அருள்மிகு கொங்காலம்மன் திருக்கோயில், ஈரோடு

அருள்மிகு கொங்காலம்மன் திருக்கோயில், ஈரோடு– 638 001, ஈரோடு மாவட்டம்.
*****************************************************************************************

+91-424-221 4421 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – கொங்காலம்மன் (கொங்கலாயி)

தல விருட்சம்: – அரசமரம்

தீர்த்தம்: – காவிரி தீர்த்தம்

பழமை: – 500-1000 வருடங்களுக்கு முன்

ஊர்: – ஈரோடு

மாவட்டம்: – ஈரோடு

மாநிலம்: – தமிழ்நாடு

ஈரோட்டில் முதன்மையான கோயிலாக கொங்காலம்மன் கோயில் உள்ளது. இவள் கொங்கு நாட்டின் குல தெய்வம். செல்லமாக கொங் கலாயிஎன்று மக்கள் போற்றி வழிபட்டு வருகின்றனர். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்த கோயில் கட்டப்பட்டுள்ளதாக வரலாறு கூறுகிறது.

இந்த கோயிலில் இருந்த கொங்கலம்மனை சிலர் தங்கள் ஊரில் பிரதிட்டை செய்வதற்காக மாட்டு வண்டியில் திருடிச் சென்றனர். வெப்படை ஆனங்கூர் அருகே சென்ற போது, வண்டியின் அச்சு முறிந்தது. இதையடுத்து அம்மனை அங்கேயே விட்டு விட்டு அனைவரும் ஓடிவிட்டனர். ஆனங்கூர் மக்கள் இந்த அம்மன் சிலையை பார்த்து ஆனந்தித்து அங்கேயே பிரதிட்டை செய்து தெய்வமாக வழிபட்டனர்.

இச்சம்பவத்தை கேள்விப்பட்ட ஈரோடு மக்கள் ஆனங்கூர் சென்று கொங்கலம்மனை வழிபட்டனர். இது ஆதி கொங்கலம்மன் என்றழைக்கப்படுகிறது. இந்த அம்மன் 12 கைகளுடன் காட்சி தருகிறார். இந்த கைகளில் சூலம், உடுக்கை, பாம்பு, வேதம், மணி, கபாலம் போன்றவை இடம் பெற்றுள்ளது.

இந்த அம்மன் சிலையை பார்த்த மக்கள் ஈரோட்டில் புதிதாக ஒரு அம்மன் சிலையை பிரதிட்டை செய்து வழிபடத் தொடங்கினர். ஈரோட்டில் பிற கோயில்களில் விழாக்கள் கொண்டாடும் போது காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்துச் செல்வது வழக்கம். அவ்வாறு எடுத்து செல்லும் முதல் தீர்த்தம் கொங்கலம்மனுக்கு அபிஷேகம் செய்த பின்னர் தான் மற்ற கோயில்களுக்கு கொண்டு செல்வது வழக்கத்தில் உள்ளது.

இக்கோயிலில், கி.பி.13ம் நூற் றாண்டை சேர்ந்த பாண்டியர் காலத்து கல்வெட்டு ஒன்றும், இரண்டாம் வீரபாண்டியன் காலத்து கல்வெட்டும், 19ம் நூற்றாண்டு கல்வெட்டு ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது.

இக்கோயிலின் தல விருட்சமாக பெரிய அரசமரம் உள்ளது. இந்த மரம் மிகவும் பழமை வாய்ந்தது.

கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் இக்கோயிலின் திருப்பணிக்காகத் தண்ணீர்த் தொட்டி கட்டுவதற்கு பூமிக்கு அடியில் குழி தோண்டப்பட்டது. அப்போது அழகான வேலைப்பாடுகளுடன் கூடிய இரண்டரை அடி உயரம் உள்ள செப்பினால் செய்யப்பட்ட அம்மன் சிலை கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சிலையையும் மக்கள் வழிபட்டு வருகின்றனர்.

பொதுக் கோயில்:

கொங்கு நாட்டில் உள்ள கோயில்களில் கொங்கலம்மன் கோயில் முக்கியமானது. எனவே இந்த கோயிலைச் சமுதாயப் பொது கோயில் என்பர். கொங்கு நாட்டு கூட்டம் பல சமயங்களில் இங்கு நடந்துள்ளது. பல சமுதாய ஒப்பந்தங்கள் இங்கு எழுதப்பட்டுள்ளன.

நீதி கிடைக்காதவர்கள் இங்கே வந்து நீதி கேட்டுப் போராடியுள்ளனர். ஆண்களும் பெண்களும் கொங்கலம்மன் பெயரை இன்றளவும் வைத்து வருகின்றனர்.

மூன்று நிலை புதிய ராஜகோபுரம் கம்பீரத்துடன் அழகாக காணப்படுகிறது. கோயிலின் உள்ளே சென்றால் பலிபீடம், கொடிமரம், சிம்மவாகனம், கல்தூண்களில் அமைந்த தூரிக்கல் உள்ளது. இந்த தூரிக்கல் 1815ம் ஆண்டு அமைக்கப்பட்டதாக கல்வெட்டு கூறுகிறது.

கோயில் பிரகாரத்தின் இடது புறத்தில் வற்றாத தீர்த்தக் கிணறு உள்ளது. மேலும் மதுரைவீரன் சாமி, பொம்மி, வெள்ளையம்மாள் ஆகிய இரு தேவியாருடன் எழுந்தருளியுள்ளார்.

இது தவிர கருப்பண்ணசாமி கோயில், கன்னிமார், பேச்சியம்மன், காட்டேரி, முனியப்பன், வீரபத்ரன் ஆகிய தெய்வங்களுக்குத் தனித்தனியாக சிறிய கோயில்கள் உள்ளது.

இத்தல அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறாள்.

திருமணத்தடை நீங்க, குழந்தைச் செல்வம் பெற, கல்வியில் சிறந்து விளங்க அம்மனை வேண்டலாம்.

வேண்டல்கள் நிறைவேறியதும் அம்பாளுக்குத் திருமுழுக்கட்டு செய்தும், புத்தாடை அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *