அருள்மிகு சரசுவதிஅம்மன் திருக்கோவில், பனிசிகாடு

அருள்மிகு சரசுவதிஅம்மன் திருக்கோவில், பனிசிகாடு, கோட்டயம் மாவட்டம், கேரளா மாநிலம்.

+91-0481 – 233 0670, 233 0020 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 5.30 மணி முதல் 9.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சரசுவதி அம்மன்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்பு
ஊர் பனிசிகாடு
மாவட்டம் கோட்டயம்
மாநிலம் கேரளா

இவ்வூரில் ஒரு பெருமாள் கோயில் இருந்தது. கிழுப்புரம், கரிநாடு, கைமுக்கு என்ற மூன்று நம்பூதிரி குடும்பத்தினர் பூஜை செய்து வந்தனர்.
இவர்களில் கிழுப்புரம் தாமோதரன் குடும்பத்தினருக்கு வாரிசு இல்லை.

இதுகுறித்து, சரசுவதியின் சொரூபமான கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்குச் சென்று அம்பாளிடம் தன் குறை சொல்லி, அங்கேயே தங்கி வழிபட்டார்.

ஒரு நாள் அவரது கனவில் தோன்றிய அம்பிகை, “பூர்வ ஜென்ம வினைப்பயனால் இப்பிறவியில் உனக்கு குழந்தை பாக்கியம் இல்லை. உன் வீட்டின் அருகில் உள்ள நம்பூதிரியின் வீட்டில் ஒரு குழந்தை பிறக்கும். அதைத் தத்தெடுத்து வளர்த்து வாஎன்றாள். அதன்படி பக்கத்து வீட்டில் பிறந்த குழந்தையைத் தத்து கொடுக்கும்படி கேட்டார் தாமோதரன்.
அவர்களோ தங்களுக்கு அடுத்த குழந்தை பிறந்தால், தத்து கொடுப்பதாகச் சொல்லிவிட்டனர்.

வருத்தமடைந்த தாமோதரன், மூகாம்பிகை கோயிலுக்கு, தான் கொண்டு சென்ற குடையுடன் பெருமாள் கோயிலுக்கு வந்தார். குடையை ஓரிடத்தில் வைத்து விட்டு, கோயில் குளத்தில் நீராடினார். திரும்பி வந்து குடையை எடுத்த போது அதை எடுக்க முடியவில்லை.

அப்போது அசரீரி தோன்றி,”தாமோதரா. குழந்தை தத்து கிடைக்காதது பற்றி வருந்தாதே. ஆதிசங்கரர் இங்கிருந்து மூகாம்பிகையை கொல்லூருக்கு கொண்டு சென்று பிரதிட்டை செய்தார். இப்போது அவளது அம்சமான சரசுவதி, உனது குடையில் அமர்ந்து உன்னுடன் வந்திருக்கிறாள். நீ இங்குள்ள காட்டிற்குள் போ. உனக்கு ஒரு குழந்தை வடிவ சரசுவதி சிலை கிடைக்கும். அதை இத்தலத்தில் பிரதிஷ்டை செய்து, அதில், குடையிலிருக்கும் சரசுவதியை ஆவாஹனம் செய்து(எழுந்தருளச் செய்தல்) பூசித்து வாஎன்றது. அதன்படி சரசுவதி சிலையைக் கண்டெடுத்த தாமோதரன், பெருமாள் தலமான இங்கு பிரதிட்டை செய்து வழிபட்டார்.

தாமோதரன் நம்பூதிரிக்கு நேரடி வாரிசு இல்லை என்பதால், அவரது உறவினர்கள், அவர் பூஜித்த சரசுவதிக்கு எதிரில், மேற்கு நோக்கி ஒரு கல்லை பிரதிட்டை செய்து அதை சரசுவதியாகக் கருதி வழிபட்டு வருகின்றனர். அதை மட்டுமே நாம் பார்க்க முடியும்.

தாமோதரன் பூசித்த சரசுவதியைச் சுற்றிலும் வெற்றிலை கொடிகள் சூழ்ந்துவிட்டது. இதற்கு அடியில், மூகாம்பிகை கோயிலில் இருந்து சரசுவதி எழுந்தருளி வந்த குடை இருக்கிறது. இதை பக்தர்கள் தரிசிக்கலாம். ஆனால், குழந்தை சரசுவதியைப் பார்க்க முடியாது.

சரஸ்என்றால் தண்ணீர் என்றும் வதிஎன்றால் தேவிஎன்றும் பொருள். இதனடிப்படையில் கோயிலை சுற்றிலும் குளம் அமைந்து உள்ளது. சரசுவதி கோயில் அருகில் நம்பூதிரிகள் பூசித்த பெருமாள் கோயிலும் உள்ளது.

கோபுர வாசலில் இருந்து 30 அடி பள்ளத்தில் கோயில் அமைந்துள்ளது.

திருவிழா: நவராத்திரி, சரசுவதி பூஜை

பெற்றோர் தங்கள் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கும் முன்பும், அவர்களது பிறந்த நாளின் போதும் பஞ்சாமிர்தம், பால்பாயாசம் படைத்து சிறப்பு பூசை செய்து வழிபடுகிறார்கள். நவராத்திரியின்போது சரசுவதியைக் குழந்தையின் வடிவில் அலங்காரம் செய்து பூசை செய்யப்படுகிறது.

குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களும், அடிக்கடி உடல் நலம் பாதிக்கும் குழந்தைகள் குணமடையவும் நவராத்திரி பூசையில் பங்கேற்கலாம்.

பிரார்த்தனை நிறைவேறியவர்கள், தாங்கள் விரும்பிய பொருட்களை காணிக்கையாகச் செலுத்துகிறார்கள்.

2 Responses to அருள்மிகு சரசுவதிஅம்மன் திருக்கோவில், பனிசிகாடு

  1. அருமையான தரிசனத்திற்கு நன்றி.

  2. மிக்க நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *