அருள்மிகு கவுமாரியம்மன் திருக்கோயில், பெரியகுளம்

அருள்மிகு கவுமாரியம்மன் திருக்கோயில், பெரியகுளம்-625 601, தேனி மாவட்டம்.
********************************************************************************************

+91- 4546- 234171 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – கவுமாரியம்மன் (குழந்தை மாரியம்மன், காட்டு மாரியம்மன்)

தல விருட்சம்: – அரசமரம்

தீர்த்தம்: – கிணற்று நீர்

பழமை: – 500 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்: – குளந்தை மாநகர்

ஊர்: – பெரியகுளம்

மாவட்டம்: – தேனி

மாநிலம்: – தமிழ்நாடு

இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு, சுயம்புவாகத் தோன்றிய மாரியம்மன், தற்போதைய பெரியகுளம் நகரின் கிழக்கே இருந்த காட்டிற்குள் கோயில் கொண்டிருந்தாள்.

அச்சமயத்தில் அதிக மழையால் ஊரில் உள்ள கண்மாயில் நீர் நிரம்பி, வெள்ளம் ஏற்பட்டது. இதனால் பயிர்கள் மூழ்கி மக்கள் சிரமப்பட்டனர். இன்னல் தீர காட்டு மாரியம்மனை பக்தர்கள் மனம் உருகி வணங்கினர்.

அப்போது பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய மாரியம்மன் ஊரின் எல்லையில் அமைந்து, ஊரை நோக்காமல் புறத்தை நோக்கியபடி தாம் அமைந்திருப்பதாலேயே இவ்வாறு சேத நிகழ்வுகள் நடப்பதாக உணர்த்தினாள்.

அதன்பின், பொதுமக்கள் அனைவரும் மாரியம்மன் வீற்றிருந்த காட்டுப்பகுதியை சீரமைத்து அங்கே இடம் பெயர்ந்தனர். அதன் பின் அம்மனின் அருளால் மக்கள் சிறப்பாக வாழ்ந்தனர். அத்துடன் அம்மனுக்கு கோயில் கட்டி கவுமாரிஎன அழைக்க தொடங்கினர்.

சுயம்புவாகத் தோன்றிய கவுமாரியம்மன் வளம் கொழிக்கும் வராக நதியின் தென்கரையில் வீற்று பக்தர்களுக்கு அருள் புரிகிறாள்.

மேலும், இத்தலத்தில் அம்பாள் அமர்ந்து அருள்புரிவதாலேயே இப்பகுதி விவசாயத்தில் சிறந்தும், குறிப்பாக மாம்பழ விளைச்சலில் முன்னிலை பெற்றும் திகழ்கிறது என்று மக்கள் நம்புகின்றனர். அம்மை மற்றும் தோல் சம்பந்தமான நோயால் தாக்கப்பட்டவர்கள் இத்தலத்திற்கு வந்து வராக நதியில் நீராடி, அம்பாளை வணங்கி கோயிலில் தரும் தீர்த்தத்தைப் பருகிட நோய் நீங்கும் என்பது நம்பிக்கை.

திருப்புகழில் குளந்தை மாநகர் என குறிப்பிடப்பட்டுள்ளது பெரியகுளம் நகரே!

தென்மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் திருத்தலங்களில் இதுவும் ஒன்று. வேண்டிய காரியங்கள் நடக்க கோழி மற்றும் சேவல்களை கோயில் திருவிழாவின் போது மக்கள் முன்பு சூறை விடும் விநோத பழக்கமும் இங்கு நடைமுறையில் உள்ளது.

கோயிலின் சுற்றுப் பிரகாரத்தில் காளியம்மன் மட்டும் தனிச் சன்னதியில் வீற்றுள்ளாள்.

இத்தலவிநாயகர் கன்னிமூலவிநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

இங்கு அம்பாளுக்கு நைவேத்யமாக சர்க்கரைப்பொங்கல் படைத்து வழிபடுகின்றனர்.

திருவிழா:

ஆனியில் பத்து நாள் திருவிழா, நவராத்திரி. தினமும் ஒரு கால பூசையும், செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இரு கால பூசைகளுடன் பால்முழுக்காட்டும் செய்யப்படுகிறது.

கோரிக்கைகள்:

திருமணத்தடை நீங்க அரசமரத்தில் மஞ்சள் கயிற்றைக் கட்டுதல், குழந்தைச் செல்வம்கிட்டிட தொட்டில் கட்டுதல், பருக்கள் குணமாக உப்பு, மிளகு காணிக்கை செலுத்துதல், விவசாயம் செழிக்க விசேட பூசை செய்தல்.

வேண்டிக்கொண்ட காரியங்கள் நடந்திட அம்மனுக்கு எலுமிச்சை மாலை சாத்தி, பால் மற்றும் சிறப்பு அபிசேகங்கள் செய்தல், விவசாயத்தில் செழிப்பு அடைந்தவர்கள் தானியங்கள், காய்கறிகள் மற்றும் பழங்களைப் படைத்தல், அங்கபிரதட்சணம், முடி இறக்குதல், பால்குடம், மாவிளக்கு, அக்னி சட்டி எடுத்தல்.

2 Responses to அருள்மிகு கவுமாரியம்மன் திருக்கோயில், பெரியகுளம்

  1. முனைவர் நா. மால்முருகன் says:

    “திருப்புகழில் குழந்தை மாநகர் என குறிப்பிடப்பட்டுள்ளது பெரியகுளம் நகரே! ” என்பது தவறு. குளந்தை மாநகர் என்றே குறிக்கப்பட்டுள்ளது.

  2. மாற்றிவிட்டேன் நண்பரே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *