அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோயில், கோயம்புத்தூர்

அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோயில், கோயம்புத்தூர்– 641 018, கோயம்புத்தூர் மாவட்டம்

+91 – 422- 230 0360, 230 4106, 93632 16808 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் தண்டுமாரியம்மன் (டென்ட்மாரியம்மன்)
தல விருட்சம் துவட்டிமரம்
தீர்த்தம் சுனை நீர்
ஆகமம் திருமுறை ஆகமம்
பழமை 500 வருடங்களுக்கு முன்பு
புராணப் பெயர் கோவன்புத்தூர்
ஊர் கோயம்புத்தூர்
மாவட்டம் கோயம்புத்தூர்
மாநிலம் தமிழ்நாடு

வணிகம் புரிவதற்காக வந்து நாட்டைக் கைப்பற்றிய வெள்ளையர்களிடம் இருந்து போரிட்டு, நாட்டை மீட்கப் போராடிய திப்பு சுல்தான் தனது படைவீரர்களை கோவை கோட்டை மதில்களுக்கிடையில் ஓர் கூடாரத்தில் தங்க வைத்திருந்தார். அங்கு தங்கியிருந்த வீரர்களில் ஒருவன் அம்பாளின் மீது மிகுந்த பக்தி கொண்டு அவளைத் தினமும் வணங்கி வந்தான்.

அப்போது,ஒருநாள் இரவில் அவனது கனவில் தோன்றிய மாரியம்மன், தான் வீரர்கள் குடியிருக்கும் பகுதியில், வேப்பமரங்களுக்கும் காட்டுக்கொடிகளுக்கும் இடையே இருக்கும் நீர்ச்சுனைக்கு அருகில் நீண்ட காலமாக வசித்து வருவதை உணர்த்தி, தன்னை அங்கேயே வழிபடும்படி கட்டளையிட்டாள்.

கனவில் அம்பாளின் அரிய திருமேனியைக் கண்ணுற்ற அவ்வீரன் மறுநாள் காலையில், அம்பாள் வீற்றிருப்பது போல் உணர்த்திய இடத்திற்கு சென்று வேப்பமரங்களின் இடையே தேடினான். அப்போது அங்கே கனவில் கண்ட தெய்வமாக அம்பாள் அங்கே வீற்றிருந்தாள்.

அங்கேயே அம்பாளை வணங்கிய அவன் சக படைவீரர்களுக்கும், கனவில் தோன்றி அருள்புரிந்த அம்மன் வீற்றிருந்த இடத்தை காண்பித்தான். பின், படை வீரர்கள் அனைவரும் ஒன்று கூடி இவ்விடத்தில் ஆதியில் சிறிய மேடை போல அமைத்து வழிபட்டு, காலப்போக்கில் பெரிய கோயிலாக எழுப்பினர்.

இத்தல விநாயகர் ராஜகணபதி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இங்கு சர்க்கரைப்பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபடுகின்றனர்.

கோயிலின் சுற்றுப்பிரகாரத்தில் துர்க்கை, தெட்சிணாமூர்த்தி, இலட்சுமி, முருகன், கருப்பராயன், முனியப்பன் ஆகியோர் அருள்புரிகின்றனர்.

படை வீரர்கள் தண்டு மாரியம்மனை வணங்கி வந்த நேரத்தில், ஒரு சமயம், பெரும்பாலான வீரர்களுக்கு அம்மை நோய் தோன்றியது. அவர்கள் அம்மை விலக அம்பாளை வணங்கி, தண்டுக்கீரை சாறால் அபிஷேகம் செய்து வழிபட்டு, அத்தீர்த்தத்தைப் பருகிட, அனைவருக்கும் ஒரே நேரத்தில் அம்மை குணமான அதிசயம் நிகழ்ந்தது.

மற்றொரு கருத்தின் படி தண்டுஎன்றால் படை வீரர்கள் தங்கும் கூடாரம்எனப்பொருள். அங்கு கிடைத்த அம்மன் என்பதால் இந்த அம்மன் தண்டுமாரியம்மன்என்று அழைக்கப்படுவதாகச் சொல்கின்றனர். அனைத்து மதத்தினரும் வழிபடும் தெய்வமாகத் திகழும் தண்டுமாரியம்மன் கோவை நகரின் காவல் தெய்வமாக இருந்து நகரின் இரு கண்களில் ஒன்றாக இருந்து அருள்பாலிக்கிறாள்.

இங்கு அம்மன் சுயம்புவாக அருள்பாலிக்கிறார்.

திருவிழா: நவராத்திரி

அம்மை நோய் குணமாக, தொழில் விருத்தியடைய, குடும்பம் சிறக்க, தீராத பிணிகள் தீர்ந்திட இங்கு வேண்டிக்கொள்கின்றனர்.

பிரார்த்தனை நிறைவேறியதும் அம்மனுக்கு பால் அபிசேகம் செய்து பால்குடம், அக்னிசட்டி எடுத்தும் அங்க பிரதட்சணம் செய்தும் நேர்த்திக்கடன் செய்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *