அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சமயபுரம்

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சமயபுரம், திருச்சி மாவட்டம்.
*****************************************************************************

+91-431 – 267 0460 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 5மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – மாரியம்மன்

தல விருட்சம்: – வேம்பு

பழமை: – 1000-2000 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்: – கண்ணபுரம்

ஊர்: – சமயபுரம்

மாவட்டம்: – திருச்சி

மாநிலம்: – தமிழ்நாடு

இசுலாமியர்களின் படையெடுப்பின்போது சமயபுரம் கோயிலில் இருந்து உற்சவர் சிலையை வீரர்கள் தூக்கி சென்றுவிட்டனர். சமயபுரத்திலிருந்து செல்லும்போது ஒரு கால்வாய் குறுக்கிட்டது. அம்பாளை கரையில் வைத்துவிட்டு கால்வாய்க்குள் இறங்கி வீரர்கள் கை,கால் கழுவினர். திரும்பிவந்து பார்த்தபோது அங்கு சிலை இல்லை. எங்கெங்கோ தேடிப் பார்த்து சோர்ந்து சென்றுவிட்டனர்.

இதன்பிறகு அப்பகுதிக்கு விளையாடச் சென்ற குழந்தைகள் அந்த சிலையை கண்டனர். சிலைக்குப் பூசை செய்து விளையாடினர். இந்த தகவல் ஊர்மக்களுக்கு தெரியவந்தது. அங்கிருந்து கோயிலுக்கு எடுத்து வருவதற்காக முயன்றபோது ஒரு பெண்ணுக்கு அருள்வந்து சிலையை மீண்டும் கோயிலுக்கு கொண்டு செல்ல வேண்டாம் என்று கூறினார்.

மக்கள் பூ கட்டிப் பார்த்தனர். அதிலும் சமயபுரத்திற்கு கொண்டு செல்ல வேண்டாம் என்றே தெரிந்தது. எனவே ஒரு யானையை வரவழைத்து அந்த யானை எங்கு போய் நிற்கிறதோ அங்கு கொண்டு செல்வோம் என முடிவு செய்யப்பட்டது. யானையும் சிறிது தூரம் நடந்து சென்று ஒரு இடத்தில் படுத்துவிட்டது. அந்த இடத்தல் சிலையை வைத்துப் பூசை செய்தனர். இவளே ஆதிமாரியம்மன் எனப்பட்டாள். சமயபுரத்தில் இருக்கும் அம்மன் இவளது மகளாகக் கருதப்படுகிறாள்.

இப்போதும் திருவிழாக் காலத்தில் சமயபுரம் மாரியம்மன், சமயபுரத்திலிருந்து பல்லக்கில் இங்கு வந்து தன் தாயைக் கண்டு செல்கிறாள்.

இக்கோயிலில் விநாயகர், முருகன், நாககன்னி சன்னதியும் உள்ளது. நாககன்னி சன்னதி முன்புள்ள வேப்ப மரத்தில் குழந்தை இல்லாத பெண்கள் தாங்கள் கட்டி வரும் சேலையின் முந்தானையை கிழித்து மரத்தில் கட்டி ஒரு கல்லை வைத்துவிடுகிறார்கள். இதனால் குழந்தைச் செல்வம் கிட்டும் என்பது நம்பிக்கை.

குழந்தை பிறந்ததும் இங்கு வந்து இந்தத் தொட்டிலை அவிழ்த்துவிட்டு அம்பாளுக்கு பூசை செய்து திரும்புகின்றனர்.

பூச்சொரிதல் : ஒவ்வொரு வருடமும் மாசி கடைசி ஞாயிறு அன்று அருள்மிகு மாரியம்மன் உலக நன்மைக்காகப் பச்சைப்பட்டினி விரதம் மேற்கொள்கிறாள். இந்த விரத நாட்கள் மொத்தம் 28. இந்த காலங்களில் அம்மனுக்குத் தளிகை நைவேத்தியம் கிடையாது. இந்த விரத நாட்களில் துள்ளு மாவு, திராட்சை, ஆரஞ்சு, இளநீர், பானகம் போன்றவை மட்டும் அம்மனுக்கு படைக்கப்படுகிறது. இந்த விரதம் இனிதே நிறைவேற கருவறை அம்மனுக்குப் பூக்களால் அபிசேகம் செய்வதே பூச்சொரிதல் என்று அழைக்கப்படுகிறது.

பங்குனி கடைசி ஞாயிறு அல்லது சித்திரை முதல் ஞாயிறு அன்று ஆண்டுக்கு ஒரு முறை சமயபுரம் மாரியம்மன் தன் தாயைக் காண வருகிறாள். அப்போது ஊர்மக்கள் சமயபுரத்தாளுக்கு சீர் கொடுக்கின்றனர். தாய்வீட்டு சீதனமாக இதைக் கருதுகின்றனர். இவ்வூரிலிருந்து திருமணம் முடித்து சென்ற பெண்களுக்கு தாய்வீட்டிலிருந்து துணிமணிகள் எடுத்து அனுப்பப்படுகின்றன. வசதி இல்லாதவர்கள் கூட 50 ரூபாயாவது மணியார்டர் செய்துவிடுகின்றனர். சிலரை வீட்டிற்கே வரவழைத்து சீர் கொடுக்கின்றனர்.

பொதுவாக அம்மன் சன்னதிகள் கிழக்கு நோக்கி அமைக்கப்படுவதே வழக்கம். இந்த சன்னதி தெற்கு நோக்கி உள்ளது. சமயபுரம், மாரியம்மன் பிறந்த இடமாகக் கருதப்படுகிறது.

விழாக்காலத்தில் சமயபுரத்தம்மன் இங்கு வரும் போது மகிழ்ச்சியாக இருப்பது போலவும், திரும்பிச்செல்லும் போது சோகமாக இருப்பது போலவும் சிலையின் வடிவமைப்பு மாறிவிடுவதாக கிராம மக்கள் கூறுகிறார்கள். தாயைப்பிரிந்து செல்வதால் மகளுக்கு இவ்வாறு முகத்தில் சோகம் கவ்விக் கொள்வதாக நம்பிக்கை.

தமிழகத்திலேயே பக்தர்கள் வருகை அதிகமாகவும், அறநிலையத் துறைக்கு அதிகமான வருமானமும் பெற்றுத் தரும் சில கோயில்களில் இது முக்கியமான கோயில்

தாலி வரம் வேண்டி அணிந்துள்ள தங்கத்தாலியை உண்டியலில் காணிக்கையாக போடுகின்றனர். உண்டியலில் அதிகமாகத் தாலிகள் கிடக்கிறது.

இத்தலத்தில் வேண்டிகொண்டால் அறுவை சிகிச்சை இல்லாமல் பல நோய்கள் குணமாகும் அதிசயம் நடைபெற்று வருகிறதாம்.

கர்நாடக பக்தர்கள் இங்கு அதிக அளவில் வருகை தருகின்றனர் என்பது சிறப்பு. (காரணம் இத்தலத்து மாரியம்மன் சாமுண்டீசுவரி சாயலில் இருப்பதால்)

இராமனின் தகப்பனார் தசரதச் சக்ரவர்த்தி இத்தலத்தில் அம்மனை வழிபட்டதாக ஒரு தகவல் கூறுகிறது.

சித்திரைத்தேர் திருவிழா:

ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் முதல் செவ்வாய் அன்று சித்திரைத் தேரில் பவனி வந்து அம்மன் அருள்பாலிக்கிறார். அன்றைய தினம் மட்டும் 7 லட்சம் பக்தர்கள் திரள்வதாகக் கூறுகின்றனர்.

பூச்சொரிதல்:

மாசிக் கடைசி ஞாயிறு 3 லட்சம் பக்தர்கள் திரள்வர்.

பஞ்சப்பிரகாரம்:

வைகாசி 1 ந் தேதி 1 லட்சம் பக்தர்கள் திரள்வர்.

தைப்பூசம்: 11 நாள் திருவிழா

தமிழ், ஆங்கில வருடப்பிறப்பு, விசய தசமி, தீபாவளி, பொங்கல் ஆகிய விசேச நாட்களில் அம்மன் தங்கரதத்தில் வரும் போது ஏராளமான பக்தர்கள் கண்டுகளிப்பர். தினந்தோறும் இக்கோயிலில் பக்தர்கள் கூட்டம் பெருமளவில் இருப்பதோடு வாரத்தின் செவ்வாய், வெள்ளி கிழமைகளில் பக்தர்கள் வருகை மிக அதிகமாக இருக்கும்.

இத்தலத்து அம்மனிடம் என்ன வேண்டுதல் என்றாலும் அதை நிறைவேற்றிக் கொடுப்பதாக கூறுகிறார்கள்.

சமயத்தில் காப்பாள் சமயபுரத்தாள்என்ற முது மொழிக்கு ஏற்றபடி பக்தர்களின் வேண்டுதல்களை எங்கிருந்து வேண்டிக்கொண்டாலும் நிறைவேற்றி கொடுக்கிறாள்.

குறிப்பாக அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்தில் வேண்டிக்கொண்டு குணமடைவது மிகவும் பிரசித்தி பெற்றது. இத்தலத்திலேயே குறிப்பிட்ட நாட்கள் தங்கி அங்கு கோயில் ஊழியம் செய்து நேர்த்திக்கடனை நிறைவேற்றலாம்.

உடல் உறுப்புகள் குறைபாடுள்ளவர்கள், கண்பார்வை குறையுள்ளவர்கள் இத்தலத்தில் வணங்கி குணமாகின்றனர், வியாபார விருத்தி, விவசாய செழிப்பு ஆகியவற்றுக்காகவும் இத்தலத்துக்கு பெருமளவில் பக்தர்கள் வருகின்றனர்.

மொட்டை அடித்தல், அர்ச்சனை, அபிசேகம், காது குத்தல், தங்கரதம் இழுத்தல், அலகு குத்தல், தீச்சட்டி எடுத்தல், அங்கபிரதட்சணம், கரும்பு தொட்டில் பிரார்த்தனை, காணிக்கை, மாவிளக்கு எடுத்தல், நெல் காணிக்கை, ஆடு மாடு கோழி தானியங்கள் செலுத்தல் ஆகியவற்றுள் ஏதாகிலும் ஒன்றை நேர்த்திக்கடனாகச் செலுத்தலாம். இவை தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கலாம்.

4 Responses to அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சமயபுரம்

  1. anitha says:

    good temple

  2. A.ARULSABARI. says:

    samayapuram mariyaaman…. nan bass aganumnu ventinen.. karunai kitaikkuma

  3. நம்பினோர் கெடுவதில்லை

  4. SRISIVASRIDHAR says:

    very nice and all truth stories, i am trust that the all
    stories and messages published about srisamayapurammariamman.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *