அருள்மிகு முண்டக கண்ணியம்மன் கோயில், மயிலாப்பூர்
அருள்மிகு முண்டக கண்ணியம்மன் கோயில், மயிலாப்பூர், சென்னை– 600 004.
****************************************************************************************
+91- 44 – 2498 1893, 2498 6583 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
தல விருட்சம்: – ஆலமரம்
பழமை: – 500-1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர்: – மயிலாபுரி
ஊர்: – மயிலாப்பூர்
மாநிலம்: – தமிழ்நாடு
முற்காலத்தில் இத்தலத்தில் தாமரைக் குளம் ஒன்று இருந்தது. அதன் கரையிலிருந்த ஆலமரத்தின் அடியில் அம்பாள், சுயம்பு உருவாக எழுந்தருளினாள். பக்தர்கள் ஆரம்பத்தில் அம்பாளுக்கு ஓலைக்குடிசை வேய்ந்து சிறிய சன்னதி அமைத்தனர்.
பிற்காலத்தில் கோயில் விரிவாக கட்டப்பட்டது. ஆனாலும் அம்பிகையின் உத்தரவு கிடைக்காததால் கருவறை மட்டும், தற்போதும் குடிசையிலேயே இருக்கிறது.
அம்பாள், எளிமையை உணர்த்துவதற்காக ஓலைக்குடிசையின் கீழிருந்து அருளுவதாக சொல்கிறார்கள். இத்தலத்து அம்பிகையின் சுயம்பு வடிவம் தாமரை மொட்டு போன்ற வடிவில் காட்சியளிக்கிறது. எனவே இவள், “முண்டக கண்ணியம்மன்” என்று அழைக்கப்படுகிறாள்.
முண்டகம் என்றால் “தாமரை‘ என்று பொருள். சுயம்புவின் மத்தியில் அம்பிகையின் பிரதான ஆயுதமான சூலம் இருப்பது சிறப்பு.
இங்கு அம்பாளின் சுயம்பு வடிவத்திற்கு நாக கிரீடம் அணிவித்து, 2 கரங்களுடன் அமர்ந்த கோலத்தில் அலங்கரிக்கின்றனர். இவளுக்கு மேலே சிறிய விமானம் அமைக்கப்பட்டிருக்கிறது. அதிலேயே துவாரபாலகிகள் இருக்கின்றனர்.
காலை 6 மணியில் இருந்து 11.30 மணி வரையில் அபிசேகம் நடக்கும்போது மட்டுமே அம்பாளை சுயம்பு வடிவில் தரிசிக்க முடியும். இந்த அபிஷேகத்தில் பக்தர்கள் கலந்து கொள்ளக் கட்டணம் வசூலிக்கிறார்கள்.
இவளிடம் கோரிக்கை வைத்து , அது நிறைவேறியவுடன் மஞ்சள் காப்பு, சந்தனக் காப்பு, குங்குமக் காப்பு மற்றும் அன்னாபிசேகம் செய்வது வழக்கம். பொதுவாகச் சிவன் கோயில்களில்தான் ஐப்பசி பவுர்ணமியில் சிவனுக்கு அன்னாபிசேகம் செய்வார்கள். ஆனால், இங்கு அம்பிகை, பார்வதியின் அம்சம் என்பதால் இவளுக்கு அன்னாபிசேகம் செய்து வழிபடுவது சிறப்பு. இவளுக்குப் படைக்க சமைக்கப்படும் பொங்கல் தயாரிக்க பசுஞ்சாணத்தில் செய்த வறட்டியையே பயன்படுத்துகின்றனர். இதில் கிடைக்கும் சாம்பலையே பிரசாதமாகவும் தருகின்றனர்.
1008 மலர் கூடை அபிஷேகம்:
இக்கோயிலில் அம்பாளுக்கு பூசித்த வேப்பிலை, மஞ்சள், எலுமிச்சை மற்றும் தீர்த்தமே பிரதான பிரசாதமாக கொடுக்கப்படுகிறது. அம்பிகை சன்னதியின் முகப்பில் பிராம்மி, மகேசுவரி, வைணவி, வராகி, கவுமாரி, இந்திராணி, சாமுண்டி ஆகிய சப்த கன்னியரும் சிலை வடிவில் காட்சி தருகின்றனர். ஆடி, தை மாதம் முழுதும் இங்கு விழா எடுக்கப்படுகிறது. ஆடி மாதத்தில் கூழ் ஊற்றும் விழாவும், தை மாதத்தில் பொங்கல் வைக்கும் வைபவமும் பிரசித்தி பெற்றது.
ஆடி கடைசி வெள்ளியில் 1008 மலர்க்கூடை அபிசேகம், தை கடைசி வெள்ளியில் 108 விளக்கு பூசை, சித்ரா பவுர்ணமியில் 1008 பால்குட அபிசேகம் நடக்கிறது.
நவராத்திரி ஒன்பதாம் நாளில் அம்பிகை, மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் வீதியுலா செல்கிறாள். இவளிடம் வேண்டுபவர்கள் வேப்பிலையை ஆடையாக அணிந்து சன்னதியை வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தும் வழக்கமும் இருக்கிறது. தினமும் மாலையில் அம்பிகை தங்கத்தேரில் உலா செல்கிறாள். தங்கத்தேர் இழுக்கும் நிகழ்வில் பங்கேற்க கட்டணம் உண்டு.
முண்டக கண்ணியம்மன் சிவன், விட்டு, பிரம்மா என மும்மூர்த்தி அம்சத்துடன் காட்சி தருவதாக ஐதீகம்.
அம்பாள் சன்னதிக்கு பின்புறத்தில் ஆலமரம் இருக்கிறது. இம்மரத்திற்குள் நாகப் புற்றும், அருகில் நாகதேவதை சன்னதியும் இருக்கிறது. நாக தோசம் உள்ளவர்கள் நாகதேவதைக்கு பால், பன்னீர், மஞ்சள் அபிசேகம் செய்து, நெய்தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள். கருவறைக்கு இடப்புறத்தில் உற்சவ அம்பாள் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறாள்.
இவளுக்கு இருபுறமும் சிம்ம வாகனம் இருக்கிறது. பிரகாரத்தில் சப்த கன்னியர் இலிங்கம் போன்ற அமைப்பில் காட்சி தருகின்றனர். இவர்களுக்கு இருபுறமும் சமதக்னி முனிவர் மற்றும் அவரது மகன் பரசுராமர் இருவரும் காவல் தெய்வமாக இருக்கின்றனர்.
கோயில் முகப்பில் அரசமரத்தின் கீழ் விநாயகர் இருக்கிறார். நாக தோசம் உள்ளவர்கள் இம்மரத்தின் கீழ் நாகர் பிரதிட்டை செய்து வேண்டிக்கொள்கிறார்கள்.
இது, நாயன்மார்களில் வாயிலார், ஆழ்வார்களில் பேயாழ்வார் அவதரித்த தலம். இக்கோயிலை சுற்றி கபாலீஸ்வரர் கோயில், பார்த்தசாரதி கோயில், மாதவப்பெருமாள் கோயில் ஆகிய பிரசித்தி பெற்ற கோயில்கள் அமைந்திருக்கிறது.
திருவிழா:
ஆடி, தை மாதம் முழுதும் திருவிழா. சித்ராபவுர்ணமி, நவராத்திரி, ஆடிப்பூரம் ஆகியவையும் கொண்டாடப்படுகின்றன.
அம்மை நோய் கண்டவர்கள் அம்பாளிடம் வேண்டிக்கொண்டால் நிவர்த்தியாவதாக நம்பிக்கை.
திருமண தோசம் நீங்கவும், கண்நோய் நீங்கவும் இங்கு அதிகளவில் வேண்டிக்கொள்கிறார்கள். கல்வியில் சிறப்பிடம் பெற அம்பிகைக்கு 23 விளக்கேற்றி வழிபடுகிறார்கள்.
கோரிக்கை நிறைவேறியவர்கள் அம்பிகைக்கு அபிசேகம், அங்கபிரதட்சணம் செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.
Leave a Reply