அருள்மிகு வேணுகோபாலஸ்வாமி திருக்கோயில், இசையனூர்

அருள்மிகு வேணுகோபாலஸ்வாமி திருக்கோயில், இசையனூர், ஆற்காடு தாலுக்கா, வேலூர் மாவட்டம்.

கலியுகத்தில் முதற்பகுதியில் இருந்தவர் ஸ்யமந்தகர் எனும் மகரிஷி. அவரது மனைவி மானஸாதேவி. கண்ணனிடம் பரமபக்தி கொண்டவர். ஸ்ரீகிருஷ்ணனை இம்மகரிஷியும், அவரது மனைவியும் ஆராதிக்காமல் ஒருதுளி நீரும் பருகுவதில்லை. ஸ்ரீமத் பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம் ஆகியவற்றைத் தினமும் பாராயணம் செய்து, தங்கள் வாழ்நாளைக் கழித்து வந்தனர். எங்கெல்லாம் தனது அவதார காலத்தில் கண்ணன் லீலைகள் புரிந்தானோ, அந்தப் புண்ணிய சேத்திரங்கள் அனைத்தையும் மனைவியுடன் சென்று தரிசிப்பதில் ஆனந்தம் அடைந்து வந்தார் ஸ்யமந்தகர்.

கோகுலம், ஆயர்பாடி, மதுரா, பிருந்தாவனம், துவாரகை என்று எந்த இடங்களில் எல்லாம் கண்ணனின் திருவடிகள் பட்டிருக்குமோ அங்கெல்லாம் சென்று தரையிலும், மண்ணிலும் விழுந்து புரள்வார். கண்ணனின் திருவடிகள் எங்காவது பட்டிருக்கும்; அவ்விதம் அந்தப் பிரபுவின் திருவடிகள் பட்ட இடம் தனது உடலில் படவேண்டும் என்று புரண்டு வருவது வழக்கம். இந்த பிரம்மரிஷியின் ஸ்ரீகிருஷ்ண பக்தி நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.

பல திருத்தலங்களுக்குச் சென்று கண்ணனைத் தரிசித்து இன்புற்று வந்த ஸ்யமந்தகரும் அவரது மனைவியும் தங்களது யாத்திரைக் காலத்தில் ஒருசமயம் புனிதநதியான பாலாற்றின் தென்கரையில் திகழும் ஸ்ரீவேணுகோபாலனின் திருக்கோயிலுக்கு வந்தனர். கண்ணனின் திருக்கோயில் என்றால் அவரது உற்சாகத்திற்குக் கேட்கவேண்டுமா? தனது திருக்கரத்தில் குழலேந்தி அதனை இசைக்கும் பாவத்தில் சங்கு, சக்கர ஹஸ்தனாகப் பேரானந்த பேரழகுடன் ஜொலிக்கும் ஸ்ரீகண்ணனைக் கருவறையில் கண்டதும் தன்னையே மறந்துபோனார் ஸ்யமந்தகர். அவரது உள்ளத்தில் வெள்ளமெனப் பெருகியது தூயபக்தி. கருவறையினுள் ஓடிச் சென்று கண்ணனைக் கட்டியணைத்து அக்குழந்தையை முத்தமிட்டு ஆனந்தப் பட்டார். அப்போதுதான் அந்த ஆச்சரியம் நிகழ்ந்தது. கண்ணன் திருக்கரங்களில் இருந்த குழலிலிருந்து இனிமையான நாதம் ஒலித்தது.

அந்த வேணுகானத்தில் ஒலித்தது சதுர்வேதங்களா அல்லது மகரிஷிகளின் அதரங்களிலிருந்து வெளிப்படும் உபநிஷத் ஸ்லோகங்களா அல்லது ஈரேழு பதினான்கு உலகங்களையும் அந்த மோகன இசையினால் மயங்கச் செய்யும் மந்திரமா? தனக்கும் இத்தகைய ஒரு பாக்கியமா? கண்ணனே தன் பக்தியை ஏற்று திருவுள்ளம் உகந்து தனது குழலிசையைக் கேட்கும் பேற்றைத் தந்தருளினானா? கண்ணனின் கருணையை நினைத்துப் பேரானந்தம் அடைந்தார் ஸ்யமந்தகர். கண்ணன் குழல் கீதம் நீண்ட நேரம் அவர் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது. தன்னை மறந்து பரவசம் என்ற நிலையை அடைந்தார் கண்ணனின் பரம பக்தரான அம்மகரிஷி. கருவறையினுள் ஓடிச்சென்று எம்பெருமானின் ஒரு திருவடியை அவரும், மற்றொரு திருவடியை அவர் மனைவியும் பற்றிக்கொண்டு ஆனந்தக் கண்ணீர் உகுத்தனர்.அவர்களது கண்களிலிருந்து பெருகிய கண்ணீர் ஸ்ரீவேணுகோபாலனின் திருவடிகளை நனைத்தது.

கருணைக்கடலாம் கண்ணன், ஸ்யமந்தகரையும் அவரது மனைவியையும் தன்னுடன் இணைத்து முக்தி அளித்துத் திருவருள்புரிந்தார்.

இத்தகைய தெய்வீகப் பெருமைபெற்ற திருத்தலம்தான், காஞ்சியை அடுத்த திருப்பாற்கடலின் தென்கரையில் விளங்கும் ஸ்ரீருக்மிணி சமேத ஸ்ரீவேணுகோபாலப் பெருமான் திருக்கோயில் அமைந்திருக்கும் இசையனூர் ஆகும். ஸ்யமந்தக மகரிஷிக்கு வேணுகானம் இசைத்து அருள்புரிந்ததால் இச்சிற்றூர் இசையனூர் என்ற பெயரில் தெய்வீகப் பிரசித்தி பெற்றது. காஞ்சி காமகோடி பீடம் மகாப் பெரியவர் தரிசித்துப் பேரானந்தம் அடைந்து சிறப்பாகச் சிலாகித்து அருளிய திருக்கோயில் இது. இன்றும் சில தினங்களில் கருவறையிலிருந்து விடியற்காலை நேரத்தில் குழலோசை கேட்பதாகப் பெரியவர்கள் கூறுகின்றனர்.

கட்டட அமைப்பினையும், அற்புத கலைநயத்தையும் கண்டவுடனேயே கண்ணனின் இத்திருக்கோயில் பல்லவர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது தெரிகிறது. முன்மண்டபத்தின் இருபுறமும் படியேற்றம் உள்ளது. இவை இரண்டிலும் புராதனச் சிற்பக்கலையின் உயர்விற்குச் சான்றாக யாளிமுகச் சிற்பங்கள் விளங்குகின்றன. விமானத்தில் ஸ்ரீலட்சுமிநரசிம்மர், ஸ்ரீலட்சுமிஹயக்ரீவர், திருப்பாற்கடலில் பள்ளிகொண்டுள்ள ஸ்ரீலட்சுமிநாராயணன், ஸ்ரீவராகப் பெருமான், கீதோபதேசம் ஆகிய மூர்த்திகள் தரிசனமளிக்கின்றனர். இத்திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீசக்கரத்தாழ்வார் வியக்கத்தக்க நுட்பமான சிற்பக் கலை அம்சத்துடன் பிரகாசிக்கிறார். மத்தியில் சிங்கமுகத்துடன் சேவை சாதிப்பது இத்திருத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.

முகலாய மன்னர்கள் தென்பாரதம் மற்றும் தமிழகத்தின் மீதும் மூர்க்கவெறியுடன் படையெடுத்தபோது ஏராளமான நமது திருக்கோயில்கள் அழிக்கப்பட்டன. அப்போது பாதிக்கப்பட்ட திருக்கோயில்களில் இசையனூர் ஸ்ரீருக்மிணி, சத்யபாமா சமேத ஸ்ரீவேணுகோபாலனின் திருக்கோயிலும் ஒன்றாகும். சுமார் 750 ஆண்டுகளுக்கு முன் விஜயநகரத்தை வீரபுருஷர்களான ஹரிஹரரும், புக்கரும் ஸ்தாபித்தனர். அத்தகைய சாம்ராஜ்யத்தின் படைத்தலைவரான கம்பண்ணா என்ற மாவீரனால் திருவரங்கம், மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர், திருவானைக்காவல் போன்ற கோயில்கள் முகலாயர்களின் பிடியிலிருந்து மீட்கப்பட்டபோது இசையனூர் திருக்கோயிலும் புனர்நிர்மாணம் செய்யப்பட்டது.

மாவீரர்களான ஹரிஹரரும், புக்கரும் இப்பாரத புண்ணியபூமிக்கும், வேத தர்மத்திற்கும் ஆற்றிய இம்மாபெரும் பணிக்கு நன்றி செலுத்தும் பொருட்டு,இன்றும் இசையனூரில் நடைபெறும் எல்லா சுபநிகழ்ச்சிகளிலும் ஹரிஹரர், புக்கர் இருவருக்கும் அக்ரஹார சம்பாவனைஎன்று கூறி மரியாதை செய்வது எல்லோரும் கடைப்பிடித்து வரும் ஊர் சம்பிரதாயமாகும்.

திருவரங்கத்து ஸ்ரீரங்கநாதன் மீது ஆறாத அன்பும், தீராத காதலும் கொண்டவர் பிள்ளை பெருமாள் ஐயங்கார். பக்திப்பரவசத்தில் திருவரங்கத்து அந்தாதி பாடி, அரங்கனுக்குப் பாமாலை சூட்டிப் பார்த்து மகிழ்ந்த அடியவர் இவர். அதில்

(க்)குவித்தார் குழலால் அரங்கேசர்…” என்று பாடியுள்ளார்.

ஆக்குவித்தார்என்ற வார்த்தைக்கு, ஈரேழு பதினான்கு உலகங்களையும் படைத்தவன் அரங்கன் என்பது பொருள்.

கண்ணன், தனது குழலை இசைத்து, கோகுலத்து க்களை, அதாவது பசுக்களைக் குவித்தவன் என்பது பொருள்.

தெய்வக்குழந்தையான கண்ணன் சிறுவனாக இருந்தபோது, கோகுல சிறுவர்களுடன் மாடுகள், கன்றுகள் ஆகியவற்றுடன் யமுனைக் கரைக்குச்செல்வது வழக்கம். யமுனைக்கரையில் கண்ணன் மற்ற சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டிருப்பான். உணவு வேளை வந்தவுடன் தனது புல்லாங்குழலை எடுத்து, இனிமையான கீதம் படைப்பான். அந்த வேணுகானத்தின் இனிமையில் கட்டுண்டு எங்கோ மேய்ந்து கொண்டிருக்கும் ஏராளமான பசுக்களும், கன்றுக்குட்டிகளும், குழலோசை வந்த திசையை நோக்கி கண்ணனிடம் ஓடிவருவது வழக்கம். யமுனைக்கரையில் உள்ள ஏராளமான மலர்ச்செடிகளின் புஷ்பங்களில் தேனை உண்டு மயங்கிக் கிடக்கும் தேனீக்கள்கூடகண்ணன் குழலின் மதுர இசை நாதத்தைக் கேட்டு, தேன்சுவையும் மறந்து, கண்ணனை நோக்கிப் பறந்தோடிவருமாம்.

கண்ணன் குழலோசையின் அமுதகான இனிமையை `கிருஷ்ண கர்ணாம்ருதம்என்ற நூல் போற்றிப் புகழ்கிறது. `கண்ணனுக்கு எத்தனை பெருமை உண்டோ, அத்தனை பெருமை கண்ணனுடைய குழலுக்கும் உண்டுஎன்று சுகப்பிரம்மம் ஸ்ரீமத் பாகவதத்தில் வர்ணித்திருக்கிறார். கண்ணன் குழலினை இசைக்கும்போது, அந்த நாதத்தில் நான்கு வேதங்களும் ஒலிப்பதாக விதுரர் சொல்லியிருக்கிறார்.

ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் கண்ணனைப் பலவித தரிசனங்களில் பக்தர்கள் தரிசித்து அனுபவித்துள்ளனர். நவநீதகிருஷ்ணன், கோபாலகிருஷ்ணன், கோபிகாநாதன், காளியநர்தனன், கோவர்தன கிரிதாரி, மதுராநாதன், துவாரகதீசன், ராதாகிருஷ்ணன், பார்த்தசாரதி என்று ஏராளமான சேவைகள் இருப்பினும், லீலாசுகர், ஸ்ரீவேதாந்த தேசிகர் போன்ற மகான்கள் பக்திமயமான தங்கள் வாழ்வின் முழுப்பயனாக வேண்டுவது,”கண்ணா, நீ எங்கள் கடைசி மூச்சின்போது ஸ்ரீவேணுகோபாலனாகத் தரிசனமளிக்க வேண்டும். உயிர்பிரியும் அந்தச் சில விநாடிகளில் உயர்ந்து, சாய்ந்த மயில் பீலியையும், இன்னிசை பொழியும் உன் குழல் ஓசையையும் நீலமேக ஸ்யாமளனான உன் திருமேனியை மட்டும்தான் தரிசிக்க வேண்டுகிறோம்என்று வேண்டினர்.

இவ்விதம் மகான்களும், மகாபுருஷர்களும் ஆசைப்பட்ட பேரழகை இசையனூர் எம்பெருமானான ஸ்ரீ வேணுகோபாலனிடம் காணலாம். ஸ்ரீமத் அஹோபில மடத்தின் 15-ம் பட்டம் ஜீயர் ஸ்வாமிகள் இசையனூரில் அவதரித்த மகான்.

அளவற்ற சக்தி வாய்ந்த இத்திருக்கோயில் சந்நிதியை மெழுகி, சர்க்கரையினால் கோலமிட்டு வேண்டினால், திருமணத்தடைகள் நீங்கி நல்ல வரன் அமைவது கண்கண்ட அனுபவமாகும். மேலும் வியாபார அபிவிருத்தி, படிப்பு, உத்தியோகம் ஆகியவற்றில் முன்னேற்றம், வியாதி நிவர்த்தி, கடன் விமோசனம் என்று பக்தர்களின் வேண்டுகோள்களை உடனுக்குடன் நிறைவேற்றி வைப்பதால் வேண்டுவதைத் தரும் வேணுகோபாலப் பெருமான்என்று இசையனூர் திருத்தலம் பிரசித்தி பெற்றது.

மேலும் இத்திருக்கோயிலின் கிணற்றிலிருந்து மூன்று குடம் நீர் எடுத்து வந்து நீராடி அங்கப்பிரதட்சணம்செய்தால், கைவிடப்பட்ட பிரச்சினைகள்கூட நல்லபடியாகத் தீரும். மிகச் சிறந்த நவக்கிரக தோஷ பரிகாரத் திருத்தலமிது.

இரம்யமான சூழ்நிலையில் அமைந்துள்ள இந்த ஆலயத்தில் பெருமாள், உபயநாச்சியார், தாயார் ஆகியோருடன் கூட ஆண்டாள், சக்கரத்தாழ்வார், சந்தானகிருஷ்ணன், வரதன், விஷ்வக்சேனர், நம்மாழ்வார், ராமானுஜர், நிகமாந்த மகாதேசிகர் ஆகியோரின் சந்நிதிகளும் உள்ளன.

உயர்ந்த ஆசாரச்சீலர்களான பெரியோர்களால் இத்திருக்கோயில் ஆராதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.

முற்காலத்தில் இத்திருக்கோயிலில் நவராத்திரி உற்சவம், ஸ்ரீ ஜெயந்தி, உறியடி உற்சவம், மாட்டுப்பொங்கலன்று பரமாச்சார்யரால் நடத்தப்பட்ட உற்சவம், அத்யயன உற்சவம், ஆழ்வார்கள், ஆச்சார்யர்களின் திருநட்சத்திர வைபவங்கள் போன்ற பல உற்சவங்கள் சிறப்பாக நடந்துவந்தன. ஆனால், காலப்போக்கில் இவை நின்றுவிட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *