அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் கோயில், ஆதி திருவரங்கம்
அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் கோயில், ஆதி திருவரங்கம்– 605 802 விழுப்புரம் மாவட்டம்.
+91- 4153- 293 677 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | ரங்கநாத பெருமாள் |
தாயார் | – | ரங்கநாயகி |
தல விருட்சம் | – | புன்னாக மரம் |
தீர்த்தம் | – | பெண்ணையாறு |
ஆகமம்/பூசை | – | 1000-2000 வருடங்களுக்கு முன் |
ஊர் | – | ஆதிதிருவரங்கம் |
மாவட்டம் | – | விழுப்புரம் |
மாநிலம் | – | தமிழ்நாடு |
ஒருமுறை சந்திரன் தனது மனைவிகளின் சாபத்தினால் கலைகள் குறைந்து, ஒளி மங்கிப் பொலிவு இழந்து வருந்தினான். பின் தேவர்களின் அறிவுரையின் படி இத்தலம் வந்து பெருமாளை வணங்கி, தனது குறைகள் நீங்கப்பெற்றான். தென்கிழக்கிலுள்ள தீர்த்தத்தில் நீராடித் தவம் செய்ததால் இந்த தீர்த்தத்திற்கு சந்திர புஷ்கரணி என்ற பெயர் உண்டாயிற்று. தேவர்கள் பெருமாளை இதே இடத்தில் எப்பொழுதும் எழுந்தருளியிருக்க வேண்டும் என்று வேண்ட, பெருமாளும் கருணைகூர்ந்து தேவ தச்சன் விஸ்வகர்மாவை அழைத்து, தன்னைப்போலவே ஒரு விக்ரகத்தை செய்யும்படி கூறினார். தேவதச்சனும் மிகப்பெரிய பள்ளி கொண்ட பெருமாளை வடிவமைத்து ஒரு ஆலயம் நிர்ணயித்து அதில் பிரதிஷ்டை செய்து விட்டார். பெருமாளும் தேவர்களின் வேண்டுகோளின் படி இத்தலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
சோமுகன் எனும் அசுரன் தேவர்களை வெல்வதற்காக வேதங்களை அபகரித்தான். தேவர்களும் முனிவர்களும் மிகுந்த கவலை அடைந்து மகாவிஷ்ணுவிடம் முறையிட்டு வேதங்களை மீட்டுத்தருமாறு வேண்டினர். இவர்களது வேண்டுகோளை ஏற்ற நாராயணன், சமுத்திரத்தில் ஒளிந்து கொண்டிருந்த சோமுகனை அழித்து வேதங்களை மீட்டு கொண்டுவந்து, தேவர்களிடம் கொடுத்தார். இத்தலத்தில் பிரம்மனுக்கு உபதேசமும் செய்தார்.
சுரதகீர்த்தி என்ற மன்னனுக்கு எல்லா செல்வங்கள் இருந்தும், புத்திர பாக்கியம் இல்லாததால் மிகவும் வருந்தினான். நாரதரின் அறிவுரையின் பேரில் இவன், இத்தலத்திற்கு வந்து தனது மனைவியுடன் வேண்ட, பெருமாளின் அருளால் நான்கு குமாரர்களை பெற்று மகிழ்ந்தான்.
இத்தலத்தை ஆழ்வார்கள் யாரும் மங்களாசாசனம் செய்ய வில்லை என்று கருதி வந்த போதிலும் திருமங்கையாழ்வார் பெரிய திருமொழியில் “வொருவாதாள்” என தொடங்கும் பத்து பாசுரங் களிலும், “ஏழை ஏதலன்” எனத் தொடங்கும் பத்து பாசுரங்களிலும் இத்தலப் பெருமாளை மங்களாசாசனம் செய்துள்ளார் என்பதற்கு கோயில் கல்வெட்டுக்களிலும் பாசுரங்களிலும் சான்றுகள் உள்ளது. வைணவ ஆச்சாரியார் வேதாந்த தேசிகனும் நிபாசதிலகத்தில் இப்பெருமாளை மங்களா சாசனம் செய்துள்ளார் என்றும் நூல்கள் தெரிவிக்கிறது.
தமிழகத்திலேயே மிகப் பெரிய பெருமாளில் இவரும் ஒருவர். இவர் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை விடப் பெரியவர். இதனால் இந்த பெருமாள் “பெரிய பெருமாள்” என அழைக்கப்படுகிறார்.
திருவிழா:
புரட்டாசி சனிக்கிழமைகள் மற்றும் பவுர்ணமி, வைகுண்ட ஏகாதசி.
வேண்டுகோள்:
கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க வேண்டுகிறார்கள்.
நேர்த்திக்கடன்:
பெருமாளுக்கும் தாயாருக்கும் திருமஞ்சனம் செய்து துளசி அர்ச்சனை செய்கிறார்கள்.
Leave a Reply