அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், மணப்பாறை
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், மணப்பாறை, திருச்சி மாவட்டம்.
*********************************************************************************
+91 4332- 260 998, 98420- 80312 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 6 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
பழமை: – 500 வருடங்களுக்கு முன்
ஊர்: – மணப்பாறை
மாநிலம்: – தமிழ்நாடு
ஒரு காலத்தில், இந்தக் கோயில் இருந்த இடத்தில் மூங்கில் மரங்கள் வான் உயரம் வளர்ந்தோங்கி நின்றன. மூங்கில் காட்டின் நடுவே குறிப்பிட்ட இடத்தில் வேப்பமரங்கள் நின்றன. அங்கு வாழ்வோர், ஒருசமயம், மூங்கில் மரங்களை வெட்டினர். நடுவில் நின்ற ஒரு வேப்பமரத்தை அகற்ற வேண்டிய நிலை ஏற்படடது. அதை வேருடன் சாய்த்தனர். அதன் கீழே கல் ஒன்று புதைந்து கிடந்தது. கல்லைப் பெயர்த்தெடுக்க முயன்ற போது, கடப்பாறை முனை பட்டதும், கல்லுக்குள் இருந்து ரத்தம் பீறிட்டது. அதிர்ந்துபோன மக்கள் அலறியடித்து ஓடி, ஊர் பெரியவர்களை அழைத்து வந்தனர். அப்போது அக் கூட்டத்திலிருந்த ஒருவருக்கு அருள்வந்து, தான் மகமாயி என்றும், இந்த வேம்பினடியில் கிடந்த கல்லில் நீண்ட காலமாகக் குடிகொண்டு உள்ளதாகவும், தனக்கு ஊரார் ஒன்று கூடி கோயில் கட்டி வணங்கினால், இந்நகரைக் காத்து அருள்பாலிப்பதாகவும் சொன்னார்.
பக்தர்கள் அந்த புனிதக் கல்லை நீண்ட காலமாக கருவறையில் வைத்து வழிபட்டு வந்தனர். காலப் போக்கில் அம்மனுக்கு சிலை வடிக்கப்பட்டது. இருப்பினும் கருவறையில் புனிதக்கல் இன்றும் உள்ளது. அதற்கு முதல் பூஜை செய்த பின்னரே அம்மன் உருவத்துக்குத் தீபம் காட்டப்படுகிறது. வேப்பமரத்தடியில் புனிதக்கல் கிடைத்ததால், வேப்பிலை மாரியம்மன் என்ற பெயர் சூட்டப் பட்டது. வேப்பிலை மணக்க பாறையில் பிறந்தவள் என்பதால் ஊரின் பெயர் மணப்பாறை ஆகிவிட்டது. புனிதக்கல்லாக அருளும் மாரியம்மனை வணங்குதால் திருமண பாக்கியம் கிடைக்கும் என்பதாலும் மணப்பாறை ஆகியிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.
மாரி என்ற சொல்லுக்கு மழை என்று பொருள். விவசாயம் செழிக்க மழை வேண்டி அருள் மாரியின் புகழ்பாடி பக்தர்கள் முளைப்பாரி எடுக்கின்றனர். குதிரை வாகனத்தில் அன்னை எழுந்தருளும் வேடர்பரி நிகழ்ச்சி நடக்கிறது.
காவிரியின் வடகரையில் உள்ள சமயபுரம் மாரியம்மனின் தங்கையாகக் கருதப்படும் மணப்பாறை மாரியம்மன் காவிரியின் தெற்குக் கரையில் அமைந்திருப்பது சிறப்பு.
பால்குட விழா :
சித்திரை திருவிழாவில் 15ம் நாள் பால்குட பவனி நடக்கிறது. பிறவிப் பெருந்துன்பம் நீங்குதல், நோயிலிருந்து விடுதலை, திருமணத் தடை விலகுதல், குழந்தை பேறு கிடைத்தல், ஏழைகளின் வாழ்க்கையை காத்தல், வணிகர்கள், விவசாயிகள் வாழ்க்கையில் கருணை காட்டுதல், கல்வியும், நீண்ட ஆயுளும், அன்பு மறவாத மனைவியும் கிடைக்க வேண்டிப் பால் குடம் எடுக்கப்படுகிறது.
திருவிழா:
தமிழ் வருடப்பிறப்பன்று திருவிளக்கு பூஜை. சித்திரை 2ம் தேதி பால்குடம். நவராத்திரி.
கோரிக்கைகள்:
திருமணத்தடை உள்ளவர்கள் வேப்பிலை மாரியம்மனுக்கு மஞ்சள் கயிறு வாங்கி அம்மன் சந்நிதியின் பின்புறம் உள்ள வேப்பமரத்தில் கட்டுகின்றனர். இதன் மூலம் திருமணத்தடை விலகுவதாக நம்பிக்கை. குழந்தைச் செல்வம் கிட்ட வளையல் மற்றும் வேலை வேப்பமரத்தில் கட்டுகின்றனர்.
கோரிக்கைகள் நிறைவேறிய பக்தர்கள் மஞ்சள் கயிறு கட்டியும், வளையல் கட்டியும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
Leave a Reply