அருள்மிகு லெட்சுமி ஹயக்ரீவர் திருக்கோயில், முத்தியால் பேட்டை

அருள்மிகு லெட்சுமி ஹயக்ரீவர் திருக்கோயில், முத்தியால் பேட்டை -605 003. புதுச்சேரி

+91- 413 226 0096 94431 04383

காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் லெட்சுமி ஹயக்ரீவர்
தாயார் மகாலட்சுமி
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் முத்தியால்பேட்டை
மாவட்டம் புதுச்சேரி
மாநிலம் புதுச்சேரி

பகவான் விஷ்ணு, பிரளய காலத்தில் இந்த உலகையும் மக்களையும் தன்னுள்ளே தாங்கி, ஆலிலை மேல் பாலகனாய் பிரளயகால சமுத்திரத்தில் யோக நித்திரை செய்து வந்தார். பின் உலகைப் படைப்பதற்காக, தன் நாபிக்கமலத்திலிருந்து பிரம்மனைப் படைத்து நான்கு வேதங்களையும் உபதேசித்தார். பிரம்மனும் படைப்புத்தொழிலை ஆரம்பித்தார். ஒருமுறை பெருமாளின் நாபிக்கமலத்தில் உள்ள ஓர் இதழில் இரண்டு தண்ணீர்த்திவலைகள் தோன்றி, மது, கைடபன் என்ற அசுரர்களாக மாறினர். இவர்கள் பெருமாளிடமிருந்து பிறந்த தைரியத்தில், பிரம்மனிடமிருந்த வேதங்களை அபகரித்து, தாங்களே படைப்புத்தொழில் புரிய ஆசைப்பட்டனர். குதிரை முகம் கொண்டு, பிரம்மனிடமிருந்து வேதத்தைப் பறித்துக்கொண்டு, பாதாளத்தில் ஒளித்து வைத்தனர். வேதங்களை இழந்த பிரம்மன் பெருமாளைச் சரணடைந்தார். பெருமாள் வேதங்களை மீட்க பாதாள உலகம் வர, அங்கே அசுரர்கள் குதிரை வடிவில் இருப்பதைக்கண்டார். உடனே தானும் குதிரை முகம் கொண்டு அவர்களுடன் போரிட்டு, வேதங்களை மீட்டு பிரம்மனிடம் கொடுத்தார். அசுரர்கள் கைபட்டதால் தங்களது பெருமை குன்றியதாக நினைத்த வேதங்கள், தங்களை புனிதமாக்கும்படி பெருமாளை வேண்டின. குதிரைமுகத்துடன் இருந்த பெருமாள் வேதங்களை உச்சிமுகர்ந்ததால், அந்த மூச்சுக்காற்றில் வேதங்கள் புனிதமடைந்தன. அசுரர்களுடன் போரிட்ட ஹயக்ரீவர் உக்ரமாக இருந்ததாகவும், அவரை குளிர்விக்க மகாலட்சுமியை அவரது மடியில் ஸ்தாபிதம் செய்ததாகவும் கூறப்படுவதுண்டு. பின்னர் இவரை லட்சுமி ஹயக்ரீவர்என்றனர். வேதங்களை மீட்டவர் என்பதால், ஹயக்ரீவர் கல்வி தெய்வமாகிறார். கல்வி உள்ள இடத்தில் லட்சுமியாகிய செல்வம் சேரும் என்பதால், லட்சுமியை இடது தொடையில் அமர்த்தியிருக்கிறார்.

இத்தலப் பெருமாள் வலது கண்ணால் பக்தர்களையும், இடதுகண்ணால் லட்சுமியையும், தாயார் தன் வலது கண்ணால் பெருமாளையும், இடது கண்ணால் பக்தர்களையும் பார்த்த நிலையில் உள்ளனர். மூலவருக்கு கீழ் இயந்திரம் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது. கும்பகோணம் சாரங்கபாணி கோயில் கோமளவல்லித் தாயாரிடம் ஞானப்பால் அருந்திய, லட்சுமிகுமார தாத்த தேசிகர் இத்தலத்தில் அருள்பாலிக்கிறார். இவர் ராமாயணத்தை விடாது பாராயணம் செய்து, அனுமனைத் தரிசித்ததாக கூறுவர்.

இத்தல பெருமாளின் திருமேனி சாளக்கிராமத்தால் ஆனது. ஹயக்ரீவரின் இடது கை தாயாரையும், தாயாரின் வலது கை ஹயக்ரீவரையும் ஆலிங்கனம் செய்துள்ளது. பொதுவாக தாயார் மட்டுமே ஹயக்ரீவரை ஆலிங்கனம் செய்த நிலையில் சிலைகள் வடிக்கப்படும். இங்கே இருவரும் ஆலிங்கனம் செய்துள்ளதால், இவரை வணங்கும் தம்பதியர், ஒற்றுமையுடன் திகழ்வர் என்பது நம்பிக்கை.

மிகவும் பிரசித்தி பெற்ற திருவஹீந்திரபுரம் யோக ஹயக்ரீவர் கோயிலுக்கும், செங்கல்பட்டு செட்டிப்புண்ணியம் யோக ஹயக்ரீவர் கோயிலுக்கும் நடுவில் இத்தலம் அமைந்துள்ளது.

திருவிழா:

ஆவணி திருவோணத்தில் தேர்த்திருவிழாவும், அதற்கு 10 நாள் முன்பாக கொடியேற்ற நிகழ்ச்சியும்நடக்கிறது.

வேண்டுகோள்:

படிப்பில் மந்தம் உள்ளவர்களுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. பேசும் திறனில் குறைபாடு உள்ளவர்கள் இங்கு வழிபாடு செய்து பலனடைகிறார்கள்.

நேர்த்திக்கடன்:

பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து, துளசியால் அர்ச்சனை செய்கின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *