அருள்மிகு பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில், பாதூர்

அருள்மிகு பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில், பாதூர் – 606 115. விழுப்புரம் மாவட்டம்

+91- 4149 – 209 789, 93626 20173 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பிரசன்னவெங்கடேசர்
உற்சவர் அழகர்
தாயார் அலமேலு மங்கை
ஆகமம்/பூசை வைகானஸம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் பாதூர்
மாவட்டம் விழுப்புரம்
மாநிலம் தமிழ்நாடு

இப்பகுதியை ஆண்ட குறுநில மன்னனின் மனைவி, தன் முன்வினைப்பயனால், தீராத தோல் வியாதியால் பாதிக்கப்பட்டாள். எவ்வளவோ வைத்தியம் பார்த்தும் வியாதி குணமாகவில்லை. அவளது நோய் அதிகமாகி, அழகு மங்கியது. எனவே மன்னனுக்கு மனைவி மீதிருந்த அன்பு கொஞ்சம், கொஞ்சமாக மறையத்துவங்கியது. ஒருகட்டத்தில் அவளை வெறுத்து ஒதுக்கிய அவன், வேறொரு பெண்ணைத் திருமணம் செய்ய நினைத்தான். கணவனின் எண்ணத்தை அறிந்த மனைவி மிகவும் வருந்தினாள். தனது நோய் நீங்கவும், கணவனின் எண்ணத்தை மாற்றவும் வேண்டி இத்தலத்தில் பெருமாளை வேண்டினாள். அவளது பக்தியில் மகிழ்ந்த பெருமாள், வியாதியை நீக்கி அருளியதோடு, அவளை முன்பிருந்ததைவிட மேலும் அழகாக மாற்றினார். மன்னனுக்கும் நற்புத்தி கொடுத்தார். மன்னனும், வேறு திருமணம் முடிக்கும் எண்ணத்தை விட்டு, தன் மனைவியுடன் இல்லறம் நடத்தினான்.

மூலஸ்தானத்தில் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருளு கிறார். தாயார் அலமேலு மங்கை, நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், ஆண்டாள், விஷ்வக்சேனர், மத்வாச்சாரியார், ராமானுஜர், மகாதேசிகன் ஆகியோருக்கும் சன்னதி இருக்கிறது. கொடிமரத்தின் அருகே கருடாழ்வாரும், ஆஞ்சநேயரும் உள்ளனர்.

மகான்கள் ஐக்கியமான தலங்கள் பிருந்தாவனம் என்று அழைக்கப்படும். அதில் ராமானுஜர் ஐக்கியமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் விசேஷமான தலமாக இருக்கிறது. அதேபோல, இக்கோயிலில் அஹோபில மடத்தின் 36வது பட்டம் ஜீயர் அழகியசிங்கர், வண்சடகோப ஸ்ரீனிவாச மஹாதேசிகன் சுவாமிகளின் ஜீவ பிருந்தாவனம் உள்ளது. ஆவணி 7 முதல் 12 வரை சூரிய ஒளிக்கதிர் பெருமாளின் பாதத்தில் பட்டு சூரிய வழிபாடு நடக்கிறது.

இங்குள்ள மூலவருக்கு பேரழகன் என்ற சிறப்பு பெயரும் உண்டு. இவர் நின்றகோலத்தில் காட்சி தருகிறார். தாயாரின் சிறப்பு பெயர் அழகுத்தாயார்.

மன்னன் மனைவியின் வியாதியை நீக்கி அவளுக்கு அழகு தந்தும், மன்னனின் தவறான எண்ணத்தை போக்கி அவனது உள்ளம் அழகாக இருக்கும்படியும் அருளியதால் இத்தலத்து பெருமாள் அழகர்என்று பெயர் பெற்றார். தாயாரும் அழகுத்தாயார்எனப்படுகிறார். அழகர் இங்கு உற்சவராக இருக்கிறார். அழகில்லை என வருந்துபவர்கள், பெருமாள் மற்றும் தாயாருக்கு வஸ்திரம் சாத்தி, அர்ச்சனை செய்து வழிபடுகிறார்கள். அக அழகினையும், புற அழகினையும் தரும் இவரை பேரழகன்என்றும் அழைக்கிறார்கள். அழகுக்கலை நிபுணர்கள் தங்கள் தொழில் சிறக்க சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை செய்து வழிபடுகிறார்கள். வெள்ளிக்கிழமைகளில் தாயாருக்கு விசேஷ திருமஞ்சனம், குங்கும அர்ச்சனை நடக்கிறது. திருமணத்தடை உள்ளவர்கள், குழந்தைபாக்கியம் வேண்டுபவர்கள், பிரிந்த தம்பதியினர் அப்போது தாயாரை தரிசித்தால் அவர்களது வேண்டுதல் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை.

திருவிழா:

வைகுண்ட ஏகாதசியில் சொர்க்க வாசல் திறப்பு, வைகாசி விசாகத்தில் கருட சேவை, ஆடியில் ஆண்டாள்,பெருமாள் திருக்கல்யாண உற்சவம், புரட்டாசியில் 5 நாள் பிரமோற்ஸவம், நவராத்திரியில் கருட சேவை, ஐப்பசியில் பவித்ர உற்சவம், பங்குனியில் பெருமாள், தாயார் திருக்கல்யாண உற்சவம். அஹோபில மடத்தின் 36வது பட்டம் ஜீயர் அழகியசிங்கர், வண்சடகோப ஸ்ரீனிவாச மஹாதேசிகன் சுவாமிகளின் அவதார நட்சத்திரமான ஆடி பூசத்தில் இக்கோயிலில் திருவிழா கொண்டாடப்படுகிறது.

வேண்டுகோள்:

வேதம் படிக்க விரும்புபவர்கள், கல்வியறிவு பெருக, தொழில் மேன்மையடைய, நோய்கள் குணமாக பிருந்தாவனத்தில் நெய் தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு.

அழகுக்கலை பயில்பவர்களும், அழகு நிலையம் நடத்துபவர்களும் கலையில் சிறந்து திகழ இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:

சுவாமி, தாயாருக்கு நீல வஸ்திரம் சாத்தி, விசேஷ திருமஞ்சனம் செய்து வழிபடுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *