அருள்மிகு பிரத்யங்கிராதேவி திருக்கோயில், மொரட்டாண்டி
அருள்மிகு பிரத்யங்கிராதேவி திருக்கோயில், மொரட்டாண்டி – 605 111 புதுச்சேரி மாவட்டம்.
**************************************************************
+91-413-320 4288 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 7 மணி முதல் 1 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | பிரத்யங்கிராதேவி(அபராஜிதா) |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் |
ஊர் | – | மொரட்டாண்டி |
மாவட்டம் | – | புதுச்சேரி |
மாநிலம் | – | புதுச்சேரி |
இராமரையும், இலட்சுமணனையும் தன் படைபலத்தால் போரிட்டு வெற்றி பெற முடியாது என்பதை அறிந்தான் ராவணனின் மகன் இந்திரஜித். எனவே நிரும்பலை என்ற இடத்தில் தேய்பிறை அஷ்டமி தினத்தில் நடுநிசியில் மிக ரகசியமாக மகா பிரத்யங்கிரா யாகம் நடத்தி, இராம, இலட்சுமண ர்களை அழித்து விடலாம் என நினைத்தான்.
இந்தத் தகவலை, இந்திரஜித்தின் சித்தப்பா, விபீடணனின் உதவியால் ஆஞ்சநேயர் அறிந்தார். இந்திரஜித் இந்த யாகத்தைப் பூர்த்தி செய்துவிட்டால், அவனை வெல்ல யாராலும் முடியாது என அறிந்து, முதலில் யாகத்தையும், பின் இந்திரஜித்தையும் அழித்தார்.
இந்த யாகம் செய்த இடத்தில் தான் பிரத்யங்கிரா தேவிக்குத் தற்போது கோயில் கட்டப்பட்டுள்ளது.
இத்தலத்தில் பிரளய விநாயகர், பாதாள பிரத்யங்கிரா தேவி, துர்க்கை, தட்சிணாமூர்த்தி, ஹயக்கிரீவர், சண்டிகேசுவரர், அஷ்டதிக் பாலகர்களான இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன், வாஸ்து பகவான், தன்வந்திரி, பிராம்மி, மாகேசுவரி, வைணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டீ, உக்ர நரசிம்மர், மகாலட்சுமி, சக்கரத்தாழ்வார், காலபைரவர் என ஒவ்வொருவருக்கும் தனித்தனி சன்னதி உண்டு.
இங்கு பிரத்யங்கிரா தேவி 72 அடி உயரத்தில் மிக பிரம்மாண்டமான உருவத்துடன் அருள்பாலிக்கிறாள்.
அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியாய் திகழும் மகா பிரத்யங்கிரா தேவி சரபேசுவரரின் நெற்றிக்கண்ணிலிருந்து, ஆயிரம் சிங்கமுகங்கள், இரண்டாயிரம் கைகளுடன் தோன்றியவள். இவள் நரசிம்ம மூர்த்தியின் உக்கிரத்தை விழுங்கி வென்றவள். இவளுக்கு அபராஜிதா என்ற பெயரும் உண்டு. இவளே இயந்தர, மந்திர, தந்திரங்களுக்கு அதிபதியான அதர்வண பத்ரகாளி ஆவாள்.
இவளது மந்திரத்தை “அங்கிரஸ்,” “பிரத்திரயங்கிரஸ்” என்ற இரு முனிவர்கள் சேர்ந்து உருவாக்கியதால் அவர்களது பெயராலேயே “பிரத்யங்கிரா” என அழைக்கப்படுகிறாள். இவள் அனுமாரைக் காவலாக கொள்பவள்.
இங்குள்ள பிரளய விநாயகருக்கு 1008 தினங்கள் தொடர்ச்சியாக 24 மணி நேரமும் கணபதி ஹோமம் நடந்துள்ளது. அத்துடன் 1008 தேன் கலச அபிசேகம், ஒரே இடத்தில் 108 விநாயகர் சிலைகளுக்கு நடத்தப்பட்டது. விநாயகரின் கருவறை விமானம், “கஜபிருஷ்ட விமானம்” ஆகும்.
அதே போல் பாதாள காளிக்கு உரிய கருவறை விமானம் “மகா மேரு” வடிவில் அமைக்கப்பட்டிருக்கிறது.
மொரட்டாண்டி சித்தர் என்றழைக்கப்படும் தொல்லைக்காது சாமிகள் வாழ்ந்த தலம் இது.
பூசைகள்:
செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் வரும் ராகு காலம், அமாவாசை, பவுர்ணமியில் நடத்தப்படும் விசேட பூசைகள், தேய்பிறை அட்டமி யாகம், நடுநிசி வேளை ஆகியவை பிரத்யங்கிராவுக்கு விருப்பமானவை.
இங்கு தேய்பிறை அட்டமி தினத்தில் நடுநிசி வேளையில் பிரத்யங்கிரா தேவிக்கு செய்யப்படும் யாகத்தில் தேவர்கள், முனிவர்கள், சித்தர்கள், மகான்கள் ஆகியோர் சூட்சும(கண்களுக்கு புலப்படாத) ரூபத்தில் கலந்து கொள்கிறார்கள் என்பது ஐதீகம்.
இந்த யாகத்தினால் நாம் நினைத்த காரியங்கள், நீண்ட நாள் நிறைவேறாத ஆசைகள், இலட்சியங்கள் ஆகியவற்றை அடையலாம். அத்துடன் இந்த யாக குண்டத்தில் பற்பல மூலிகைகளை இடுவதால் அதிலிருந்து வெளிப்படும் நறுமணம் நம் உடலில் பாய்வதால், நோய்கள் குணமாதல், பைத்தியம் தெளிதல், புத்திர பாக்கியம் கிட்டுதல் போன்ற சகல விதமான தொல்லைகள் நீங்குவதாகக் கூறுகின்றனர்.
திருவிழா:
நவராத்திரியில் பத்து நாள் உற்சவம், அமாவாசை, பவுர்ணமி , கோகுலாஷ்டமி அன்று காளி பிறந்ததால் ஜென்மாஷ்டமி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தமிழ் வருடப்பிறப்பு, சித்ரா பவுர்ணமி, பவுர்ணமி தோறும் நவ ஆபரண பூஜை, தேய்பிறை அஷ்டமியில் செய்யப்படும் இரவு பூஜை
மனத்தெளிவு கிட்ட, நோய்கள் குணமாக, குடும்ப பிரச்னை தீர, பைத்தியம் தெளிய, விரைவில் திருமணம் நடக்க, புத்திர பாக்கியம் கிட்ட, வியாபாரத் தடை நீங்க, கைவிட்டுப்போன பணம் கிடைக்க, சகல விதமான தொல்லைகள் நீங்க இங்கு வேண்டிக்கொள்ளலாம்.
நீல நிற ஆடைகள், சர்க்கரைப்பொங்கல், எள்ளு சாதம், புளியோதரை, தயிர்சாதம், எள்ளுருண்டை, பானகம், கிழங்குவகைகள், உளுந்த வடை, வெண்ணெய், திராட்சை சாறு, ஏலக்காய், ஜாதிக்காய் மாலைகள், நீலம் சிகப்பு நிற பூக்கள், எள்ளுப்பூ, செந்தாமரை போன்ற மலர்கள் ஆகியவை பிரத்யங்கிராவுக்கு அதிக விருப்பமானவை. அத்துடன் வாழை நாரில் கட்டப்பட்ட வாழைப்பூ மாலை பிரத்யங்கிரா தேவிக்கு மிக மிக விருப்பமானது. இவற்றை நேர்த்திக்கடனாக செலுத்தலாம்.
Leave a Reply