அருள்மிகு கோழிக்குத்தி வான முட்டிப்பெருமாள் திருக்கோயில், சோழன் பேட்டை

அருள்மிகு கோழிக்குத்தி வான முட்டிப்பெருமாள் திருக்கோயில், சோழன் பேட்டை கிராமம், மயிலாடுதுறை வட்டம், நாகை மாவட்டம்.

+91 4364 223395, 98424 23395 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 8.00 முதல் 12.00 – மாலை 4.30 முதல் 8.00 வரை சனிக்கிழமை காலை 7.00 முதல் 12.00 – மாலை 4.00 முதல் 8.00 வரை

மூலவர் ஸ்ரீவானமுட்டிப் பெருமாள் (ஸ்ரீனிவாச பெருமாள்)
தாயார் ஸ்ரீதயா லெட்சுமி
தீர்த்தம் விஸ்வரூபபுஷ்கரணி
புராணப் பெயர் கோடிஹத்தி
மாநிலம் தமிழ்நாடு

சோழநாட்டில் பிப்பலர் என்றொரு மகரிஷி வாழ்ந்து வந்தார். அவருக்கு திடீரென கடுமையான சரும நோய் ஏற்பட்டது. தாங்கமுடியாத சரும நோயினால் அவதிப்பட்ட பிப்பல மகரிஷி பெருமாளை நினைத்து, தனக்கு ஏற்பட்ட நோயிலிருந்து தன்னை விடுவிக்கும்படி வேண்டினார். ஒருநாள் பிப்பல மகரிஷின் கனவில் தோன்றிய பெருமாள், அவரிடம்,”முன் ஜென்மத்தில் நீ அரசனாக இருந்தாய். அப்போது, ஒரு உயிரிழப்பிற்குக் காரணமாக இருந்திருக்கிறாய். அதன் காரணமாக இந்த ஜென்மத்தில் சரும நோயால் பாதிக்கப் பட்டுள்ளாய்எனவும் அந்த பாவம் தீர, காவிரிக் கரையோரமாகவே உனது பயணத்தைத் தொடங்குஎனப் பெருமாள் கூறினார். மூவலூரில் குடிகொண்டுள்ள ஸ்ரீமார்க்கசகாயேசுவரர் பிப்பல மகரிஷிக்கு வழிகாட்டுவார் எனவும் கூறினார். அந்த வழிகாட்டுதலின் படி நடக்க மகரிஷியின் சரும நோய் தீரும் என அருளினார் பெருமாள்.

பெருமாளின் அறிவுரையின்படி, மகரிஷி பிப்பலர் தனது பயணத்தை ஸ்ரீமார்க்கசகாயேசுவரரை முதலில் தரிசித்துத் தொடங்கினார். மனம் குளிர்ந்த சிவபிரான் வடக்குப் பக்கமாக வழி காட்டினார். அவர் காட்டிய வழியில் சென்று காவிரி நதியில் நீராடி, கோழிக்குத்தி எனும் ஊரை வந்தடைந்தார். அப்போது ஒரு நெடிய, நீண்டு வளர்ந்த அத்திமரத்தில் ஸ்ரீசீனிவாசப் பெருமாள் பிப்பல மகரிஷிக்கு விஸ்வரூப தரிசனம் தந்தார். விஸ்வரூப தரிசனத்தை நேரில் கண்ட மகரிஷிக்கு மெய் சிலிர்த்தது.


இப்படியோர் அற்புத தரிசனத்தைக் கண்டதும் மகரிஷியின் சரும நோய் அவரிடமிருந்து நீங்கிவிட்டது. அதே நேரத்தில் மூவலூர் ஸ்ரீமார்க்கசகாயேசுவரரின் முன்பாக வீற்றிருக்கும் நந்தி பகவானும் மகரிஷிக்கு அருள் மழை பொழிந்தார்.

பிப்பல மகரிஷியின் சரும நோய் நீங்குவதற்காக மூவலூர் சிவபிரான் இந்த திசை நோக்கிச் செல் என்று கோடி காட்டியதால் கோடிஹத்தி என்ற பெயர் வழங்கலாயிற்று. பிப்பல மகரிஷியின் கோடி தோஷங்கள் நீங்கப் பெற்றதால் கோடிஹத்தி, பாப விமோசனபுரம் எனவும் அழைக்கப் படுகிறது. கோடிஹத்தி என்ற பெயரே கோழிக்குத்தி என்று மருவியது. ஆகையால் இத்தல பெருமானை தரிசிக்க நாம் அறிந்தும், அறியாமலும் செய்த பாவங்கள் விலகும் என்பது நம்பிக்கை.

தனது சரும நோய் நீங்கப் பெற்ற பிப்பலர் மகரிஷி காவிரிக் கரையில் தவம் புரியலானார். இதன் காரணமாகவே இக்கோயிலை ஒட்டி ஓடும் காவிரித் தீர்த்தத்தை பிப்பலர் மகரிஷி தீர்த்தம் எனவும் அழைக்கிறார்கள். இந்த தீர்த்தத்தில் நீராடினால் அனைத்து உடல் உபாதைகளும், நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை. மூவலூரில் உள்ள ஸ்ரீமார்க்கசகாயேசுவரர் திருக்கோயிலின் பிரகாரத்தில் பிப்பல மகரிஷிக்கு தனிச் சன்னதி உள்ளது.

பின்னொரு காலத்தில் இந்நிகழ்வைக் கேள்விப்பட்ட சோழ அரசர், தான் புரிந்துள்ள போர்களின் வாயிலாக எத்தனை உயிர்ப்பலி ஏற்பட தான் காரணமாகிவிட்டோம் என எண்ணி, அரசன் தான் செய்த பாவம் நீங்கப்பெற கடும் தவம் புரிந்தார். இதன் காரணமாக அரசருக்கும் அதே அத்திமரத்திலே விஸ்வரூப காட்சி தந்தார் வானமுட்டி பெருமாள். பெருமாளின் அருளும் அரசருக்குக் கிடைத்தது.

பின்னர் சோழ அரசர் சிற்பக் கலையில் வல்லவர்களைக் கொண்டு, அதே அத்தி மரத்தில் 14 அடி உயரத்தில் 4 கரங்களில் சங்கு, சக்கரம், கதை, அபயஹஸ்தம், ஆகியவற்றுடன் காட்சி தரும்படி வானமுட்டி பெருமாளைச் செய்து அதற்கு அஜந்தா வர்ணம் தீட்டி, ஸ்ரீனிவாச பெருமாளுக்கு திருக்கோயில் எழுப்பினார்.

இத்திருக்கோயில் சுமார் 1200 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்திய கோயில். சோழ அரசர் இக்கோயிலை 7 பிரகாரங்களுடன் கட்டியுள்ளார். தற்போது இக்கோயில் ஒரு பிரகாரத்துடன் தான் உள்ளது. இக்கோயில் தாயாருக்கு தனி சன்னதி இல்லை. பெருமாளின் வலது மார்பில் ஸ்ரீ மகா லெட்சுமி குடிகொண்டுள்ளார். சீனிவாசப் பெருமாளின் இடப் பக்கமாக பூமாதேவி சிலை வடிவில் காட்சி தருகிறார்.

திருக்கோயிலின் உள்ளே சுவாமி எழுந்தருளி இருக்கும் கோயில் கோபுர விமானம், ஒரு பெரிய கலசத்துடன், பல வண்ணங்களால் ஆன குடையைப் போன்று உள்ளது.

மிகப் பெரிய அத்தி மரமே பெருமானாக மாறியுள்ளதால், அம்மரத்தின் வேரே திருவடிகளைத் தாங்கி நிற்கும் அதிசயம் உலகில் எங்கும் இல்லை. சோழ அரசரால் இக்கோயில் கட்டப் பட்டதால் இவ்வூருக்கு சோழன்பேட்டை என்ற பெயர் உண்டானது. அத்திமரப் பெருமான் என்பதால் இவருக்கு கற்பூர எண்ணைக் காப்பு மட்டுமே நடைபெறுகிறது.

இங்கு பிப்பலர் கடும் தவம் செய்து அருளிய சனி காயத்ரி மந்திரம் சனிகிரக தோஷ நிவர்த்திக்கு பரிகாரமாக உள்ளது. இத்தலமும் சனிதோஷப் பரிகாரமாகத் தலமாக உள்ளது. இதனை இக்கோயில் கல்வெட்டுக்கள் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.

இங்கு கிடைத்துள்ள கல்வெட்டின்படி, சனிதோஷ பரிகாரத்திற்கு, ஒரு தமிழ் ஆண்டில் உள்ள 51 வாரங்களுக்கு, ஒவ்வொரு சனிக்கிழமையிலும் 10 பேருக்கு தலை குளிக்க எண்ணையும், ஐந்து விதமான காய்கறிகளுடன், ஒரு இலைக் காய்கறி சேர்த்து, உணவும் அளிக்கவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும் கிடைத்துள்ள மூன்று கல்வெட்டுகளின்படி, இக்கோயில் பெருமானுக்கு ஸ்ரீபக்தப்பிரியர், பக்தப்பிரியத்தாழ்வார் என்ற பெயர்களும் உண்டு என அறியப் படுகிறது. பக்தர்களின் துன்பங்களை கருணை உள்ளத்துடன் சரி செய்பவள் இத்தல தாயார் ஸ்ரீதயாலெட்சுமி. ஸ்ரீயோக நரசிம்மர் இரண்டு கைகளில் சங்கு, சக்கரம் ஏந்தி, இரண்டு திருக்கரங்களை யோகத்திருவடி மீது வைத்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். பிரதோஷ காலத்தில் இக்கோயில் நரசிம்மரை மனதார தரிசனம் செய்ய, செவ்வாய் தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

இக்கோயிலில் எழுந்தருளியுள்ள ஆஞ்சநேயர் மூன்று அடி உயரத்தில் ஸ்ரீபக்த ஆஞ்சநேயராக காட்சி அளிக்கிறார். இவர் வாலைச் சுருட்டி தலையில் வைத்திருப்பதும், வாலின் நுனியில் மணி தொங்கும்படியும் அமைந்துள்ளது. இவர் சப்தஸ்வர ஸ்வரூப ஆஞ்சநேயராக விளங்குகிறார். இவரது ஒவ்வொரு உடல் பாகத்திலும் ஒவ்வொரு ஒலி உண்டாகிறது. அவ்வித ஒலியானது ஸரிகமபதநி என்ற ஏழு ஸ்வர ஒலி அமைப்பில் உள்ளது அதிசயிக்கத் தக்க விஷயம். இவருக்கு பால், தயிர், இளநீர், தேன், சந்தனம் கொண்டு அபிஷேகம் செய்வது, அந்த அபிஷேகத்தை காண்பது விசேஷமான ஒன்று.
மேலும் தும்பிக்கையாழ்வார். ஸ்ரீசக்கரத்தாழ்வார், ஸ்ரீராமானுஜர், நர்த்தன கிருஷ்ணர், விஷ்வக்ஷேனர், பிப்பலர் சன்னதிகளும் உள்ளன. விஸ்வரூபபுஷ்கரணி தீர்த்தக் குளம் கோயிலுக்கு வலது புறத்தில் அமைந்துள்ளது. இத்திருக்குளம் 7 கிணறுகள், 7 நதிகளாக, பெருமாளால் உருவாக்கப் பட்டதாக நம்பப் படுகிறது.

வழிகாட்டி:

இந்த அருள்மிகு வானமுட்டிப் பெருமாள் திருக்கோயில் மயிலாடுதுறையில் இருந்து 5 km தொலைவிலும், குத்தாலத்தில் இருந்து 5 km தொலைவிலும், மூவலூர் என்னும் சிற்றூரில் இருந்து 2 km தூரத்திலும் அமைந்துள்ளது. இத்திருக்கோயில், மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் வலதுபுறம் சற்று உள்ளே செல்ல வேண்டும். திருவேள்விக்குடியிலிருந்து 3 கிமீ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *