அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், வண்டியூர்

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், தெப்பக்குளம், வண்டியூர் – 625 009, மதுரை மாவட்டம்.
***********************************************************************************************************

+91-452 – 2311 475 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்

மூலவர்: – மாரியம்மன்,பேச்சியம்மன்

அம்மன்: – மாரியம்மன், துர்க்கை

தல விருட்சம்: – வேம்பு, அரசு

தீர்த்தம்: – தெப்பக்குளம்

பழமை: – 1000-2000 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்: – மாமண்டூர்

ஊர்: – வண்டியூர்

மாவட்டம்: – மதுரை

மாநிலம்: – தமிழ்நாடு

சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை நகரினை மன்னன் கூன்பாண்டியன் ஆட்சி புரிந்து வந்தார். அப்போது மதுரையின் கிழக்கே, தற்போது கோயில் வீற்றிருக்கும் பகுதி, மகிழ மரங்கள் நிறைந்த காடாக இருந்தது. அக்காட்டினை குறும்பர் எனும் இனத்தவர்கள் ஆக்கிரமிப்பு செய்து அப்பகுதியையே அழித்து வந்தனர்.

நாளுக்கு நாள் அவர்களின் தொந்தரவு கூடுதலாகவே, ஓர் நாள் இப்பகுதிக்கு வந்த மன்னர் அவர்களின் கொட்டத்தினை அடக்கி விரட்டியடித்தார். அவர்களை விரட்டியபின் தனது வெற்றியினை ஆண்டவனுக்கு சமர்ப்பித்து வணங்கிட, அருகே வைகையில் கிடைத்த அம்பாளை (தெற்கு கரையில் தற்போது கோயில் வீற்றுள்ள பகுதியில்) வைத்து பிரதிட்டை செய்து வழிபட்டதாக வரலாறுகள் தெரிவிக்கின்றன.

இத்தெப்பம் தோண்டும்போது கிடைத்த மிகப்பெரிய முக்குறுணி விநாயகர் சிலை ஒன்று மீனாட்சியம்மன் கோயிலில் வழிபாட்டிற்காகவும் வைக்கப்பட்டுள்ளது.

இத்தலம் அம்மை நோய் தீர்க்கும் தலம் என்ற பெருமை உடையது.இங்கு அம்மன் பிரதானம் என்பதால், வேறு பரிவார தெய்வங்கள் கிடையாது.

முன்மண்டபத்தில் கொடிமரம்ஓங்கி உயர்ந்து நிற்கிறது. அதில் பொறிக்கப்பட்டுள்ள அம்பாள் மூலவர் அமைப்பில் இல்லாமல் இடது காலை மடக்கியபடி இருக்கிறாள். அடுத்து பலிபீடம் இருக்கிறது.

மதுரை நகரத்தின் கிழக்கு எல்லையில், கிழக்கு நோக்கி அமைந்த கோயில் இது. தென்பகுதியில் இரண்டு பிரதான வாசல்கள் இருக்கின்றன. நேரே வெளியே தெப்பக்குளம் இருக்கிறது. ஒரு பிராகாரத்துடன் மட்டும் அமையப்பெற்ற கோயில் உள்ளே நுழைந்ததும் வினைகள் தீர்க்கும் விநாயகர் அரசமரத்தின் அடியில் அழகுற அமர்ந்திருக்கிறார். பேச்சியம்மன், ஒருவனின் கழுத்தை, இடது கையால் சுற்றி வளைத்தபடி வித்தியாசமான கோலத்தில் இருக்கிறாள். வலது கையில் கத்தியும் இருக்கிறது. இம்மண்டபத்தில் பல தலங்களிலும் அருள் செய்து கொண்டிருக்கும் மாரியம்மனின் திருஉருவங்கள் ஓவியங்களாக உள்ளன. கருவறையில் ஆனந்தம் ததும்பிய இதழ்களுடன் அழகுற அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறாள் அன்னை. அவளுக்கு உகந்த முளைப்பயிரை திருவாசியில் கட்டியிருக்கிறார்கள் மேலே வெட்வேரை பந்தலாகப் போட்டிருக்கின்றனர். கோடையிலும் அம்பாள் குளிர்ச்சியாக இருப்பதற்காக இப்பந்தல் வேயப்பட்டிருக்கிறதாம்.

மதுரையின் காவல் தெய்வமாக இந்த அம்மன் வீற்றிருக்கிறாள். இக்கோயிலில் இருக்கும் அம்மன் வேண்டும் வரம் அளிக்கிறாள். இவளே ஆதிதெய்வமாகவும் வழிபடப்படுகிறாள். இப்பகுதியில் வசிக்கும் மக்கள் எந்த மங்கல நிகழ்ச்சி நடத்தினாலும், முதலில் இவளிடம் உத்தரவு கேட்டுவிட்டு, அதன்பின்பே நடத்துகிறார்கள். மதுரையில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் விழா நடக்கும் முன்பு முதல் பூசை இவளுக்கே செய்யப்படுகிறது. கோயிலுடன் சேர்ந்துள்ள இத்தெப்பம் மதுரை வட்டாரத்திலேயே மிகப்பெரிய தெப்பம் எனும் பெருமையினை உடையது. பிற அம்மன் கோயில்களில் இல்லாத விதமாக இங்கு அம்மன் வலக்காலை இடக்காலின் மீது மடக்கிய நிலையில் எருமை தலைமீது உட்கார்ந்த நிலையிலும், உற்சவ அம்மனாக நின்ற நிலையிலும் அருள்பாலிக்கிறாள்.

இரு அம்பிகை தரிசனம்:

சமதக்னி மகரிசியின் மனைவி ரேணுகாதேவி. ஒருசமயம் தண்ணீர் எடுக்கச்சென்றபோது, அவ்வழியே சென்ற கந்தர்வனின் அழகை நீரில் கண்டு ஆச்சர்யமடைந்தாள். எனவே சமதக்னி, அவளது பத்தினித்தன்மைக்கு களங்கம் ஏற்பட்டதாக சொல்லி, தன் மகன் பரசுராமனால் அவளது தலையை வெட்டினார். அதன்பின் பரசுராமர், தன் சாமர்த்தியத்தால் தாயை உயிர்ப்பித்தார். இவளே மாரியம்மனாகவணங்கப்படுகிறாள்.

அகிலத்தை ஆளும் பராசக்தி, தனது ஆற்றலை வெளிப்படுத்துவதற்காக எடுத்த அவதாரமே துர்க்கை.

யட்ச குலத்தைச் சேர்ந்த தனுவிற்கு ரம்பன் எனும் மகன் இருந்தான். அவன் தவம் செய்து அக்னி தேவரிடம் தேவர்கள், அசுரர், மனிதர்கள் என கருவில் பிறந்த யாராலும் அழிக்க முடியாத மகன் வேண்டுமென வரம் கேட்டான். அக்னிபகவானும் அவ்வாறே அருள் செய்தார்.

மகிழ்ந்த ரம்பன் தன் இருப்பிடத்திற்குத் திரும்பினான். விதியின் பயனால் ஓர் அழகிய எருமையைக் கண்டான். அதன்மீது மோகம் கொண்ட ரம்பன், எருமைக் கடாவாகமாறி எருமையுடன் இணைந்தான். எருமையின் வயிற்றில் வளர்ந்த சிசு, அக்னியிடம் பெற்ற வரத்தினால் குழந்தையாக வெளிப்பட்டது. அக்குழந்தையே பிற்காலத்தில் மகிஷன் எனும் அசுரனாக வளர்ந்தான். தனக்கும் கீழ் அசுரப்படைகளைச் சேர்த்துக் கொண்டு பூவுலகம், பாதாள உலகையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தான்.

இந்திரலோகத்தையும் பிடிக்க எண்ணிய அவன், தேவர்களுடன் போரிட்டான். தேவர்களும் இந்திரனும் அவனுடன் மோதமுடியாமல் தவித்தனர். அவன் பெற்ற வரத்தின்படி கருவில் உருவாகாத, பெண்ணால் மட்டுமே அழிக்க மடியும் என மும்மூர்த்திகளும் எண்ணினர்.

அனைத்து சக்திகளும் உடைய பெண்ணைப் படைக்க அனைவரும் ஆதிபராசக்தியை வேண்டினர். அவர்களின் வேண்டுதலை ஏற்ற பராசக்தி, தன் அம்சமாக மாயசக்தியை தோற்றுவித்தான்.

அந்த சக்திக்கு சிவன் சக்தி கொடுக்க அதுவே முகமாகவும், பிரம்மாவின் சக்தி உடலாகவும், திருமால் கொடுத்த சக்தி பதினெட்டு கரங்களாகவும், எமதர்மனின் சக்தி கூந்தல், அக்னி பகவானின் சக்தி கண், மன்மதனின் சக்தி புருவம், குபேரனின் சக்தி மூக்கு, முருகனின் சக்தி உதடு, சந்திரனின் சக்தி தனங்கள், இந்திரனின் சக்தி இடை, வருணனின் சக்தி கால் என அனைத்து சக்திகளும் இணைந்த அம்பிகையாக துர்க்கை உருவெடுத்தாள். அவள் அசுரனை அழிக்க உதவியாக சிவன், சூலாயதத்தையும், திருமால் சக்கரத்தையும், பிரம்மன் கமண்டல நீரையும் கொடுத்தனர். மேலும் தெய்வங்கள் பலவும் கொடுத்த ஆயுதங்களோடு போருக்குச் சென்றாள் துர்க்கை. துர்க்கையுடன் சண்டையிட்ட அசுரன் சிம்மம், யானை, நாகம் என உருவம் மாற்றிப் போரிட்டும் இறுதியில் தோல்வியையே சந்தித்தான். அவனை வதம் செய்தாள் துர்க்கை. இதனால் மகிஷாசுரமர்த்தினி என்ற பெயரும் ஏற்பட்டது.

மாரியம்மனும், துர்க்கையும் வேறுவேறு வடிவங்களாக இருந்தபோதிலும், இருவரும் அம்பிகையின் அம்சமாகவே திகழ்கின்றனர். இதனை உணர்த்தும்விதமாக இக்கோயிலில் இவ்விருவரும் சேர்ந்த அமைப்பில் காட்சி தருகின்றனர். இவ்வாறு ஒரே அம்பிகையில், இரண்டு அம்பாள்களை தரிசனம் செய்வது அபூர்வம்.

அம்பாள் அமைப்பு:

அம்பாள் சிரித்த கோலத்தில், கைகளில் பாசம், அங்குசம் ஏந்திக் காட்சி தருகிறாள். இடது காலை தொங்கவிட்டு, வலது காலை மடக்கி வைத்திருக்கிறாள். இவளது இடது காலுக்கு கீழே மகிஷாசுரன் இருக்கிறான். பொதுவாக மாரியம்மனின் காலுக்கு கீழே அசுரன் உருவம் மட்டுமே இருக்கும். ஆனால், இவள் துர்க்கையின் அம்சமாக இருப்பதால் காலுக்கு கீழே மகிஷாசுரன் இருக்கிறான்.

திருமலை நாயக்கர் மன்னர் காலத்தில் மகால் கட்டிய போது, அதன் கட்டுமான பணிகளுக்குத் தேவையான மணலை, தற்போது அம்மன் அருட்காட்சி தரும் கோயிலுக்கு வலப்புறம் அமைந்துள்ள பகுதியில் இருந்து தோண்டி எடுத்துகட்டினார். மணல் தோண்டியதால் பள்ளமாக இருந்த அப்பகுதியை சீரமைக்க எண்ணிய மன்னன் அப்பகுதியைச் சதுர வடிவில் வெட்டி, தெப்பக்குளமாக மாற்றி அதன் நடுவே வசந்த மண்டபம் ஒன்றினையும் கட்டினார்.

வைகையின் ஓர் கரையில் உள்ள வண்டியூரின் மேல்மடைக்கு நேரே இத்தெப்பம் கலை நயத்துடன் மன்னர் கால கட்டடக் கலைக்கு நற்சான்று புகட்டுவதாக சிறப்பாக கட்டப்பட்டுள்ளது. மேலும் இன்று வரையிலும் இக்கோயிலில் நடைபெறும் தெப்பத்திருவிழாவின் போது, புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் நடை அன்று ஒரு நாள் அடைக்கப்படுவது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

ஆரம்ப காலத்தில் காளிதேவியாக வணங்கப்பட்ட இவளுக்கு, கிழக்கு எல்லையில் கோயில் கட்டப்பட்டது. அப்போது இவளை, “துர்க்கையாகவும் பாவித்து வணங்கினர். “துர்க்கம்என்றால், “கோட்டைஎன்று பொருள். அதாவது மதுரையின் எல்லையில் கோட்டை போல இருந்து மக்களை காப்பவள் என்ற பொருளில் இவ்வாறு அழைக்கப்பட்டாள்.

மதுரையை ஆட்சி செய்த மன்னர்கள், போருக்கு செல்லும் முன்பு, வீரத்துடன் செயல்படவும், வெற்றி பெறவும் இவளை வணங்கியுள்ளனர். பிற்காலத்தில் நாட்டில் மழை பொய்த்தபோது, மன்னர்கள் இவளிடம் மழை வேண்டி பூசைகள் செய்து வணங்கினர். மாரி தரும் தெய்வமாக வணங்கப்படுபவள் மாரியம்மன்.

துர்க்கையாக இருந்தாலும், மழை பெற வேண்டி வணங்கப்பட்டதால் இவளுக்கு, “மாரியம்மன்என்ற பெயரே நிலைத்து விட்டது. இவ்வாறு காளிதேவியாகவும், துர்க்கையாகவும் வழிபடப்பட்ட அம்பிகை இத்தலத்தில் மாரியம்மனாகஅருளுகிறாள்.

தீர்த்தச் சிறப்பு:

இத்தலத்தில் தரப்படும் தீர்த்தம் மிகவும் சிறப்பானது. அம்பிகைக்கு அபிசேகம் செய்யப்படும் தீர்த்தத்தை, கருவறையில் பெரிய பாத்திரத்தில் எடுத்து வைக்கிறார்கள். கண் நோய், அம்மை போன்ற நோய், குழந்தைகளுக்கு ஏற்படும் அனைத்து நோய்கள், தீராத வியாதிகள், மற்றும் நாள்பட்ட நோய்கள் தீர இங்கு வேண்டிக்கொண்டு தீர்த்தம் வாங்கிச் செல்கிறார்கள். இந்த தீர்த்தத்தை பருகினால் நோய்கள் நீங்குவதாக நம்பிக்கை. ஒரு நாளில் மட்டும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் இவ்வாறு தீர்த்தம் வாங்கிச் செல்வது சிறப்பம்சம்.

தோல் வியாதி உள்ளவர்கள் அம்பிகைக்கு உப்பு நேர்த்திக்கடன் செலுத்தி வேண்டிக்கொள்கிறார்கள். அம்பிகை, துர்க்கையின் அம்சம் என்பதால் இங்கு எலுமிச்சை தீபமேற்றியும் வேண்டிக்கொள்கிறார்கள்.

தைப்பூசத்தன்று தெப்பத்திருவிழாவும், பங்குனி மாதத்தில் பத்து நாள் பிரமோத்சவத் திருநாளும், பூச்சொரிதல் திருவிழாவும், இக்கோயிலின் முக்கியத்திருவிழாக்களாக உள்ளது. தெப்பத்திருவிழாவின் போது மீனாட்சியம்மன் இங்குள்ள தெப்பத்தின் நடுவே உள்ள வசந்த மண்டபத்திற்கு கொண்டுவரப்பட்டு சிறப்பு அபிசேகங்கள் செய்யப்படுகின்றன.

மேலும், இத்தலத்தில் வீற்றுள்ள அம்மனை வணங்கிட, குடும்ப பிரச்னைகள் தீர்ந்து, தொழில் பிரச்னைகள் தீர்ந்து எல்லா நலனும் பெற்று வாழ்வார்கள்; பயம், திருமணத்தடை நீங்கி, குழந்தைப்பேறு கிட்டும் என நம்பப்படுகிறது.

வேண்டிக்கொண்ட காரியங்கள் நிறைவேறிட, அம்மனுக்கு தீச்சட்டி, பால்குடம் மற்றும் மாவிளக்குகள் எடுத்து, சிறப்பு அபிசேகங்கள் செய்யப்படுகின்றன. குழந்தைகளின் நோய்கள் தீர, குழந்தையைத் தத்துக்கொடுத்து வாங்கி, மண்சிலைகள் கொடுத்து, கரும்புத்தொட்டில்கள் கட்டப்படும் நிகழ்ச்சியும் நடக்கிறது. மேலும் கிடா வெட்டிப்படைத்தல், அங்கப்பிரதட்சிணம் செய்தல், முடி இறக்குதல், அலகு குத்துதல், உடலில் கரும்புள்ளி, செம்புள்ளி குத்துதல் என பக்தர்கள் தத்தம் நேர்த்திக்கடன்களை செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *