அருள்மிகு பிரசன்ன வெங்கடேசர் திருக்கோயில், திருமலைவையாவூர்

அருள்மிகு பிரசன்ன வெங்கடேசர் திருக்கோயில், திருமலைவையாவூர், செங்கல்பட்டு – 603 308 காஞ்சிபுரம் மாவட்டம்.

+91- 44 – 6747 1398, 94432 39005, 99940 95187 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 8 மணி முதல் 12.30 மணி வரை, மாலை மணி 4 முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பிரசன்னவெங்கடேசர்
உற்சவர் சீனிவாசர், கள்ளபிரான்
தாயார் அலர்மேலுமங்கை
தீர்த்தம் வராகதீர்த்தம்
ஆகமம்/பூசை வைகானஸம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் திருமலைவையாவூர்
மாவட்டம் காஞ்சிபுரம்
மாநிலம் தமிழ்நாடு

சப்தகிரி என விளங்கும் திருவேங்கடத்திற்கு இணையான மற்றொரு திருத்தலம் என பக்தர்களால் பூஜிக்கப்படுவது திருமலைவையாவூர் ஆகும். மிகப் பழைமையானது இத்திருக்கோயில்.

இத்திருக்கோயில், ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள் திருக்கோயில் எனவும், தென்திருப்பதி ஸ்ரீ வைகுந்தகிரி, தென் வேங்கடகிரி, தென் சேஷகிரி, வராக ஷேத்திரம், தென் கருடகிரி, ராமானுஜ யோககிரி எனப் பல சிறப்புப் பெயர்களைக் கொண்டு திகழ்கிறது.

புராண காலத்தில் இராமனுக்கும் இராவணனுக்கும் நடந்த யுத்தத்தில், இலட்சுமணன் சக்தி எனும் அஸ்திரத்தினால் அடிபட்டு, மயங்கி விழுந்தான். அந்த மயக்கம் தீர, அனுமன் வடக்கு நோக்கிச் சென்று சஞ்சீவி மலையைப் பெயர்த்து எடுத்துக்கொண்டு இலங்கை நோக்கிச் செல்லும் வழியில், தட்சிண கருடகிரி எனும் இத்திருமலைவையாவூரை வானில் கடக்கும்போது, இம்மலைமீது எழுந்தருளியுள்ள ஸ்ரீ வராகப் பெருமானையும், ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமானையும் தரிசித்து வணங்கினார். அப்போது தனது வலது கரத்திலிருந்த சஞ்சீவி மலையைக் கீழே வைக்காமல், தனது இடது கரத்திற்கு மாற்றிக்கொண்டார், ஸ்ரீராம பக்தரான ஆஞ்சநேயர். சஞ்சீவி மலையை கீழே வைக்காமலேயே, தனது மற்றொரு கரத்திற்கு மாற்றிய இடமாதலால், இத்தலம் திருமலைவையாவூர் எனக் காரணப் பெயர் பெற்றது. இங்கு எழுந்தருளியுள்ள அனுமன் ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சநேயர் என பக்தர்களால் பூஜிக்கப்படுகிறார்.

முன்பொரு காலத்தில் ஹிரண்யாட்சன் எனும் அசுரன் பூமியைப் பாய்போல் சுருட்டி ஆழ்கடலினுள் கொண்டுபோய் ஒளித்து வைத்து, தேவர்களுக்குத் துன்பத்தைக் கொடுத்து வந்தான். பூமியும் இருளில் மூழ்கியது. அதனால், வருந்திய தேவர்களும், முனிவர்களும் பாற்கடலில் துயில் கொண்டிருக்கும் திருமாலிடம் சென்று, தங்களை அந்த அசுரனிடமிருந்து காப்பாற்றி, பூமியை மீண்டும் வெளிக்கொணருமாறு வேண்டினர். திருமால் அவர்களின் வேண்டுதலுக்கு இரங்கி, வராக அவதாரம் எடுத்து ஆழ்கடலினுள் பாய்ந்து சென்று, அசுரனை அழித்து அருளினார். பிறகு தன் கோரைப் பற்களின் மீது பூமியைத் தாங்கிக்கொண்டு, வெளிக்கொணர்ந்து, முன்புபோல் அதனை நிலைப்படுத்தினார். அதனால், மகிழ்ந்த தேவர்கள், பெருமானின் பிரம்மாண்ட வராக ரூபத்தைப் பலவாறு போற்றி, வணங்கிப் பூஜித்தனர். அப்போது பெருமான் உலகிற்கு அருள் புரிய திருவுளங்கொண்டு, கருடனை அழைத்து, தான் பூமியில் கோயில் கொள்ளத் தக்கதோர் மலையினை ஸ்ரீவைகுண்ட லோகத்திலிருந்து கொண்டு வருமாறு பணித்தார். அவர் அருளாணைப்படி, கருடனும் வைகுண்டலோகம் சென்று, பஞ்ச பூதங்களாலான ஒரு சிறு மலையைப் பெயர்த்தெடுத்துக் கொணர்ந்து, சுவர்ணமுகி ஆற்றின் சமீபத்தில் வைத்தார். கருடனால் கொண்டுவரப்பட்ட அம்மலை கருடகிரி எனச் சிறப்புப் பெற்றது.

ஸ்ரீ வராகப் பெருமான் அந்த கருடகிரியின்மீது எழுந்தருளினார். அப்போது கருடன், “பெருமானே! பூமியைத் தாங்கும் தேவரீரது விஸ்வரூப தரிசனத்தை அடியேன் கண்டுகளித்திட வேண்டும்என வேண்டினார். அவ்வாறே வராகப் பெருமான் பூமி தேவியைத் தாங்கிய வண்ணம், விஸ்வரூப தரிசனத்தை தட்சண கருடகிரியில் கருடனுக்குத் திருக்காட்சி அளித்து அருள்புரிந்தார்.

முன்பொரு சமயம், திருமால் ஆதிசேஷனை அழைத்து,”நாம் கலியுகம் முடியும்வரை பூமியில் எழுந்தருளி, அடியவர்க்கு அருள்பாலிக்க திருவுள்ளம் கொண்டுள்ளோம். அதனால் நீ, உயர்ந்ததொரு மலையுருவங் கொண்டு கருடகிரியின் மேல் விளங்குவாயாகஎன்றார். அவ்வாறே ஆதிசேஷன் கருடகிரியை அடைந்து, உயர்ந்த மலையாக உருவங்கொண்டு விளங்கினார். அதனால் அம்மலை சேஷகிரி என்று வழங்கலாயிற்று. அதன்மீது திருமால் ஒரு புரட்டாசி மாதம் சிரவணத்துடன் கூடிய துவாதசியில் திங்கட்கிழமை நன்னாளில் ஸ்ரீநிவாசனாக எழுந்தருளினார். அப்போது ஆதிசேஷன்,”பெருமானே! அடியேன் செய்த பெரும் புண்ணியத்தால் இங்கு தங்களைத் தாங்கும் பெரும் பேற்றைப் பெற்றுள்ளேன். தேவரீருக்குத் திருக்குடையாய் இருக்கும் பேற்றையும் அருளவேண்டும்என வேண்டினார். பெருமாள்,”நீ வேண்டியவாறு உனக்கு தட்சிண கருடகிரியில் அருளுவோம்என்றனர். அவ்வாறே ஆதிசேஷனுக்கு தட்சண கருடகிரியில் ஸ்ரீநிவாசப் பெருமான் தரிசனம் தந்தருளி ஆதிசேஷனைத் திருக்குடையாய் ஏற்றபடி, மங்கல குண ஸ்வரூபியாய் இவ்விடத்தில் எழுந்தருளினார். ஆதிசேஷனுக்குக் காட்சியளித்ததால் இத்தலம் தென் சேஷகிரி என்றும் வழங்கலாயிற்று.

இலங்காபுரி வேந்தன் இராவணனைப் போரில் வதம் செய்து, ஸ்ரீசீதாதேவியைச் சிறைமீட்டு, இலட்சுமணனோடு ஸ்ரீராமன் அயோத்தி திரும்பும் வழியில் சேதுவில் ஸ்நானம் செய்து, பின்னர் இத்திருமலைவையாவூரை அடைந்து வராக தீர்த்தத்திலும் ஸ்நானம் செய்து தோஷம் நீங்கப் பெற்று அயோத்தி திரும்பி, பட்டாபிஷேகம் செய்துகொண்டதாகத் தலவரலாறு கூறுகிறது.

வைணவ மகாபுருஷரான ஸ்ரீமத் ராமானுஜர் திருமலைவையாவூரில் சில காலம் தங்கி, யோகத்தில் ஈடுபட்டதால், ராமானுஜ யோககிரி என்ற பெயரும் இத்திருமலைவையாவூருக்கு வழங்கலாயிற்று என செவிவழிச் செய்தி கூறுகிறது.

பூர்வ காலத்தில் ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமானிடம் மிகுந்த பக்திகொண்ட முன்னயர் கோன், பிராட்டியர் கோன் எனும் இருவர் இப்பகுதியில் பசுக்களை மேய்த்து வந்தனர். அப்பசுக் கூட்டத்தில் ஒரு பசு மட்டும் தினமும் தனியே பிரிந்து சென்று, பிறகு மாலை நேரம் வந்தவுடன் கூட்டத்தில் சேர்ந்துவிடும். இதனை அறிந்த முன்னயர் கோனும், பிராட்டியர் கோனும் ஒருநாள் அப்பசு தனியாகப் பிரிந்து செல்கையில் அதனைப் பின்தொடர்ந்து சென்றனர். தனியே சென்ற பசுஓரிடத்தில் நின்று தானாகவே பால் சொரிந்தது. தினமும் பசு அவ்விடத்தில் பால் சொரிவதைக் கண்ட அவர்கள் அந்த இடத்தை ஆர்வமிகுதியால் தோண்டினர். அங்கு ஸ்ரீதேவி, பூதேவியருடன் ஸ்ரீ கண்ணனின் அழகிய விக்கிரகத் திருமேனி இருப்பதைக் கண்டு, அவ்விக்கிரகங்களை திருமலைவையாவூருக்கு எழுந்தருளச் செய்து பூஜித்தனர். திருவேங்கடவனே திருவுள்ளம் உகந்து, திருமலைவையாவூரில் கிருஷ்ணாவதார தரிசனத்தை அளிக்கிறார்.

பிரசன்னம்என்றால் மனதுக்குள் தோன்றுதல்எனப்பொருள். கடவுள் மீது அன்பு கொண்டவர்கள், இறைவனை ஊனக்கண்ணால் தரிசிக்க முடியாவிட்டாலும் மனக்கண்ணால் தரிசித்து விடுவர். மதுரையில், திருமலை நாயக்க மன்னர் மனக்கண்ணால் தரிசித்த பிரசன்ன வெங்கேட பெருமாளைத் தல்லாகுளம் என்ற இடத்தில் ஸ்தாபித்தார். அதுபோல், திருமலை வையாவூரில் தொண்டைமான் மன்னர் ஒருவர், தன் நாட்டிற்கு பாதுகாப்பு வேண்டி வெங்கடாசலபதியை வேண்டினார். அவருக்கு அருள் செய்தார் வெங்கடாசலபதி. தனக்கு வெற்றி தந்த பெருமாளுக்கு நன்றி சொன்ன போது, பெருமாள் இங்குள்ள ஒரு மலைக்கு தேரில் வந்து, கையில் செங்கோலுடன் மனக்கண் முன் காட்சி கொடுத்தார். எனவே, “பிரசன்ன வெங்கடேசர்என்ற திருநாமம் பெற்றார். தொண்டைமான் இந்த மலை மீது சுவாமிக்கு கோயில் கட்டினான். இங்கு பெருமான் தொண்டைமானுக்கு ஒரு தேரின் மீது செங்கோலுடன் பிரசன்னமாகி தரிசனம் அளித்ததால் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் என அழைக்கப்படுகிறார். ஸ்ரீ பெருமாள் தேரின் மீது காட்சியளித்ததற்கு அடையாளமாகத் தேர் சக்கர அடையாளமும், குதிரைக்கால் குளம்பின் அடையாளமும் காலங்கள் பலவற்றைக் கடந்து இன்றளவும் ஒரு பாறை மீது அமைந்திருப்பதைக் காணலாம்.

திருப்பதியில் வராஹ சுவாமியை வணங்கிய பிறகே வெங்கடாசலபதியை தரிசிக்க செல்ல வேண்டும். அதே விதிமுறையின் படி, இங்கும் இலட்சுமி வராஹர் சன்னதி அமைக்கப்பட்டுள்ளது.

மூலஸ்தானத்தில் பெருமாள் செங்கோலுடன், ராஜகோலத்தில் இருக்கிறார். இவரது இரு மார்புகளிலும் இரண்டு மகாலட்சுமிகளும், திருவாசியில் ஆதிசேஷனும் இருக்கின்றனர். இவர் தசாவதாரம், அஷ்டலட்சுமி, சகஸ்ரநாம மாலைகள், தசாவதார ஒட்டியாணம் அணிந்திருப்பது விசேஷம். வியாழக்கிழமை காலையில் அலங்காரமில்லாமல் நேத்திரதரிசனம்தருகிறார். இது மிகவும் விசேஷமானது. இவரது சன்னதியைக் காக்கும் ஜெயன், விஜயன் என்ற காவலர்களில் ஒருவரது காதில் சிம்ம குண்டலம், மற்றொருவர் காதில் கஜ (யானை) குண்டலம் அணிந்திருப்பது வித்தியாசமான அம்சம். அலர்மேலுமங்கை தாயாருக்குத் தனி சன்னதி உண்டு. இலட்சுமிவராகர் தனிசன்னதியில், கொடிமரத்துடன் இருக்கிறார். இவர் வலது காலை ஆதிசேஷனின் வால் மீதும், இடது காலைத் தலைமீதும் வைத்து, மடியில் லட்சுமியை அணைத்த கோலத்தில் இருக்கிறார். பிரதான மூர்த்தியான இவருக்கே முதல் தீபாராதனை நடக்கிறது. பிரசன்ன வெங்கடேசருக்கு விழா நடக்கும்போதும் கூட, இவரது சன்னதியிலேயே கொடி ஏற்றப்படும்.

இத்தலத்தில், ஒவ்வொரு மாதமும் திருவோண நட்சத்திரத்தில் ஓணதீபம்ஏற்றுகின்றனர். மகாபலி மன்னன், முற்பிறவி ஒன்றில், எலியாகப் பிறந்தான். சிவாலயம் ஒன்றில் வசித்து வந்த போது, ஒருமுறை அங்கிருந்த விளக்கு அணைய இருந்தது. அப்போது, விளக்கில் தற்செயலாக எலி குதித்தது. குதித்த வேகத்தில் திரி தூண்டபட்டு பிரகாசமாக எரிந்தது. இதனால், அவன் மறுபிறப்பில் மகாபலி மன்னனாக பிறந்து, திருவோண நட்சத்திரத்தில் பெருமாளால் ஆட்கொள்ளப்பட்டான். எனவே, இங்கு மாதம்தோறும் திருவோணத்தன்று அகண்ட தீபம் ஏற்றப்படுகிறது. அன்று காலையில் சீனிவாசர் யாக மண்டபத்திற்கு எழுந்தருள்கிறார். அப்போது யாகம், திருமஞ்சனம் மற்றும் திருக்கல்யாண வைபவம் நடக்கும். பெருமாள் சன்னதியில் அகண்ட தீபத்தில் நெய் விளக்கேற்றி அதனை சுவாமி பாதத்தில் வைத்து ஆராதிக்கின்றனர். இந்த தீப தரிசனம் மிகவும் விசேஷமானது. திருமண, புத்திர தோஷம் உள்ளவர்கள் தீபத்திற்கு நெய் கொடுத்து வேண்டிக்கொள்கிறார்கள்.

இங்கு சீனிவாசர், கள்ளர்பிரான் என இரண்டு உற்சவர்கள் இருக்கின்றனர். சித்திரை பிரம்மோற்சவத்தில் கள்ளபிரானும், புரட்டாசியில் சீனிவாசரும் தேர் பவனி செல்கின்றனர். சக்கரத்தாழ்வார், வேணுகோபாலர், ராமர் சன்னதிகளும் உள்ளன. மலை அடிவாரத்தில் வீரஆஞ்சநேயர் பறக்கும் நிலையில் இருக்கிறார். இவரது சன்னதியில், தங்கள் கோரிக்கையை எழுதி, மட்டைத்தேங்காயுடன் வைத்து மஞ்சள் துணியில் கட்டி வேண்டிக் கொள்கிறார்கள். அருகில் லட்சுமிகணபதி சன்னதி இருக்கிறது.

புரட்டாசி மற்றும் ஆவணி திருவோணம் இங்கு மிக விசேஷமாக கொண்டாடப்படும். புரட்டாசி திருவோணத்தில், ஏழு மலைகள் போல அன்ன நைவேத்யம் படைத்து, ஏழு நெய் தீபம், ஏழு வகையான பட்சணங்கள், காய்கறிகள் படைத்து பூஜை செய்கின்றனர்.

இத்தலம் திருவோணம் நட்சத்திரத்திற்குரிய கோயில்.

திருவிழா:

சித்திரை, புரட்டாசியில் பிரம்மோற்ஸவம்.

வேண்டுகோள்:

இங்குள்ள ஆதிவராகரிடம் வேண்டிக்கொண்டால் தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. சுவாமிக்கு வஸ்திரம் சாத்தியும், திருவோண நாளில் நெய்தீபம் ஏற்றியும் வேண்டிக்கொள்ளலாம். இங்குள்ள வராக தீர்த்தத்தில் சனி வாரம் நீராடினால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். இத்தீர்த்தத்தில் நீராடி பெருமாளை அங்கப் பிரதட்சணம் செய்தால், திருமணத்தடை நீங்கும். புத்திரப்பேறு, ஆரோக்கியம் நிறைந்த ஐஸ்வர்யம் ஆகியவை கிட்டும். ஸ்ரீ ஜெய வீர ஆஞ்சநேயரை அங்கப்பிரதட்சணம் செய்தால் தீராத வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.

நேர்த்திக்கடன்:

பெருமாளுக்கும் தாயாருக்கும் திருமஞ்சனம் செய்து பொங்கல் நைவேத்தியம் செய்கின்றனர்.

வழிகாட்டி:

இத்திருத்தலம் செங்கல்பட்டிலிருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ளது. செங்கல்பட்டு _ வேடந்தாங்கல் செல்லும் பேருந்துகள் இத்தலத்தின் வழியே செல்கின்றன. திருமலை மேல் செல்ல 500 படிக்கட்டுகள் உள்ளன. தனி வாகன பாதையும் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *