அருள்மிகு நல்லதங்காள் திருக்கோயில், வத்திராயிருப்பு

அருள்மிகு நல்லதங்காள் திருக்கோயில், வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர்மாவட்டம்.
***********************************************************************************

மூலவர் நல்லதங்காள்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்பு
ஊர் வத்திராயிருப்பு
மாவட்டம் விருதுநகர்
மாநிலம் தமிழ்நாடு

வத்திராயிருப்பைச் சேர்ந்தவள் நல்ல தங்காள். இவளுக்கு நல்லதம்பி என்ற அண்ணன் ஒருவர் உண்டு. பண்பாடு மிக்க, பெரும் விவசாயக் குடும்பத்தில் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த நல்லதங்காளை, மதுரையைச் சேர்ந்த காசிராஜன் என்பருக்கு திருமணம் செய்து வைத்தனர். நல்ல தங்காள் ஏழு குழந்தைகளுக்கு தாயானாள்.

இந்நிலையில் மதுரையைப் பஞ்சம் வாட்டியது. வறுமையைப் போக்க, தன் ஏழு பிள்ளைகளுடன் அண்ணன் நல்லதம்பியை நாடி வத்திராயிருப்புக்கு வந்தாள். அப்போது அண்ணன் வீட்டிலில்லை. அண்ணி அவளைக் கண்டு கொள்ளவில்லை.

பசியால் வந்த நல்ல தங்காளையும், அவள் குழந்தைகளையும் ஆதரிக்காமல், ஓட்டை மண்பானையையும், பச்சை விறகையும், பயன்படுத்த முடியாத கோப்பையையும் கொடுத்து உணவாக்கி உண்ணச் சென்னாள்.

பத்தினி தெய்வத்தன்மை படைத்த நல்ல தங்காள் பார்த்த உடனே பச்சை விறகு தீப்பற்றி எரிந்தது. உணவு சமைத்து, தானும் பிள்ளைகளும் உண்டு அரைப்பசியை தடுத்தனர். அண்ணன் வருவான் என்று எதிர் பார்த்தாள். நாட்கள் சில கடந்தன. பசி வாட்டியது. பிள்ளைகள் வாடின. அண்ணன் தன் நிலையைப் பார்த்து துடிப்பான்; அண்ணியின் இரக்கமற்ற தன்மையைக் கேட்டால் கொதிப்பான்; எனவே தானும், குழந்தைகளும், மாய்வதே சிறப்பு என்று நினைத்து அவசர முடிவெடுத்து, பாழும் கிணற்றில் ஏழு குழந்தைகளையும் தூக்கி எறிந்து தானும் குதித்து மூழ்கினாள்.

இதைக் கேள்விப்பட்ட அண்ணன் நல்லதம்பி, தன் மனைவியை கொன்று விட்டுத் தானும் கத்தியால் குத்திக்கொண்டு அதே கிணற்றில் வீழ்ந்து மாண்டான். பத்தினியான நல்லதங்காள் தெய்வ பக்தி கொண்டவள். எனவே இறைவனும் இறைவியும் அங்கு தோன்றி, அவர்களை உயிர்ப்பித்து மீண்டும் இப்புவியில் வாழ் என்றார்கள். ஆனால்,”மாண்டவரெல்லாம் மீண்டும் வந்தால் இப்புவியில் இடம் இருக்காது. அந்த தவறுக்கு நான் துணையாக இருக்க மாட்டேன். எங்களை உன் திருவடியில் சேர்த்துக்கொள்ளுங்கள்என்று வேண்டினாள்.

அதற்குரிய காலம் விரைவில் வரும். அதுவரை இங்கே அம்பாளாக இருந்து இப்புவி மக்களுக்கு அருள் பாலிப்பாயாக என்று கூறி மறைந்தனர். அன்று முதல் இங்கே நல்ல தங்காள் தெய்வமாக காட்சியளிக்கிறாள்.

நல்ல தங்காளுக்கும், நல்லதம்பிக்கும் இரண்டு கோயில்கள் கட்டி வணங்குகின்றனர் மக்கள். குழந்தைகளும் சிலைவடிவம் பெற்றுள்ளனர்.

வத்திராயிருப்பு நீர் வளமும் நில வளமும் வற்றாமல் என்றும் செழிப்பாக உள்ள ஊர். நெல், வாழை, கரும்பு, தென்னை நிறைந்த இந்த ஊர், குட்டி மலையாளம் என்று பெயர் பெற்றுள்ளது. இவ்வூரின் செழிப்புக்கு காரணம் அர்ச்சுனா நதியாகும். இவ்வூர் விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் வட்டத்தில் உள்ளது.

இக்கோயில் நல்ல தங்காளுக்கு அமைந்த ஒரே கோயில்.

திருவிழா நவராத்திரி

பிள்ளைப்பேறு சிக்கலின்றி நடக்கவும், பிள்ளைகள் நலமுடம் வாழவும் வேண்டிக்கொள்ளுகின்றனர். தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற எலுமிச்சை வைத்து கட்டப்பட்ட தொட்டிலை அம்மன் முன்பாகவும், ஏழு குழந்தைகளின் முன்னும் கட்டி வணங்குகின்றனர்.

பிள்ளைப்பேறு கிடைத்தவர்கள் அம்மனுக்கு முடிக்காணிக்கை செலுத்தி, தங்கள் குழந்தைகளுக்கு நல்ல தங்காள், நல்ல தம்பி என்று பெயரிட்டு வளர்க்கின்றனர்.

2 Responses to அருள்மிகு நல்லதங்காள் திருக்கோயில், வத்திராயிருப்பு

  1. please nallathangal kovil contect number sent me

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *