிக்கிறோம். பத்ரிநாராயணனின் இடது பக்கத்தில் எப்பொழுதும் அகண்ட ஜோதி – நந்தா தீபம் எரிந்து கொண்டே இருக்கிறது. (குளிர்காலத்தில் கோயில் கதவுகள் மூடப் பட்டிருக்கும் 6மாதகால சமயத்திலும் இந்த தீபம் எரிந்துகொண்டு இருக்கும்).
தெற்குப் பிரகார ஆரம்பத்தில் அனுமான் சந்நிதிக்குப் பிறகு வடக்கு நோக்கியுள்ள மகாலக்ஷ்மி சந்நிதியில், மகாலக்ஷ்மி (அரவிந்த வல்லித்தாயார்) தரிசனம் அளிக்கிறாள்.
மே மாதம் (சித்திரை மாதம், அக்ஷய திருதியை மறுநாள்) கோயில் கதவுகள் திறந்தது முதல், நவம்பர் மாதம் (ஐப்பசி– தீபாவளி) மூடப்படும்வரை, இங்கு நித்ய ஆராதனம் நடை பெறுகிறது. கோயிலின் கதவுகள் மூடப்பட்டிருக்கும் (குளிர்காலம்) சமயத்தில் மகாலக்ஷ்மியின் ஸ்ரீமூர்த்தியை கோயிலின் கருவறையில் எழுந்தருளச் செய்கிறார்கள். கோயில் கதவுகள் திறந்த பின் (மே மாதம்) எப்பொழுதும்போல் மகாலக்ஷ்மி தாயார், தனது சந்நிதியில் எழுந்தருளி அருள் பாலிக்கிறார். நித்ய ஆராதனை நடைபெறுகிறது. பிராகாரத்தில் ஆதிசங்கரருக்குத் தனி சந்நிதி உள்ளது. அப்படியே வந்து கோயிலின் முகமண்டபம் வாசல் வழியாக, சோபா மண்டபம், தரிசன மண்டபம் அடைந்து மூலவரை, பத்ரிநாராயணனை தரிசிக்கிறோம்.
குளிர்காலத்தில், சுமார் 6மாத காலத்திற்கு கோயிலின் கதவுகள் மூடப்பட்டிருக்கும். இந்தக் காலத்தில் பத்ரிநாராயணனின் உற்சவ மூர்த்தியை, பாண்டுகேச்வர் – ஜோதிர்மட் (ஜோஷீமட்) கோயிலுக்கு எழுந்தருளச் செய்து, அங்கு கிரமப்படி நித்ய ஆராதனை நடை பெறுகிறது. மறுபடியும் அக்ஷய திருதியைக்கு மறுநாள், கோயில் கதவுகள் திறக்கப்படுகின்றன. பத்ரிவிசால் கோயிலில் இந்த 6மாத காலம் தேவர்கள் ஆராதனம் செய்கிறார்கள் என்று நம்பப்படுகிறது.
தரிசன நேரம் : காலை 5.00மணி முதல் 6.00வரை அபிஷேகம் – தரிசனம் – பக்த யாத்ரிகர்கள் அபிஷேக தரிசனம் செய்யலாம். காலை 9.00மணி – பாலபோக் (காலசந்தி)
முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்தபின், பிண்டப் பிரதானம் அளிக்க கோயிலில் பிரசாதம் வாங்கிக் கொண்டு கோயிலுக்கு சிறிது வடக்கே அலக்நந்தா நதிக்கரையில், பிரம்ம கபால தீர்த்தம்(பிரம்ம கபாலம் என்ற பாறை) சென்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் முதலிய பித்ரு கர்மாக்கள் செய்து பிண்டப்பிரதானம் அளிக்கிறார்கள். இது மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது. பிரம்ம கபாலம் பிரம்மாவின் புனிதத் தலம் என்று கூறப்படுகிறது.
மதியம் 12.00 – ராஜபோக் (உச்சிகாலம்)
இதற்குப் பிறகு மதியம் 3.00மணிவரை சந்நிதிக் கதவு மூடப்பட்டிருக்கும்.
மாலை 3.00மணிக்கு சந்நிதி திறக்கப்படும். இரவு 9.00மணிவரை தரிசனம் செய்யலாம். உரிய கட்டணம் செலுத்தி அர்ச்சனை, கற்பூர ஆரத்தி முதலியன செய்யலாம்.
மாலை தரிசனத்தின் சமயம் கற்பூர ஆரத்தி, (தீப ஆராதனை) ரஜத (வெள்ளி) ஆரத்தி தரிசனம் செய்யலாம்.
இரவு 9.00மணிக்கு சயன ஆரத்தி சேவிக்கலாம். ஆரத்தி (தீப ஆராதனை) சமயத்தில் பகவானின் தரிசனம் செய்வது பெரும் பாக்கியமாகக் கருதப்படுகிறது.
கோயிலின் பின்புறம் இலட்சுமி நரசிம்ம மந்திரில் (தனிக் கோயில்), ஸ்வாமிதேசிகன், ஸ்ரீமத் ராமானுஜர் மேலும் இலட்சுமி நரசிம்மன் சந்நிதிகள் உள்ளன.
பத்ரிநாத் க்ஷேத்திரத்தில் பஞ்ச தீர்த்தங்கள் : விவரம்
1. தப்த குண்டம் : இது வஹ்நி தீர்த்தம் என்றும் கூறப்படுகிறது. இது அக்னியின் வாசஸ்தானம்.
2. பிரகலாத குண்டம் : தப்த குண்டம் பக்கத்தில் பிரகலாத குண்டம் (தாரா) அமைந்துள்ளது. இதில் ஒரு பகுதியில் மிக வெப்பமான நீர் உள்ளது.
3. நாரத குண்டம் : தப்த குண்டம் பக்கம் அலக்நந்தா நதிக் கரையில், நாரத குண்டம் உள்ளது. ஒரு பாறைப்பகுதியின் மறைவில், பாறையின் ஆதாரத்தைக் கொண்டு பக்தர்கள் வசதியாக பயமில்லாமல் ஸ்நானம் செய்யலாம்.
4. கூர்ம தாரா : ஒரு குளிர்ந்த நீர்த்தாரையின் (அருவி) பெயர் கூர்ம தாரா. கூர்மாவதார காலத்தில் நாரதர் இந்த நீர்த்தாரையில் ஸ்நானம் செய்து விஷ்ணு பகவானை ஆராதித்தாக வரலாறு.
5. ரிஷிகங்கா : இந்த தீர்த்தம் (நதி) நீலகண்ட மலையின் பள்ளத்தாக்கில் பெருகிப் பாய்ந்து அலக் நந்தாவில் சங்கமம் ஆகிறது.
பத்ரிநாத் க்ஷேத்ரத்திலிருந்து 25கி.மீ. தூரத்தில் ஸத்யபத் புஷ்கரிணி உள்ளது. (14,440அடி உயரம்) இதற்கு அப்பால் சோம குண்டம், சூர்ய குண்டம் (விஷ்ணு குண்டம்) உள்ளன. இவைகளில் உள்ள நீர் வெப்பமுடையது. இதைத்தவிர இந்தப் பகுதியில் பல புண்ய நீர்நிலைகள் உள்ளன.
ஐந்து சிலைகள்
1. நாரத சிலை : தப்த குண்டம் – நாரத குண்டத்திற்கு நடுவில் நாரத சிலை இருக்கிறது. குளிர்காலத்தில் நாரத மகரிஷி பத்ரி நாராயணனுக்கு ஆராதனை செய்கிறார் என்று நம்பப்படுகிறது.
2. வராக சிலை : வராக சிலை, நாரத சிலை பக்கத்தில் அலக்நந்தா நதிக் கரையில் உள்ளது. வராக பகவான் இந்த இடத்தில்தான் பத்ரிநாத் பகவானை ஆராதித்தார் என்று நம்பப்படுகிறது.
3. கருட சிலை : கருட சிலை ஆகியவை கேதாரீச்வர் மந்திரின் அருகாமையில் உள்ளது. கருடன் தனது மாதாவை, அடிமை வேலையிலிருந்து விடுவித்து, இங்கு விஷ்ணு பகவானின் வாகனமாக உள்ளார் என்று கூறப்படுகிறது.
4. மார்கண்டேய சிலை : தப்தகுண்டத்தின் கீழ் பாகத்தில் மார்க்கண்டேய சிலை உள்ளது. மார்க்கண்டேய முனிவர் இங்கு தவம் செய்ததாகக் கூறப்படுகிறது.
மார்க்கண்டேய சிலைக்குப் பக்கத்தில் நரசிம்ம பகவான் சிலை உள்ளது. இரண்யகசிபுவை வதம் செய்த பிறகு, ரிஷிகளின் ப்ரார்த்தனையை ஏற்று பகவான் நரசிம்மன் இங்கு தனது நிறைவான தரிசனம் அளித்தார்.
தரிசிக்க வேண்டிய முக்கிய இடங்கள்
நந்தாதேவி மந்திர், சேஷ நேத்ரம், சேஷ தாரா, ப்ருகுதாரா, மாதா மூர்த்தி மந்திர், வஸோதாரா மேலும் லக்ஷ்மீ வனம், ப்ருஹ்ம நதி, ஸரஸ்வதி – அலக்நந்தா புனித சங்கமம், கேசவ ப்ரயாக் முக்கியமானவை.
பத்ரிநாத் அருகில் ரிஷிகங்கையின் வலது பக்கத்தில், லீலாதகீ (சிலாகண்டம்) நந்தாதேவி கோயில், மேலும் நீலகண்ட மலைக்குக் கீழே, மூன்று கி.மீ. தூரத்தில் சரண பாதுகை உள்ளது. இங்கு (கல்லில் செதுக்கப்பட்ட) பகவானின் சரணபாதுகையை தரிசனம் செய்யலாம்.
அலக்நந்தாவின் அக்கரையில், கொஞ்ச தூரத்தில், சேஷ நேத்ரம் உள்ளது. ஒரு கல்லின்மேல் பாகத்தில் சேஷநாகத்தின் கண்களும், மறுபக்கத்தில் சரண பாதுகையும் காணப்படுகின்றன.
பத்ரிநாத் க்ஷேத்ரத்திலிருந்து 3கி.மீ. தூரத்தில் உள்ள வியாச குகை, கணேச குகை, பீமர் பாலம் முதலியவை முக்கியமான புனித இடங்கள்.
பத்ரிநாத்திலிருந்து சுமார் 10கி.மீ. தூரத்தில் வசோதாராவும், இதைத் தாண்டி லக்ஷ்மீ வனம் உள்ளது. இதற்கு அப்பால் சகஸ்ரதாரா, பஞ்சதாரா, துவாதசாதித்ய, சதுஸ்ரோத், தீர்த்தங்கள் தாண்டி, சக்ர தீர்த்தம் உள்ளது. சக்ர தீர்த்தத்தைக் கடந்து, பத்ரிநாத் க்ஷேத்ரத்திலிருந்து 25கி.மீ. தூரத்தில் ஸத்யபத் மேலும் ஸதோபந்த் என்ற பெயருடைய தீர்த்தங்கள் உள்ளன.
சுமார் 3 – 4கி.மீ. தொலைவில் மாணா கிராமம் பகுதியில் பத்ரி நாத்தினுடைய மாதாவின் கோயில் (மாதா மூர்த்தி) உள்ளது. மாணா கிராமத்திற்குப் பக்கத்தில் மாணா கணவாய் வழியாக திபத் செல்லும் வழி உள்ளது. மாணா கிராமத்திற்கு கொஞ்சம் கீழே சரஸ்வதி நதி ஓடுகிறது. சரஸ்வதி நதிக்கரை – வேத சாத்திரங்களில் கலாசார மையமாகக் கருதப்படுகிறது.
அலக்நந்தா – சரஸ்வதி நதியின் சங்கம ஸ்தானம், கேசவ ப்ரயாக் என்று அழைக்கப்படுகிறது. வசிஷ்ட முனிவரும், விசுவாமித்ர முனிவரும் இந்த புனித இடத்தில் தவம் புரிந்ததாகவும், மேலும் வேத ருக்குக்களை கண்டதாகவும் கூறப்படுகிறது.
கோவிந்த காட் (மலைத்தொடர்)
ஜோஷிமட் – பத்ரீநாத் பஸ் தடத்தில், ஜோஷீமடத்தி லிருந்து 20கி.மீ. தொலைவில் (அலக்நந்தா நதிக்கரை) குருகோவிந்தஸிங் பெயரில் (அவரது ஞாபகார்த்தமாக) கோவிந்தகாட் (மலைத்தொடர்) அமைந்துள்ளது.
குரு கோவிந்தஸிங் பூர்வஜன்மத்தில் இங்கு தவம் செய்ததாகக் கூறப்படுகிறது. ராவண யுத்தத்திற்குப் பிறகு இலட்சுமணன் இங்கு தவம் புரிந்ததாகவும், அதன் ஞாபகார்த்தமாக லோகபால் மந்திர் (கோயில்) நிர்மாணிக்கப்பட்டது என்று நம்பப்படுகிறது.
ஹேமகுண்ட் சாஹிப்பிற்கும் (கங்காரியா) புஷ்பப் பள்ளத் தாக்கிற்கும் இங்கிருந்துதான் கால்நடையாகச் செல்லவேண்டும். கங்காரியா வரை (15கி.மீ.) இரண்டு இடத்திற்கும் செல்ல ஒரே பாதைதான். இங்கு ஹேமகுண்ட சாஹிப் குருத்வாரா உள்ளது. இந்தப் புனித இடம் இந்துக்கள், சீக்கியர்கள் இருவருக்கும் புண்ய க்ஷேத்ரமாக விளங்குகிறது.
கங்காரியாவிலிருந்து வேறு வழியில் 4கி.மீ. கால்நடை யாகச் சென்று 10கி.மீ. நீளம், 2கி.மீ. அகலமுள்ள புஷ்பப் பள்ளத்தாக்கை அடையலாம். இந்தப் பகுதி தெய்வீக இயற்கை அழகுடன் விளங்குகிறது.
கண்ணுக்கு எட்டியவரை வண்ண வண்ணமான பலவித அழகான வன மலர்களின் வரிசை கண்களுக்கு குளிர்ச்சியையும், மனநிறைவையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது. ஜூலை – ஆகஸ்ட் மாதங்கள் பூக்கள் மலரும் சமயம்.
விருத்த பத்ரி – ஜோதிர்மடம் – பீபல்கோட் பஸ் சாலையில் ஜோதிர்மட்டிலிருந்து 10கி.மீ. தொலைவில் அனீமடம் என்று கூறப்படும் புராதனமான தீர்த்த ஸ்தலம் உள்ளது.
அலக்நந்தாவின் அழகான பள்ளத்தாக்கில், இது நாரத முனிவருக்கு மிகவும் விருப்பமான இடம். இங்குதான் நாரதர் தவம் செய்தார் என்பதும் அவருக்கு அங்கு ஸ்ரீமந்நாராயணன் தரிசனம் கொடுத்ததும் புராண வரலாறு. ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இது பிரசித்தமான தீர்த்தம். நாரதர்தான் இந்தக் கோவிலுக்கு அடிகோலினார் என்றும், ஆதிசங்கராசாரியாரும் இங்கு பூஜைகள் செய்தார் என்றும் கூறப்படுகிறது.
த்யான பத்ரி : பீபல்கோட் – ஜோஷிமடம் பஸ் மார்க்கத்தில் ஹைலாங் கிராமத்தின் பஸ் நிற்கும் இடத்தில் இருந்து 11கி.மீ. கால்நடையாகச் சென்று ஊர்கம் – கிராமத்தை அடையலாம். அங்கு ஊர்வா ரிஷியின் தபோபூமி உள்ளது. இங்கு உள்ள விஷ்ணு மந்திரில் பத்ரிநாராயணன் தியானத்தில் அமர்ந்த நிலையில் தரிசனம் அளிக்கிறார்.
யோகபத்ரி : (ஜோஷிமட் – பாண்டுகேச்வர்) ஜோஷிமட் பத்ரிநாத் – பஸ் மார்க்கத்தில், அலக்நந்தா நதிக்கரையில் பாண்டு கேச்வரர் புண்ய க்ஷேத்ரத்தில், பாண்டுவினால் நிர்மாணிக்கப்பட்ட யோக தியான மந்திர் அமைந்துள்ளது. கோயில் கருவறையில் யோக த்யானீ பகவான் தாமரை புஷ்பத்தில் அமர்ந்த நிலையில், அழகாக தரிசனம் அளிக்கிறார். குளிர்காலத்தில் பத்ரிநாத் பகவானின் கோயில் கதவுகள் மூடப்பட்டதும், சுமார் 6மாத காலத்திற்கு பத்ரிநாத் பகவானின் உற்சவ மூர்த்தி இங்கு எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.
சிலர் த்யான பத்ரி – யோக பத்ரி இரண்டையும் ஒரே க்ஷேத்திரமாகக் கூறுகிறார்கள். இவர்கள் ஆதிபத்ரி என்ற ஒரு க்ஷேத்திரத்தையும் கூறுகிறார்கள். கர்ண ப்ரயாக் க்ஷேத்திரத்திலிருந்து ராணிகேத் பஸ் மார்க்கத்தில் சிம்லீ கிராமம் உள்ளது. சிம்லீயிலிருந்து 11கி.மீ. நடைபாதையாக ஆதிபத்ரி சென்றடையலாம்.
பவிஷ்யபத்ரி : ஜோஷிமட் – மலாரி பஸ் தடத்தில் 15கி.மீ. தொலைவில் தபோவன் உள்ளது. இங்கிருந்து 4கி.மீ. கால்நடையாகச் சென்று ஸுபாயீ கிராமத்தை அடையலாம். இங்கு சமுத்திர மட்டத்திலிருந்து 9,000அடி உயரத்தில் பவிஷ்ய பத்ரி கோயில் உள்ளது. அகஸ்திய முனிவர் இங்கு தவம் செய்ததாக புராண வரலாறு கூறுகிறது. இவருக்கு இங்கு ஸ்ரீமந்நாராயணன் தரிசனம் அளித்தார். அது சமயம் அவரிடம் கலியுகத்தில் தான் இங்கு கோயில் கொள்ளப்போவதாகக் கூறினார் என்று நம்பப்படுகிறது.
வரும் காலத்தில், இயற்கையின் சீற்றத்தின் காரணமாக மக்கள் பத்ரிநாத் சென்று அடைவது இயலாது போகுமெனவும், அது சமயம் பத்ரிநாராயணன், பவிஷ்ய பத்ரியில் எழுந்தருளி பூஜைகளை ஏற்று அருள்பாலிப்பார் என்று கூறப்படுகிறது.
“சுவர்க்கம், பூமி, பாதாள லோகத்தில் அனேக திவ்ய க்ஷேத்ரங்கள் / தீர்த்த ஸ்தானங்கள் உள்ளன. ஆனால் பத்ரி திவ்ய க்ஷேத்ரத்துக்கு சமமாக, கடந்த காலத்திலும் இருக்கவில்லை. இனி வருங்காலத்திலும் இருக்கப் போவதில்லை.”
Leave a Reply