அருள்மிகு கிளியாளம்மன் திருக்கோயில், பெரியகுமட்டி

அருள்மிகு கிளியாளம்மன் திருக்கோயில், பெரியகுமட்டி-608 501, சிதம்பரம், கடலூர் மாவட்டம்.
***********************************************************************************************************

+91 4144 – 223 500 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – கிளியாளம்மன்

உற்சவர்: – கிளியாளம்மன்

தீர்த்தம்: – கிளி தீர்த்தம்

பழமை: – 500-1000 வருடங்களுக்கு முன்

ஊர்: – பெரியகுமட்டி

மாவட்டம்: – கடலூர்

மாநிலம்: – தமிழ்நாடு

சிதம்பரத்தில் சிவன், அம்பிகை இருவருக்கும் நடனப்போட்டி நடந்தது. அம்பிகை தன் ஒவ்வொரு அம்சத்தையும் ஒவ்வொரு வடிவமாக்கி, சிவனுக்கு ஈடு கொடுத்து நடனமாடினாள். அப்போது, அம்பிகை கிளி வடிவம் எடுத்தாள். சிவன், நாட்டியம் ஆடியபடியே கிளியை கையால் தட்டினார். வலியைத் தாங்காத கிளி, சிதம்பரத்தின் எல்லையில் இங்கு வனத்தில் விழுந்தது. இவளே இங்கு தங்கினாள். கிளி வடிவில் தங்கியதால் இவளுக்கு கிளியாளம்மன்என்ற பெயர் ஏற்பட்டது.

சிதம்பரம் நடராஜர் கோயிலின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில் இது. கோயில் எதிரே கிளி தீர்த்தம் உள்ளது. கோயில் வளாகத்தில் சப்தகன்னியர், பூரணா புஷ்கலாவுடன் அய்யனார் உள்ளனர்.
யோக பட்டை அணிந்து கைகளில் அட்சமாலை, சூலத்துடன் தெட்சிணாமூர்த்தியின் வித்தியாசமான வடிவம் இங்கு உள்ளது.

மூதாட்டியாக வந்த அம்பிகை :

வணிகன் ஒருவன், வியாபாரத்திற்காக 7 வண்டிகளில் மிளகு மூடைகளை ஏற்றிக்கொண்டு இவ்வழியே சென்றான். அவன் இப்பகுதியைக் கடந்தபோது, அம்பிகை ஒரு மூதாட்டியின் வடிவில் அவன் முன் சென்றாள். “தம்பி இந்த மூடையில் என்னப்பா வைத்திருக்கிறாய்? எனக்கு பசியாக இருக்கிறது. அதில் ஏதாவது சாப்பிட இருந்தால் கொடுப்பாஎன்றாள். வியாபாரி அவளிடம், மூடையில் கரிக்கட்டைகள் இருப்பதாக பொய் சொல்லி விட்டுச் சென்று விட்டான். அவன் சந்தைக்குச் சென்றபோது, மிளகு மூடைகள் கரிக்கட்டையாகவே மாறியிருந்தது. இதனால், அதிர்ந்துபோனவன் மீண்டும் இங்கு வந்தான். தன்னை மன்னிக்கும்படி வியாபாரி வேண்டினான். அம்பிகை அவன்முன் மறுபடியும் மூதாட்டியாகத் தோன்றினாள். கரிக்கட்டைகளை மீண்டும் மிளகுகளாக மாற்றி அருள்புரிந்தாள். அதன்பின் வணிகன் இக்கோயிலுக்கு திருப்பணி செய்து, அம்பாளுக்கு சிலை வடித்தான்.

விசேட தெட்சிணாமூர்த்தி :

பிரதான சன்னதியில் வடக்கு நோக்கி சப்தகன்னியர் உள்ளனர். இவர்களில் நடுவில் உள்ள அம்பிகையை, கிளியாளம்மனாக வழிபடுகிறார்கள். அம்பிகையும் சிவனின் சக்தியே. இதனால், இவள் சிவசொரூபம். இதனலாயே அம்பாள் சன்னதி எதிரே நந்தி உள்ளது.

முன் மண்டபத்தில் யோக பட்டை அணிந்து கைகளில் உருத்திராக்கமாலை, சூலத்துடன் தெட்சிணாமூர்த்தியின் வித்தியாசமான வடிவம் உள்ளது. கோயிலில் இருந்து சற்று தூரத்தில், ரோட்டோரத்தில் கிளியாளம்மன் சுதை சிலை உள்ளது. இங்கு அம்பிகைக்கு இருபுறமும் கிளி உள்ளது. வாகனத்தில் செல்வோர் விபத்தின்றி பயணம் பாதுகாப்பாக இருக்க, இங்கு வேண்டிச் செல்கிறார்கள்.

ஆவணியில் நடக்கும் 8 நாள் திருவிழாவில் அம்பிகைக்கு விசேட பூசை நடக்கும். இந்நாட்களில் அம்பிகை சிம்ம வாகனத்தில் வலம் வருவாள். வெள்ளிக்கிழமைகளிலும் விசேட பூசை உண்டு.

கோபம் குறைய, போட்டி மனப்பான்மை நீங்க இங்குள்ள அம்மனை வழிபடுகின்றனர்.

அம்பிகைக்கு திருமுழுக்காட்டு செய்து, சர்க்கரைப் பொங்கல் படைத்து நன்றி செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *