அருள்மிகு கும்மாளம்மன் கோயில், தண்டையார்பேட்டை

அருள்மிகு கும்மாளம்மன் கோயில், சென்னை தண்டையார்பேட்டை
*****************************************************************************
காலரா மருத்துவமனை அருகில்

காலை 6 முதல் 10 மணி வரையிலும்; மாலை 5 முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

கும்மாளம்மனை மனமுருகி வணங்குபவர்கள், தங்கள் வாழ்வில் துன்பங்கள் விலகி, விரைவில் வித்தியாசத்தை உணர்வது நிச்சயம்.

அன்னை பராசக்தியின் ஓர் அம்சம்தான் கும்மாளம்மன். இந்த அம்மனே வடக்கில் சந்தோஷிமாதா என்று அழைக்கப்படுகிறாள்.

பூஜைகள், யாகங்களின் போது, தெய்வங்களை கலசத்தில் இருத்தியே வழிபடுவது ஆகமவிதி. அந்த முறைப்படியே சந்தோஷிமாதா வழிபாடும் நடத்தப்படுகிறது. அப்படிக் கும்பத்தில் ஆவாகனம் செய்யப்படுபவள் என்பதால் கும்பத்தை ஆளும் அம்மன் என்ற பொருளில் கும்பாளம்மன் என்றழைக்கப்பட்டவளே, இன்று மருவி, கும்மாளம்மன் என்ற திருப்பெயரோடு அழைக்கப்படுகிறாள்.

சுமார் நூற்றைம்பது ஆண்டுகள் பழமையான ஆலயம். அக்காலத்தில் தென்னந்தோப்புகள் நிறைந்த இப்பகுதியில், கடற்கரையை நோக்கி எழுப்பப்பட்ட இவ்வாலயத்தில், கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாக பல சன்னதிகள் கட்டப்பட்டு சிறப்புடன் விளங்கிவருகிறது.

கிழக்கு நோக்கிய ஆலய முகப்பு வழியாக நுழைந்தால், வலப்பக்கம் கம்பீரத் தோற்றத்தில் பஞ்சமுக விநாயகர், தெற்கு நோக்கிய சன்னதியில் தரிசனம் தருகிறார். பக்தர்களின் துயரங்களை பஞ்சமுக விநாயகரின் தரிசனம் பஞ்சாய்ப் பறக்க வைக்கிறது. சங்கடகர சதுர்த்தியின்போது இவருக்கு விசேட பூசைகள் நடக்கின்றன.

விநாயகரிடம் வேண்டுதல்களை முடித்துவிட்டு கொடிமரம், பலிபீடம், சிம்மவாகனம், இருபுறங்களிலும் காவல் காக்கும் துவார சக்திகளைக் கடந்து கோயிலுக்குள் நுழைகிறோம்.

கருவறைக்கு வெளியே இருபுறமும் விநாயகர், பாலமுருகன் ஆகியோர் தனிச் சன்னதியில் அருள்கின்றனர். அருகிலேயே சமயபுர அம்மனின் சுதை உருவம் காணப்படுகிறது.

கருவறையில், பீடத்தின் மீது அமர்ந்த திருக்கோலத்தில் வலக்கரங்களில் உடுக்கையும், நீண்ட கத்தியும், இடக் கைகளில் சூலமும், கபாலமும் ஏந்தி நான்கு திருக்கரங்களுடன் அம்மன் அருட்காட்சி தருகிறாள். இவள் சந்தோஷி மாதாவின் அம்சமே என்பதை உணர்த்துவது, இவளது கரத்தில் இருக்கும் கத்தியே.

எல்லாக் கோயில்களிலும் இருப்பது போலன்றி, சுமார் இரண்டடி நீளக் கத்தியை அம்மன் ஏந்தியிருக்கிறாள். இது, பக்தர்தம் வினைகளை வேரோடு களைபவள் இவள் என்பதை உணர்த்துவதாகச் சொல்கிறார்கள்.

வைரம் பாய்ந்த வேம்பும்,தேக்கும் கொண்டு கும்மாளம்மனின் திருவுருவம் வடிக்கப்பட்டுள்ளது சிறப்பாகும். மகிழ்ச்சி ததும்ப, மலர்ந்த முகத்துடன் காட்சி தரும் அம்மனை மனமார வேண்டுபவர்களுக்கு மணப்பேறு, மகப்பேறு உள்பட சகல பேறுகளையும் அருள்கிறாளாம்.

அம்மனுக்குக் கீழே கல்லினால் ஆன நாகக் குடையின் கீழ் அவளது சிரசு வடிவம் உள்ளது. இந்த அம்மனுக்கு சிவாகம முறைப்படி தினசரி பூஜைகள் நடைபெறுவதால் இக்கோயிலில் உயிர்பலி கொடுப்பதில்லை.

கருவறை கோட்டத்தில் மகாலட்சுமி, காளிகாம்பாள், வலம்புரி விநாயகர், வீர ஆஞ்சநேயர் அருள்கின்றனர்.

வலதுபுற பிராகாரத்தில் பால்முனீஸ்வரர், வாராகி, திருவக்கரை வக்ரகாளி, பக்த ஆஞ்சநேயர், சரபேசுவரர், தட்சிணாமூர்த்தி ஆகியோர் தெற்கு நோக்கி தரிசனம் தருகிறார்கள்.

திருப்பதி வெங்கடேசப் பெருமாள் தாயாருடன் வடக்கு நோக்கிய சன்னதியிலும்; பிரத்தியங்கிராதேவியும், காசி விசுவநாதரும் கிழக்கு நோக்கிய சன்னதியிலும் தனித்தனியாக அருள்பாலிக்கின்றனர்.

சிவனுக்குரிய நாட்களில் காசிவிசுவநாதருக்கு சிறப்பு அபிசேக அலங்காரங்கள் நடைபெறுகின்றன. பிரதோச கால வழிபாட்டில் பக்தைகள் பெருமளவில் கலந்துகொள்வது குறிப்பிடத்தக்கது.

கருவறைக்குப் பின்புறம் ஐயப்பன், காமாட்சியம்மன், கருக்காத்த அம்மன் ஆகியோர் தனித்தனிச் சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர். குழந்தைப்பேறு இல்லாத பெண்கள் கருக்காத்த அம்மன் சன்னதியில் செவ்வாய்க்கிழமைகளில் மாவிளக்கு ஏற்றி வழிபட்டால், விரைவில் குழந்தை பாக்யம் கிட்டுகிறதாம். கருவுற்ற பெண்கள் வேண்டினால், சுகப் பிரசவம் நிகழ்கிறதாம்.

இச்சன்னதிகளுக்கு அருகில் தலவிருட்சமான வேப்பமரம் உள்ளது. வேப்பமரப்புற்று மேடையில் நாகவல்லியம்மனைத் தரிசிக்கலாம்.

இடப்புற பிராகாரத்தில், பத்துப் படிகளுக்கு மேல், நின்ற கோலத்தில் சிந்தலக்கரை வெட்காளியம்மனும்; அருகே துர்க்கை, நாகசக்தி அம்மன், மகான் ராகவேந்திரர், சஞ்சீவி ஆஞ்சநேயர், ஷீரடி சாய்பாபா ஆகியோர் வடக்கு நோக்கிய தனிச் சன்னதிகளில் அருள்கின்றனர். கிழக்கு நோக்கிய சன்னதியில் வேணுகோபால சுவாமி சேவை சாதிக்கிறார். ஈசானிய மூலையில் நவகிரக சன்னதி அமைந்துள்ளது.

கும்மாளம்மனுக்கு ஆடி மாதம் ஏழாவது வாரத்தில் மூன்று நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும். அப்போது சிறப்பு அபிசேகம், அலங்காரத்தில் அம்மன் ஒளி வீசுவாள். அச்சமயம் கூழ்வார்த்தல், சுவாமி புறப்பாடு போன்ற நிகழ்ச்சிகள் உண்டு. மேலும் மாதம்தோறும் பௌர்ணமி,
அமாவாசை நாட்களில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *