அருள்மிகு ரகுமாயீ சமேத பாண்டுரங்கன் திருக்கோயில், தென்னாங்கூர்

அருள்மிகு ரகுமாயீ சமேத பாண்டுரங்கன் திருக்கோயில், தென்னாங்கூர் – 604 408. திருவண்ணாமலை மாவட்டம்

+91-4183-225 808 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பாண்டுரங்கன்
தாயார் ரகுமாயீ
தல விருட்சம் தமால மரம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் தென்னாங்கூர்
மாவட்டம் திருவண்ணாமலை
மாநிலம் தமிழ்நாடு

மகாராஷ்டிராவிலுள்ள பண்டரிபுரம் கோயிலைப் போன்றே வந்தவாசி அருகே தென்னாங்கூர் பாண்டுரங்கன் கோயில் உள்ளது. இங்கு ரகுமாயீ சமேத பாண்டுரங்கனை தரிசிக்கலாம். ஞானானந்த சுவாமிகளின் சீடர் ஹரிதாஸ்கிரி சுவாமிகளால் அமைக்கப்பட்ட இக்கோயில், நாமாநந்த கிரி சுவாமிகளால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இயந்திர வழிபாட்டின் அடிப்படையான ஸ்ரீசக்ர அதிதேவதைகள் அனைத்தும் இங்கு இருப்பது விசேஷம்.

கடவுளை உணர்வதற்கும், அடைவதற்கும் வழிபாடு அவசியமாகிறது. அவரவர் தகுதிக்கேற்ப, பிடித்தமான முறையில் கடவுளை வழிபடலாம். இத்தலத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், இறைவனை நாம சங்கீர்த்தனம் (பக்திப்பாடல்) மூலம் வழிபாடு செய்யப்படுகிறது. ஏனெனில், நாம சங்கீர்த்தனம் ஒருவரை இறைவனிடம் அழைத்து செல்கிறது.

பாண்டுரங்கன் சுமார் 12 அடி உயரத்தில் சாளக்கிராமத்தினால் மிக அழகாக நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். அருகே ரகுமாயீ அழகுக்கு அழகு சேர்க்கும் விதத்தில் அருள்பாலிக்கிறார்.

ஞாயிற்றுகிழமையில் மதுராபுரி ஆளும் மன்னன் அலங்காரத்திலும், வியாழக்கிழமையில் பாததரிசனத்திற்காக மிக எளிமையாக பாண்டுரங்க அலங்காரத்திலும், வெள்ளியன்று வெள்ளிக்கவச அலங்காரத்திலும், சனிக்கிழமை திருப்பதி வெங்கடாஜலபதி அலங்காரத்திலும் அருள்பாலித்து வருகிறார்.

ஒவ்வொரு தமிழ் வருடப் பிறப்பின் போதும் விஷுக்கனி உற்சவம்என பழ அலங்காரத்தில் அருள் பாலிக்கிறார். கோகுலாஷ்டமியில் முத்தங்கிசேவை நடக்கிறது. இது தவிர ராஜகோபாலனாக, கோவர்த்தன கிரியை கையில் பிடித்திருக்கும் கிரிதாரியாக, கீதை உபதேசிக்கும் கண்ணனாக, தேரோட்டும் பார்த்தசாரதியாக, ராதாகிருஷ்ணனாக அருள்பாலிக்கிறார்.

இத்தலத்தின் விருட்சம் தமால மரம். துவாபர யுகத்தில் கிருஷ்ணன் இம்மரத்தின் கீழ் நின்று தான் புல்லாங்குழல் வாசித்து, அதில் ராதை மயங்கியதாகப் புராணங்கள் கூறுகிறது. வட மாநிலத்தில் உள்ள இந்த விருட்சம் தென்னகத்தில் இத்தலத்தில் அமைந்துள்ளது சிறப்பம்சமாகும். இத்தலத்தில் பஞ்சலோகத்தினால் ஆன துவாரபாலகர்கள் உள்ளனர்.

ஒரிசா மாநிலத்து பூரி ஜகந்நாதர் கோயிலைப் போன்று 120 அடி உயரத்தில் கோபுரமும் ஒன்பதரை அடி உயரத்தில் தங்கக் கலசமும், அதன் மேல் சுதர்சன சக்கரமும், காவிக்கொடியும் பார்ப்பவரை பிரமிக்க வைக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

கோயிலின் ராஜகோபுரம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. பலிபீடத்தை தாண்டி 16 கால் மண்டபம் உள்ளது. இதன் நடுவில் கருடாழ்வார் வீற்றிருக்கிறார். மகாமண்டபத்தில் நுழைந்தவுடன் சொர்க்கத்தில் நுழைந்துவிட்டதைப் போன்ற உணர்வு. இங்கு தான் கோவிந்தராஜப்பெருமாள் திருப்பதியைப்போல், சனிக்கிழமைதவிர மற்ற நாட்களில் கல்யாண உற்சவம் கண்டு அருள்கிறார். இங்கு பெருமாளின் திருக்கல்யாணம் வைதீக சம்பிரதாயமும், பஜனை சம்பிரதாயமும் இணைந்த உற்சவம் நடத்தப்படுகிறது.

கோயிலின் பின்பக்கம் ஞானானந்த சுவாமிகளின் பிருந்தாவனம் அமைந்துள்ளது. இங்கு இயந்திர வழிபாட்டில் முக்கியத்துவம் பெறும், ஸ்ரீசக்ரத்தின் அதி தேவதைகள் மஹாசோடஷிஎன்ற திருநாமத்தில் ஒரே வடிவில் அருள்பாலிக்கின்றனர். இயந்திர வழிபாடான ஸ்ரீசக்ரத்திற்கு மகா மேருஅமைப்பை ஏற்படுத்தி, பூஜை செய்வது மாபெரும் பலன் தரக்கூடியது. இந்த மகாமேரு தான் மகா சோடஷியாக இத்தலத்தில் விளங்குகிறது. ஸ்ரீ சக்ரத்தில் எத்தனை பிரிவு உள்ளதோ அத்தனை பிரிவிற்கும் உள்ள தெய்வங்களான மகாசோடஷி, ராஜராஜேஸ்வரி, சரஸ்வதி, லட்சுமி, பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், ஈசுவரன், விநாயகர், பாலா, அன்னபூரணி, அச்வாரூடா, ராஜமாதங்கி, வராஹி, பிரத்யங்கிரா, சரபேஸ்வரர், சக்கரத்தாழ்வார், யோகநரசிம்மர், அகோரமூர்த்தி, வனதுர்க்கை, பராசரஸ்வதி, மேதாதட்சிணாமூர்த்தி, சுப்ரமணியர், சண்டிமகாலட்சுமி, பிராஹ்மி, மாகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராஹி, மாகேந்திரி, சாமுண்டா,மகாலட்சுமி ஆகியோர் இத்தலத்தில் விக்ரக வடிவில் இருப்பது மிகவும் விசேஷம்.

திருவிழா: கோகுலாஷ்டமி.

வேண்டுகோள்:

குழந்தை பாக்கியத்திற்கு இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியதும் சுவாமிக்கும் அம்பாளுக்கும் புது வஸ்திரம் சாத்தி அர்ச்சனை செய்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *