அருள்மிக சூலக்கல் மாரியம்மன் திருக்கோயில், சூலக்கல்

அருள்மிக சூலக்கல் மாரியம்மன் திருக்கோயில், சூலக்கல் – 642110 கோயம்புத்தூர் மாவட்டம்.

+91-4259- 246246 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சூலக்கல் மாரியம்மன்
தல விருட்சம் மாவிலிங்க மரம்
பழமை 500 வருடங்களுக்கு முன்பு
ஊர் சூலக்கல்
மாவட்டம் கோயம்புத்தூர்
மாநிலம் தமிழ்நாடு

வேலாயுதம்பாளையம் என்ற பகுதியை சேர்ந்த விவசாயிகளின் பசுக்கள் சூலக்கல் பகுதிக்கு மேய வந்தன. மாலையில் திரும்பும் போது பசுக்களின் பால் அளவு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வந்தது. இதை கண்டுபிடிப்பதற்காக விவசாயிகள் பசுக்கள் மேயும் பகுதிக்கு சென்று பார்த்தனர். அப்போது பசுக்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து ஓரிடத்தில் மொத்தமாக பால் சுரந்து கொண்டிருந்தது.

இதைக்கண்ட விவசாயிகள் அந்த பசுக்களை விரட்ட மாடுகள் மிரண்டு போய் ஓடியது. அப்போது ஒரு மாட்டின் கால், பால் சுரந்த இடத்தில் மாட்டிக்கொண்டது. மாடு காலை உருவிக்கொண்டு ஓடிய போது அந்த இடத்தில் மண்ணில் புதைந்திருந்த சுயம்பு வெளிப்பட்டு சிறிது சேதமடைந்தது.

சுயம்பு வடிவக் கல்லுக்கு அருகில் அம்பிகையின் சூலம் இருப்பதைக்கண்ட விவசாயிகள் இந்த
பகுதியை சூலக்கல் என அழைத்தனர்.(சூலக்கல் மாரியம்மன் கோயிலில் உள்ள சுயம்பு மூர்த்தியில் பசுவின் கால் பட்டு உடைந்த அடையாளம் இன்றும் உள்ளது)

பசுவின் சொந்தக்காரர் கனவில் தோன்றிய அம்பிகை, சூலக்கல்லில் சுயம்புவாக உருவெடுத்திருப்பதையும், சுயம்புவை சுற்றி கோயில் எடுக்குமாறும் அருளினார். அதன்படி சுயம்பு மூர்த்திக்கு கருவறை மண்டபமும், மகாமண்டபமும் அமைக்கப்பட்டது.

இத்தலத்தின் நுழைவு வாயிலில் தீபஸ்தம்பமும் அடுத்து கொடி மரமும் நம்மை வரவேற்கிறது. இடது பக்கம் தீர்த்தக்கிணறு அமைந்துள்ளது.

இங்கு அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இதில் பசுவின் கால் பட்டு உடைந்த அடையாளம் இன்றும் உள்ளது.

சூலக்கல் மாரி வடக்கு திசை நோக்கி எழுந்தருளி உள்ளதால் வடக்கு வாயிற் செல்விஎன சங்க இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது. இங்கு அபிசேகம் ஆராதனை எல்லாம் சுயம்புவிற்கே செய்யப்படுகிறது. சுயம்புவின் அருகில் மாரியம்மன் சிலை வடிவில் காட்சியளிக்கிறார்.

கோவை மாவட்டத்தில் சிறப்பு பெற்ற மாரியம்மன் கோயில்களில் சூலக்கல் மாரியம்மன் கோயிலும் ஒன்று.

சுமார் 400 ஆண்டு பழமையான கருவறையில் அருள் வழங்கும் அம்மனாக மாரியம்மன், வலது காலை மடித்து அமர்ந்த நிலையில், வலது கைகளில் உடுக்கையும், கத்தியும், இடது கைகளில் சூலமும் கபாலமும் தாங்கி இருக்கிறாள்.

சித்திரை மாதம் கடைசி செவ்வாய் தேர்த்திருவிழா கடந்த 200 ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பகுதியின் சுற்று வட்டாரத்திலுள்ள கோயில்களுக்கெல்லாம் இங்கிருந்து தீர்த்தம் கொண்டு சென்று, அங்கு அபிஷேகம் செய்த பின் தான் திருவிழா கொண்டாடுகின்றனர்.

கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளமானோர் சூலக்கல் மாரியம்மன் சன்னதியில் தங்கி காலை, மாலை இரு நேரமும் அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட தீர்த்தத்தை கண்ணில் இட்டுக் கொள்கின்றனர். அம்மனின் அருளால் கண்நோய் விரைவில் குணமாகிறது. கண் சம்பந்தப்பட்ட நோயை விரைவில் தீர்த்து வைப்பது சூலக்கல் மாரியின் தனி சிறப்பு.

மகப்பேறு இல்லாதவர்கள் இங்கு வந்து மகமாயியை வழிபட்டு, தல விருட்சமான மாவிலிங்க மரத்தில் தொட்டில் கட்டி வழிபாடு செய்தால் குழந்தை பாக்கியம் நிச்சயம் என்பது ஐதீகம்.

அம்பாளுக்கு அபிசேகம் செய்தும், புத்தாடை அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *