அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் கோயில், வேம்பத்தூர்
அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் கோயில், வேம்பத்தூர் – 630 565. சிவகங்கை மாவட்டம்.
+91- 4575- 236 284, +91-4575-236 337 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் |
தாயார் | – | பூமிநீளா (உற்சவர்: ஸ்ரீதேவி,பூதேவி) |
பழமை | – | 500-1000 வருடங்களுக்கு முன் |
ஊர் | – | வேம்பத்தூர் |
மாவட்டம் | – | சிவகங்கை |
மாநிலம் | – | தமிழ்நாடு |
முன்னொரு காலத்தில் குலசேகரபாண்டியன் பாண்டிய நாட்டை ஆண்ட போது, கடும் வறட்சி ஏற்பட்டது. இவன் சோழ இளவரசியைத் திருமணம் செய்திருந்தான். சோழநாட்டில் நீர் நிறைந்து பயிர் விளைந்து செழிப்பாக இருக்கும் பூமியைப் பார்த்து ஆச்சரியப்பட்டான் பாண்டியன். இவன் தன் மாமனாரிடம்,”எங்கள் நாட்டில் ஏற்பட்ட வறட்சி நீங்க என்ன செய்ய வேண்டும்?” என்றான். “காசியிலிருந்து 2008 அந்தணர்களை அழைத்து வந்து உன் நாட்டில் யாகம் செய்தால் மழை பொழியும். பயிர் செழிக்கும்” என்றார் சோழன். யாகம் நடத்த 2008 அந்தணர்கள் குடும்பத்துடன் வந்தனர். யாகம் சிறப்பாக நடந்து மழை பொழிந்தது. விளைச்சல் பெருகியது. மன்னனுக்கு அளவில்லாத ஆனந்தம். யாகம் செய்த அந்தணர்களுக்கு அவர்களது பெயரிலேயே நிலம் கொடுத்து இங்கேயே தங்க ஏற்பாடு செய்தான். நிலப்பட்டா கொடுக்கும் போது, 2007 அந்தணர்கள் வந்து விட்டனர். 2008வது அந்தணரான கணபதி என்பவரை மட்டும் காணவில்லை. மன்னனுக்கு வருத்தம். என்ன செய்வதென்று தெரியவில்லை. சிறிது நேரத்தில் அந்த முழு முதற்கடவுளான விநாயகரே, அந்தணர் வடிவில் நேரில் வந்து,”நான் தான் கணபதி” என்று கூறி நிலத்தைப் பெற்றுக்கொண்டார். அப்படிப் பெற்றுக்கொண்ட நிலம் தான் வேம்பத்தூர். இந்த கணபதி ஊரின் குளக்கரையில் இன்றும் “2008 கணபதி” என்ற பெயரில் வீற்றிருந்து வேதம் சொல்லி தருவதாக ஐதீகம்.
இங்குள்ள மக்களில் பலர் பண்டிதர்களாகவும், ஆகம சாஸ்திரங்களிலும், மருத்துவத்திலும் வல்லுனர்களாகவும் விளங்குகிறார்கள்.
இங்குள்ள பெருமாள், இடது கையால் நம்மை வர வழைத்து வலது கையால் அருள்பாலிக்கிறார். இந்த பெருமாளை, சிற்ப சாஸ்திரம் ஆரம்பிப்பதற்கு முன்பு உள்ள முறைப்படி, உளி கொண்டு செதுக்காமல் கல்லையே கொண்டு செதுக்கி வடிவமைத்து உள்ளார்கள். பெருமாள் செல்வத்துக்கு அதிபதி. ஆனால், இத்தலத்து உள்ள பெருமாள் கல்வி, செல்வம் இரண்டிற்குமே அதிபதியாக உள்ளார். கவிச்சக்கரவர்த்தி கம்பரும், காளமேகப்புலவரும் இவரை வணங்கி, தங்களது புலமை மேலும் சிறக்குமாறு வழிபட்டு சென்றுள்ளதற்கான கல்வெட்டு சான்றுகள் உள்ளன.
இவர்கள் தவிர தமிழ்சங்க புலவர்களில் ஒருவரான வேம்பத்தூர் குமரனார் அகநானூறில் 157வது பாடலையும்,புறநானூறில் 317வது பாடலையும், தமிழ்சங்க புலவர்களில் மற்றொருவரான வேம்பத்தூர் கண்ணன் கூத்தனார் குறுந்தொகையில் 362வது பாடலையும், சுந்தராஜ பெருமாளை வழிபட்டு பாடியுள்ளார்கள்.
பதினோறாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த கவிராஜ பண்டிதர் இந்த பெருமாளை வழிபட்டு ஆதிசங்கரர் இயற்றிய சவுந்தர்யலஹரி மற்றும் ஆனந்த லஹரியைத் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். அத்துடன் இவர் மானாமதுரை ஆனந்தநாயகி மாலையும், வேம்பத்தூர் வாராஹியின் மேல் புவனாம்பிகை கலை ஞான தீபமும், மேலக் கொடுமனூர் முருகன் மீது ஞான உலாவும் பாடியுள்ளார்.
வேம்பத்தூர் பெருமாளின் கருணையால் கவிராஜபண்டிதர் பெற்ற கவித்திறமையை அறிந்த மதுரை மீனாட்சி, பண்டிதர் காசி சென்ற போது அவருக்கு மகளாக இருந்து சேவை புரிந்திருக்கிறாள்.
அத்துடன் 16ம் நூற்றாண்டு கவிகாலருத்ரர், 17ம் நூற்றாண்டு வீரை ஆளவந்தார் மாதவபட்டர், வீரை அம்பிகாபதி, 18ம் நூற்றாண்டு கவிக்குஞ்சரபாரதி, 19ம் நூற்றாண்டு கவிசங்கர சுப்பு சாஸ்திரிகள், கவி சங்கரநாராயணய்யர், உ.வே. சாமிநாதய்யர், சிலேடைப்புலி பிச்சுவய்யர் ஆகியோர் இத்தல பெருமாளின் அருளால் பெரும் புலவர்களாக திகழ்ந்தனர்.
ஊரின் எல்லையில் 2008 விநாயகர் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். கோயில் பிரகாரத்தில் லட்சுமி நாராயணன், லட்சுமி நரசிம்மர், லட்சுமி ஹயக்கிரீவர், லட்சுமி பூவராகர் அருள்பாலிப்பது மிகவும் சிறப்பு. இப்படி நால்வரும் ஒரே இடத்தில் அருள்பாலிப்பதால் இங்கு வந்து வழிபடுபவர்களது பணக்கஷ்டம் நீங்குவதுடன், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கி, பண்டிதராகவும் விளங்குகிறார்கள். கோயிலுக்குள் பிள்ளையார், கருப்பண்ண சவாமி, கருடாழ்வார்,
ஆஞ்சநேயர், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக சுந்தரராஜபெருமாளின் பத்து அவதார மூர்த்திகளும் தனித்தனியே அருள்பாலிக் கிறார்கள்.
திருவிழா: வைகுண்ட ஏகாதசி
பிரார்த்தனை:
மிகவும் பழங்காலத்து பெருமாளான இவரை வணங்கினால் நாவன்மையும், கவிப்புலமையும் கிடைக்கும்.குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப்பதற்கு முன்பும், வேதபாட சாலைகளில் சேர்ப்பதற்கு முன்பும், உயர்படிப்பு, மேல்படிப்பு செல்வதற்கு முன்பும் படிப்பிற்கு தகுந்த வேலை கிடைக்கவும் இத்தல பெருமாளை வழிபட்டு செல்வது நல்லது.
நேர்த்திக்கடன்:
பிரார்த்தனை நிறைவேறியதும் பெருமாளுக்கும் தாயாருக்கும் திருமஞ்சனம் செய்து, புது வஸ்திரம் சாத்தி வழிபாடு செய்கின்றனர்.
வழிகாடி: மதுரையிலிருந்து ராமநாதபுரம் செல்லும் வழியில் 40 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது வேம்பத்தூர்.மதுரை மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டிலிருந்து சுந்தரநடப்பு, பெரிய கோட்டை வழியாக சிவகங்கை செல்லும் பஸ்களிலும், ராமநாதபுரம் செல்லும் பஸ்களில் திருப்பாச்சேத்தி சென்று அங்கிருந்து டவுன் பஸ் அல்லது ஆட்டோவிலும் வேம்பத்தூர் செல்லலாம்.
அருகிலுள்ள ரயில் நிலையம் : மானாமதுரை
அருகிலுள்ள விமான நிலையம் : மதுரை
தங்கும் வசதி : மதுரை
Leave a Reply