அருள்மிகு ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில், இந்திரா நகர், திருச்சி

அருள்மிகு ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில், இந்திரா நகர், திருச்சி

 

அமைதியான சூழ்நிலையில் அமைந்த திருக்கோயிலில், அலர்மேல் மங்கை சமேதராக எழுந்தருளியுள்ளார், ஸ்ரீநிவாசப் பெருமாள்.

திருச்சி இந்திரா நகரில் அமைந்துள்ள இக்கோயிலுக்குள் கொடி மரம், பலி பீடம் கடந்து சென்றால், கருடாழ்வார், ஸ்ரீநிவாசப்பெருமாளை இருகரம் கூப்பி வணங்கும் நிலையில் நின்று கொண்டிருக்கிறார். அருகில் நெய் விளக்கு ஏற்றி வழிபட, நம் குறைகளை சரி செய்ய பெருமாளுக்கு இவர் பரிந்துரை செய்வதாக நம்பிக்கை.

சுமார் ஆறடி உயரத்தில் நின்ற நிலையில் அருள்பாலிக்கும் ஸ்ரீநிவாசப்பெருமாள், திருப்பதி திருமலையில் எப்படிக் காட்சித் தருகிறாரோ அதே அம்சத்தில் இங்கே எழுந்தருளி அருள்புரிவதால், இவரை சனிக்கிழமைகளில் கற்கண்டு சமர்ப்பித்து வழிபட, பிரச்னைகள் விலகி சகல பாக்கியங்களும் கிட்டும் என்கிறார்கள். பெருமாளின் இடதுபுறம் தனிச்சன்னதியில் அலர்மேல் மங்கைத் தாயார் அருள்புரிகிறாள்.

தாயாரையும் பெருமாளையும் தரிசித்தபின், திருச்சுற்று வலம் வரும்போது லட்சுமி நரசிம்மர், லட்சுமி நாராயணர், லட்சுமி ஹயக்ரீவரை தரிசிக்கலாம். பக்கத்தில் ஆதிசேஷன் சிறிய சன்னதியில் காட்சி தருகிறார்.

கிழக்கு பார்த்த ஆழ்வார் மண்டபத்தில் பக்த ஆஞ்சநேயர் நின்ற நிலையில் கைகூப்பிய வண்ணம் தனிச்சன்னதியில் அருள் பாலிக்கிறார். இவருக்கு வலப்புறத்தில் சுவாமி தேசிகன் தனிச்சன்னதியில் காட்சிதர, அதற்கு அடுத்த சன்னதியில் சக்கரத்தாழ்வார் பதினாறு திருக்கரங்களுடன் எழுந்தருளியுள்ளார்.

இத்திருக்கோயிலில் திருமலையில் நடைபெறும் பிரம்மோற்சவம் போல் புரட்டாசியில் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. மேலும், பங்குனி உத்திரத் திருக்கல்யாணம், வைகுண்ட ஏகாதசி திருநாள், பரமபத வாசல் திறப்பு, பகல்பத்து, ராப்பத்து உற்சவம், விசாக கருட சேவை உற்சவம் ஆகியவை மிகச்சிறப்பாக நடைபெறுகிறது.

திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து தெற்கே மூன்று கி.மீ. தூரத்தில் சாத்தனூர் செல்லும் வழியில் இந்திரா நகரில் இக்கோயில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *