அகிலவல்லி உடனுறை ஆதிவராகப் பெருமாள் கோயில், திருவிடந்தை
அகிலவல்லி உடனுறை ஆதிவராகப் பெருமாள் கோயில், திருவிடந்தை(திரு விடவெந்தை), மகாபலிபுரம்
வராகப்பெருமாள் காலவ முனிவரின் 365 மகள்களையும் தினம் ஒரு கன்னியாக மணந்தருள்புரிந்தார். அதனால் இவருக்கு நித்ய கல்யாணப் பெருமாள் என்ற பெயர் நிலைத்துவிட்டது.
இப்பெருமாள், சென்னையிலிருந்து மகாபலிபுரம் செல்லும் பாதையில் கோவளத்தையடுத்து 2 கி.மீ. தொலைவில் அகிலவல்லி உடனுறை ஆதிவராகப் பெருமாளாக கோயில் கொண்டு காட்சியளிக்கிறார்.
இத்தலத்தில், மூலவரான ஆதி வராகர், தமது இடது தொடையில் மகாலக்குமியை இருத்தி, அணைத்தபடி காட்சியளிப்பதால், இத்தலத்திற்குத் திரு விடவெந்தை என்ற பெயர் ஏற்பட்டு பிறகு மருவி திருவிடந்தையானது.
திருவாகிய இலக்குமியை இடபாகத்தில் இருத்தியுள்ள எந்தை என்பதே, திருவிட வெந்தை என்ற திருநாமத்தின் பொருள். இதே ஆதிபிரான் தனது வலது பாகத்தில் இலக்குமியை அமர்த்தி, அணைத்தவாறு காட்சியளிக்கும் தலம், இத்தலத்திற்கு அருகிலேயே இருப்பது, பலருக்கும் தெரிந்திராது. அவர்தான் திருவலவெந்தை ஆதிபிரான்.
மகாபலிபுரம் பழைய கலங்கரை விளக்கம் பகுதியில் கோயில் கொண்டுள்ளார் திருவலவெந்தை ஆதிபிரான்.
பல்லவர்கால குடவரைக் கோயிலமைப்பில் அமைந்துள்ளது இத்திருக்கோயில்.
பல்லவ மன்னனான அரிகேசரிவர்மன், திருவிடந்தை வராகமூர்த்தியிடம் மாறாத பக்தி கொண்டவன். அவன், தினமும் அதிகாலையிலேயே திருவிடந்தை திருத்தலம் சென்று அவரை வணங்கிவிட்டு, அடியவர்களுக்கு அன்னமளித்த பிறகே, தான் உண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.
ஒரு நாள், பல அலுவல்கள் காரணமாக இரவு நெடுநேரம் விழித்திருந்ததால், விடியலில் எழத்தாமதமானது. இறைவனை தரிசிக்கச் செல்ல காலதாமதமாகி விட்டதே எனக்கவலையுடன் அவசர அவசரமாகப் புறப்பட்டு திருவிடந்தைக்குச் செல்ல முற்பட்டான். அந்த சமயத்தில், மிகவும் ஏழையான முதியவர் ஒருவரும் அவரோடு ஒரு சிறுமியும் அரசனிடம் வந்து மிகவும் பசியாகவுள்ளதென்றும், உணவிட வேண்டுமெனவும் கேட்டனர்.
இறைவழிபாடு செய்த பின்னரே அன்னதானம் செய்யும் வழக்கம் உள்ளவன் அரசன் என்றாலும் பசித்தோர்க்கு உணவிடுவதே பகவானுக்குப் பிடித்த வழிபாடு என நினைத்தான். எனவே, திருவிடந்தைப் பெருமாளை மனதாலேயே பணிந்து வணங்கிவிட்டு, அவர்களுக்கு அன்னமிட்டான்.
பல்லவனின் பண்பும், தன்மீது அவனுக்குள்ள பக்தியும் வெளிப்பட வேண்டும் என்று மனம் கொண்டே வறியவன் வடிவம் கொண்டு வந்திருந்தார் வராகமூர்த்தி. அன்னமிட்டு உபசரித்த அரசனின் அன்பால் மகிழ்ந்தவர், அவனது பக்தியை மெச்சி, ஆதி வராக மூர்த்தியாய், தனது வலது மடியில் இலக்குமியை இருத்தியபடி அவனுக்குத் திருக்காட்சியளித்தார்.
பகவான் தனக்குக் காட்சியளித்த வடிவிலேயே அவருக்குத் திருக்கோயில் அமைத்தான் பல்லவன். வராகபிரான் வலப்புறத்தில் இலக்குமியைக் கொண்டபடியால் இத்தலம் திருவலவெந்தையானது. திருவிடந்தை நித்யகல்யாணப் பெருமாளே இங்கும் காட்சியளித்ததால், இத்தல வராகமூர்த்தியும் வணங்கிடும் பக்தர் வாழ்வில் திருமணத் தடை, மகப்பேறு இன்மை, சர்ப்பதோசம் போன்ற குறைகளைக் களைந்து நற்பலன்களை வாரி வழங்குகிறார்.
மூலவர் சுமார் ஆறடி உயரமுள்ளவராக அற்புதமான திருக்காட்சி அளிக்கிறார். தரிசிக்கும்போது எம்பிரான், கண்முன்னே நேரில் தோன்றி சேவை சாதிப்பது போன்ற உணர்வே ஏற்படுகிறது. சமீபத்தில் திருப்பணிகள் நடந்திருப்பதால் திருக்கோயில் பளிச்சென்று பொலிவுடன் விளங்குகிறது.
கோடை விடுமுறையில் மகாபலிபுரம் செல்லும் அன்பர்கள் அவசியம் இத்திருக்கோயிலுக்குச் சென்று தரிசித்து வரலாம்.
Leave a Reply