அருள்மிகு தென்னழகர் திருக்கோயில், கோவில்குளம், பிரம்மதேசம்

அருள்மிகு தென்னழகர் திருக்கோயில், கோவில்குளம், பிரம்மதேசம் போஸ்ட், அம்பாசமுத்திரம் தாலுகா, திருநெல்வேலி மாவட்டம்.

+91- 4634 – 251 705 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் தென்னழகர் (விண்ணகர்பெருமான்)
உற்சவர் சவுந்தர்ராஜப்பெருமாள்
தாயார் சவுந்திரவல்லி, சுந்தரவல்லி
தல விருட்சம்
தீர்த்தம் மார்க்கண்டேயர் தீர்த்தம்
ஆகமம்/பூசை வைகானஸம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருப்பொதியில் விண்ணகரம்
ஊர் கோவில்குளம், அம்பாசமுத்திரம்
மாவட்டம் திருநெல்வேலி
மாநிலம் தமிழ்நாடு

பெருமாள் மீது பக்தி கொண்டிருந்த மார்க்கண்டேய மகரிஷி, பூலோகத்தில் பல தலங்களில் பெருமாளை தரிசித்தார். அவர் பொதிகை மலைக்குச் சென்றபோது இவ்விடத்தில், சுவாமியை தரிசிக்க விரும்பி, பெருமாளை வேண்டினார். சுவாமி, அவருக்கு தாயார்களுடன் காட்சி தந்தார். பிற்காலத்தில் இப்பகுதியில் பெருமாள் பக்தர் ஒருவர் வசித்து வந்தார். மனதில் பெருமாளை எண்ணி வணங்கி வந்த அவருக்கு, சுவாமியை சிலாரூபமாக தரிசிக்க வேண்டுமென்று ஆசை உண்டானது. ஒருசமயம் அவரது கனவில் தோன்றிய பெருமாள், மதுரை அருகிலுள்ள கள்ளழகர் கோயில் மலையில் தான் சிலாரூபமாக இருப்பதாகவும், அச்சிலையை இத்தலத்தில் பிரதிஷ்டை செய்து வழிபடும்படியும் கூறினார். அதன்படி பக்தர் சிலையை கொண்டு வந்து இங்கு பிரதிஷ்டை செய்தார். பின்பு, மன்னர் ஒருவரால் இங்கு கோயில் எழுப்பப்பட்டது.

மூலஸ்தானத்தில் பெருமாள் காரை என்னும் கலவையால் செய்யப்பட்ட மூர்த்தியாக நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். முதலில் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்ட விக்ரகம், காலப்போக்கில் சிதிலமடையவே இச்சிலையை பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். எனவே இவருக்கு திருமஞ்சனம் செய்வதில்லை. சவுந்தரவல்லி, சுந்தரவல்லித் தாயாருடன் காட்சி தரும் பெருமாளுக்கு அருகில் மார்க்கண்டேய மகரிஷி, வணங்கியபடி இருக்கிறார். கோயில் சுவற்றில் வடகிழக்கு மூலையில் மூலகருடாழ்வார் இருக்கிறார். முற்காலத்தில் கோயிலைச் சுற்றிலும் குளம் இருந்ததால் இப்பகுதி, “கோவில்குளம்என்றழைக்கப்படுகிறது. முன்மண்டபத்தில் நாகர், விஷ்வக்ஷேனர், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், உடையவர் ஆகியோர் இருக்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு வரையில் இங்கு பூஜைகளும், திருவிழாக்களும் சிறப்பாக நடந்து வந்தது. தற்போது கோயில் சரியான பராமரிப்பில் இல்லாததால், விழாக்கள் எதுவும் நடைபெறுவதில்லை.

மதுரை கள்ளழகர் கோயிலில் இருந்து கொண்டு வரப்பட்ட மூர்த்தி என்பதால் இத்தல பெருமாள், “தென்னழகர்என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு, “ஸ்ரீபதிவிண்ணகர் பெருமான்என்றும் பெயருண்டு.

திருவிழா:

ஆடிப்பூரம், புரட்டாசி கடைசி சனிக்கிழமை, வைகுண்ட ஏகாதசி.

ஆடி சுவாதியன்று ஒருநாள் மட்டும் இவருக்கு விசேஷ திருமஞ்சனம் செய்து, பூக்களால் ஆன சட்டை அணிவிக்கிறார்கள். ஆடிப்பூரத்தை ஒட்டி 10 நாட்கள் மட்டும் சுவாமிக்கு விசேஷ பூஜை செய்யப்படுகிறது.

பிரார்த்தனை

உள்ளம், உருவம் இரண்டும் அழகாக சவுந்தர்ராஜ பெருமாளிடம் வேண்டிக்கொள்ளலாம்.

நேர்த்திக்கடன்:

சுவாமிக்கு சர்க்கரைப்பொங்கல் படைத்து, விசேஷ பூஜை செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

வழிகாட்டி:

திருநெல்வேலியில் இருந்து 40 கி.மீ., தூரத்தில் அம்பாசமுத்திரம் உள்ளது. இங்கிருந்து 2 கி.மீ., தூரத்திலுள்ள கோவில்குளம் என்ற கிராமத்தில் இக்கோயில் உள்ளது. குறித்த நேரத்தில் மட்டும் இவ்வூருக்கு பஸ்கள் செல்கிறது.

அருகிலுள்ள ரயில் நிலையம் : திருநெல்வேலி.

அருகிலுள்ள விமான நிலையம் : மதுரை, திருவனந்தபுரம்

தங்கும் வசதி : திருநெல்வேலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *