அருள்மிகு தன்வந்திரி திருக்கோயில், வாலாஜாபேட்டை

அருள்மிகு தன்வந்திரி திருக்கோயில், வாலாஜாபேட்டை, வேலூர் மாவட்டம்.

தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது அண்டமே பிரமிக்கும் வண்ணம் ஜோதி ஒன்று எழுந்தது. அந்த ஜோதியில் உதித்த மகாபுருஷர் தான் தன்வந்திரி என்ற தெய்வீக மருத்துவர். கற்பனைக்கு எட்டாத அழகுடன், திருக்கரங்களில் சங்கு, சக்கரம், அட்டைப்பூச்சி, அமிர்தகலசம் ஆகியவற்றை ஏந்தி நின்றார். மருத்துவக் கலையின் முதல்வரான இவரை வேண்டியே தேவர்கள் அமரவாழ்வைப் பெற்றனர். மனிதர்களுக்கு நோய்நொடிகள் அவரவர் கர்மவினைப்படி வந்து தான் தீரும். இதிலிருந்து நம்மை தன்வந்திரி வழிபாடு ஒன்றே காப்பாற்றவல்லது. இவரை வழிபட்டால் நோய்நொடிகள் நீங்குவதோடு ஆரோக்கியமும் உண்டாகும்.

தன்வந்திரி இந்து மதத்தில் வழிபடப்படும் கடவுள் வடிவங்களுள் ஒன்றாகும். தன்வந்திரியை முதல் மருத்துவர் என்று நம்புகின்றார்கள் இந்துக்கள். விஷ்ணுவின் அவதாரமாக கருதப்படும் இந்த வடிவம், தசாவதாரத்திற்குள் சேர்வதில்லை. பெரும் புகழ்வாய்ந்த விஷ்ணு கோவில்களில் மட்டும் தனி சந்நிதியில் தன்வந்திரி காணப்படுகிறார்.

இந்த ஊரின் வரலாற்று பெயர் (historical name) வாலாஜாபேட்டை என்பது. ஆனால் பழைய பெயர் அகத்தீஸ்வரம் என்பதாகும். ஒரு சமயம் காஞ்சிபுரத்தில் சிவபெருமானின் திருக்கல்யாணத்தைப் பார்க்க, அகத்தியர், வசிஷ்டர், பரத்வாஜர், வால்மீகி, கௌசிகர், அக்னீஸ்வரர் என்று ஆறு முனிவர்கள் (ரிஷிகள்) வந்தனர். இவர்கள் வழியில் தங்கி பூஜை, அனுஷ்டானங்கள் செய்ய வேதவல்லி (பாலாறு) நதிக்கரையோரத்தைத் தேர்ந்தெடுத்தனர். வைத்தியரான அகத்தியரும், மற்ற முனிவர்களும் இறைவனை நினைத்து பூஜை செய்த இந்த இடத்தில் தேவமருத்துவரான ஸ்ரீதன்வந்திரியை அமரச் செய்துள்ளனர்.

இந்த ஆலயத்தில் கருவறையின்கீழ் 15 அடி ஆழத்தில் ஏழு அங்குலம் விட்டத்தில் செப்புக் குழாயின் நடுவின் ஏறத்தாழ 48 இலட்சம் பக்தர்களால் கைப்பட எழுதிய 54 கோடி மந்திரங்கள் 13 மொழிகளில் எழுதப்பெறப்பட்டு இயந்திரமாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இது ஓர் உலகச் சாதனையாகும். பக்தர்கள் கைப்பட எழுதிய இம்மகா மந்திரங்களுக் கஜபூஜை, கோபூஜை 1008 சுமங்கலி பூசை செய்து அமைக்கப்பட்டுள்ளது.

சென்னையிலிருந்து வேலூர் மார்க்கத்தில் உள்ள வாலாஜாபேட்டை பேருந்து நிலையத்திலிருந்து, சோளிங்கர் சாலையில் 3 கி.மீ. தூரத்தில் கீழ்ப்புதுப்பேட்டையில் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடம் அமைந்துள்ளது.

இந்த ஆரோக்கிய பீடம் சென்னையிலிருந்து மேற்கே 110 கி.மீ. தூரத்திலும், வேலூரிலிருந்து கிழக்கே 30 கி.மீ. தூரத்திலும், திருப்பதியிலிருந்து தெற்கே 110 கி.மீ. தூரத்திலும் திருவண்ணாமலையிலிருந்து வடக்கே 80 கி.மீ. தூரத்திலும் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *