அருள்மிகு வராஹீஸ்வரர் திருக்கோயில், தாமல்
அருள்மிகு வராஹீஸ்வரர் திருக்கோயில், தாமல், காஞ்சீபுரம்
காஞ்சியிலும், அதனைச் சுற்றி அருகாமையில் உள்ள பல சிறிய ஊர்களிலும் மிகப் புராதனமான, பல அழகான திருக்கோயில்கள் உள்ளன. இவற்றில் பல திருக்கோயில்கள் கவனிப்பாரின்றி, சிதிலமடைந்து கிடக்கின்றன.
தாமல் சிற்றூரில் அமைந்துள்ள அருள்மிகு வராஹீஸ்வரர் திருக்கோயில் மிகவும் புராதனமானது மட்டுமல்ல, மிகவும் சக்தி வாய்ந்ததும்கூட.
ஸ்ரீ வராஹீஸ்வரர் சந்நிதி மேற்கு பார்த்த சந்நிதி. மூலவர் திருஉருவில் சங்கு, சக்கரம் இருபுறமும் அமைந்துள்ளன. தை மாதம் ரத சப்தமியன்று மூன்று நாட்கள் சூரியக் கதிர்கள் மூலவர் திருமேனியில் விழுவது அதிசயமிக்க நிகழ்ச்சி ஆகும்.
அம்பாள் திருநாமம் ஸ்ரீ கௌரி அம்பிகை. அம்பிகைக்குச் சிங்கமே வாகனமாகும். ஆனால், இங்கு யானை வாகனமாக அமைந்துள்ளது. உள்புற, வெளிப்புறத் தூண்களில் (8+8) பைரவர்கள் உள்ளனர். தேய்பிறை அஷ்டமியன்று அவர்களை வழிபடுவது நம் துயரங்கள் விலகுவதற்குச் சக்திவாய்ந்த பரிகாரமாகும்.
மிகவும் பழைமை வாய்ந்தது இத்திருக்கோயில். பல்லவ, சோழ விஜயநகர கலையம்சங்களுடன் விளங்கும் இத்திருக்கோயிலில், பல கல்வெட்டுகள் மூலவரைச் சுற்றியுள்ள பிராகாரத்தில் அமைந்துள்ளன.
இத்திருக்கோயிலின் நுழைவாயில் விஜய நகர பேரரசர்கள் காலத்தில் கட்டப்பட்டது. ஒரு காலத்தில் இந்தக்கோபுரம் ஐந்து நிலைகளுடன் விளங்கியுள்ளது. தற்போது, ராஜகோபுரம் பழுதடைந்து இடிந்துவிட்டது. தற்சமயம் மொட்டை கோபுரமாகக் காட்சியளிக்கிறது. அதன் கீழ்மட்டம் 40 அடி அகலமுடையது.
வழிகாட்டி: இத்திருக்கோயில் காஞ்சியிலிருந்து 16 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. காஞ்சியிலிருந்து தாமல் கிராமத்திற்கு நேரடி பஸ் வசதி உண்டு.
Leave a Reply