அருள்மிகு திருமால்பாடி டிரான்ஸ்ஃபர் பெருமாள் திருக்கோயில், திருமால்பாடி
அருள்மிகு திருமால்பாடி டிரான்ஸ்ஃபர் பெருமாள் திருக்கோயில், திருமால்பாடி, திருவண்ணாமலை மாவட்டம்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், தேசூர் என்னும் சிறிய கிராமத்தின் அருகே உள்ளது இந்த அழகிய, மிகப் புராதனமான திருமால்பாடி திருத்தலம். இக்கோயிலுக்கு வேலூரில் இருந்து செல்லலாம். வேலூரில் இருந்து சுமார் 90 km தொலைவில் உள்ளது இத்திருத்தலம். வேலூரில் இருந்து ஆரணி, வந்தவாசி, தேசூர் வழியாக இக்கோயிலை அடையலாம். ஒரு சிறிய குன்றின் மேல் 106 படிகள் ஏறிச் சென்று தெய்வ தரிசனம் பெறலாம். பல ஆயிரம் வருடங்களைக் கடந்து நிற்கிறது இக்கோயில்.
அக்காலத்தில் இது போன்ற உள்ளடங்கிய கிராமங்களில் சாலை வசதிகள் மிகக் குறைவாக இருந்த நிலையில் எப்படித்தான் இது போன்ற அழகிய திருக்கோயில்களைக் கட்டினார்களோ என்று நினைக்கும் போது வியப்பாக உள்ளது. கி.பி. 1136-ம் ஆண்டு பராந்தக சோழன் மகன் விக்கிரம சோழனால் புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது இத்திருக்கோயில். கி.பி. 1140, கி.பி. 1135, கி.பி. 1529 போன்ற பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு மன்னர்களால் இக்கோயில் பலமுறை சீரமைக்கப் பட்டுள்ளதை அங்குள்ள கல்வெட்டுக்கள் மூலம் அறிய முடிகிறது.
தல மூர்த்தி : ஸ்ரீ ரெங்கநாதர் (வேதநாதர்)
தாயார் : ஸ்ரீ வேதநாயகி.
தல தீர்த்தம் : நாரதர் தீர்த்தம்
சன்னதிகள் : ஸ்ரீ ரெங்கநாதர், வேதநாயகி, ஆஞ்சநேயர், கருடாழ்வார், ஆண்டாள் சன்னதிகள் உள்ளன.
இத்திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ ரெங்கநாதர், சயனதிருக்கோலத்தில் தரிசனம் தருகிறார். விண்ணுலகம், மண்ணுலகம் என அளந்துவிட்டு மூன்றாவது அடியாக மகாபலிச் சக்கரவர்த்தியின் தலையின் மீது தன் அடியை வைத்து அளந்ததற்கு அடையாளமாக தனது மூன்று விரல்களைக் காட்டியவாறு, ஆதிசேஷன் மீது சயனித்தபடி, தலைக்கு மரக்கால் வைத்து, தனது திருவடியை தாமரை மலர் மீது வைத்து தரிசனம் தருகிறார். அருகே பூதேவி – அமிர்தவல்லியாகவும், ஸ்ரீதேவி – ஸ்ரீ வேதவல்லியாகவும் காட்சி தருகின்றனர்.
பிரகலாதன், சுகபிரம்ம மகரிஷி ஆகியோரும் காட்சி தருகின்றனர். இங்கு எழுந்தருளியுள்ள வீர ஆஞ்சநேயர் மிகவும் சக்தி வாய்ந்தவர். ஸ்ரீவேதநாயகித் தாயார் பக்தர்களுக்கு கருணையுடன் அருள் பாலிக்கிறார்.
ஸ்ரீ சுகப்பிரம்ம ரிஷி அவர்களால், பெருமாளின் கட்டளைப் படி நிர்மாணிக்கப் பட்டது இக்கோயில். இத்தலம் அக்காலத்தில், விரஜாபுரி எனப் புகழ் பெற்றிருந்தது. ஸ்ரீ சுகப்பிரம்மம் நிர்மாணித்த திருக்கோயில் என்பதால் இன்றும் இக்கோயிலில் பச்சைக் கிளிகள் அதிகம் காணப் படுகிறது.
திருமால்பாடி திருத்தலத்திற்கு சென்று வழிபட, வேலையில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் சம்பந்தமான பிரச்சினைகளை ஸ்ரீரெங்கநாதர் தீர்த்து வைப்பார். இதனாலேயே இக்கோயிலில் உள்ள பெருமாளுக்கு, டிரான்ஸ்ஃபர் பெருமாள் (Transfer Perumal) என்றே பெயர் வந்தது.
இங்கு வழிபட, வளமான வாழ்வையும், அஷ்ட லக்ஷ்மி அம்சங்களான அனைத்து ஐஸ்வர்யங்களையும் பெறலாம்.
Leave a Reply