அருள்மிகு பிரசன்ன ராகவப்பெருமாள், ராயபுரம், சென்னை

அருள்மிகு பிரசன்ன ராகவப்பெருமாள், ராயபுரம், சென்னை

சென்னை ராயபுரத்தில் எழுந்தருளியிருக்கும் பிரசன்ன ராகவப்பெருமாளை பலர் அறிந்திருக்கமாட்டார்கள். திருமால் வாமன அவதாரம் எடுத்து மஹாபலி சக்ரவர்த்தியிடம் பிட்சை கேட்டு வந்தபோது மஹாபலியின் கமண்டலத்திலிருந்து நீர் வராமல் தடுத்தார் சுக்ராச்சாரியார். அப்போது வாமனனாகிய திருமால், தர்ப்பைப்புல்லால் கமண்டலத்தில் அடைப்புதீரச் செய்தபோது, வண்டாக மறைந்திருந்த சுக்ரனின் ஒரு கண்பார்வை பறிபோயிற்று. தானம் அளிப்பதைத் தடுத்த பாவம் நீங்கிட, சுக்ரன் கும்பகோணத்தில் அமைந்துள்ள திருவெள்ளியங்குடிக்குச் சென்று திருமாலை வழிபட்டு சாபம் நீங்கப் பெற்றார். அதோடு இழந்த கண்ணொளியையும் திரும்ப அடைந்தார். அதுசமயம் கருட பகவான் திருமாலிடம், அனைவரும் காணும் ஸ்ரீராமனாக காட்சிதர வேண்டும் என்று வேண்டிக் கொண்டதன் பேரில், தனது சங்குசக்ரங்களை கருடனிடம் கொடுத்துவிட்டு, வில் அம்பு ஏந்தி ஸ்ரீராமனாகக் காட்சி தந்தார் என்பதால், அவருக்குக் கோலவில்லி ராமன் என்ற பெயர் ஏற்பட்டது. இராமன் என்பதற்கு அடையாளமாக, வில் அம்புகள் தற்போதைய அமைப்பில் இல்லாமல், திருமால் சதுர்புஜத்துடன் சங்கு சக்ரதாரியாய் வில் அம்பு இல்லாமலே கோலவில்லிராமன் என்ற திருப்பெயருடன் காட்சியளிக்கிறார். அதே போன்று திருநாங்கூர் திவ்யதேசத்திலும் ஒரு கோலவில்லிராமனை வில்லுடன் தரிசிக்கலாம்.

இப்புராணக் கதையை நினைவூட்டும் வகையில் சென்னை ராயபுரத்தில் பிரசன்ன ராகவனாகக் காட்சியளிக்கிறார். மூல மூர்த்தி, சதுர்புஜங்களுடன் ஸ்ரீனிவாசனாகக் காட்சியளித்தாலும், உற்சவமூர்த்தியின் திருக்கோலம் மாறுபட்ட நிலையிலிருக்கிறது. அவர் சங்கு சக்ரதாரியாய் முதுகில் அம்புராதூணியுடன் காட்சியளிப்பதும், அவருக்கு வலது பக்கத்தில் சீதா பிராட்டியும், இடது புறத்தில் இலட்சுமணன் அஞ்சலி அஸ்த்ததுடன் முதுகில் அம்புராத்தூணியுடனும் காட்சியளிப்பது மிகமிக அபூர்வமான அமைப்பாகும். அருகே அமர்ந்த நிலையில் அஞ்சலி ஹஸ்த்ததுடன் அனுமன், வித்தியாசமாய்க் காட்சியளிப்பது மாறுதலான காட்சி. திருமாலின் நூதனக் காட்சியை இங்கு காணலாம். சென்னை ராயபுரத்தில், ஆதம்தெருவில் இக்கோயில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *