அருள்மிகு கண்ணகி திருக்கோயில், கூடலூர்

அருள்மிகு கண்ணகி திருக்கோயில், கூடலூர் – 625 518 தேனி மாவட்டம்.
********************************************************************************

+91- 4554 – 231 019, 98425 55575 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 5.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை திறந்திருக்கும்.

 

மூலவர்: – கண்ணகி (பகவதி அம்மன்)

தீர்த்தம்: – மங்கல தீர்த்தம்

பழமை: – 1000-2000 வருடங்களுக்கு முன்

ஊர்: – கூடலூர்

மாவட்டம்: – தேனி

மாநிலம்: – தமிழ்நாடு

சோழ நாடான காவிரிப்பூம்பட்டினத்தில் (பூம்புகார்) இருந்து, தன் கணவன் கோவலனுடன் பிழைப்பிற்காக மதுரைக்கு வந்தாள். சந்தர்ப்பவசத்தால் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனின் மனைவி கோப்பெருந்தேவியின் கால்சிலம்பை திருடியதாக குற்றம் சாட்டப்பட்டு, கோவலன் கொல்லப்பட்டான். கண்ணகி மன்னனிடம் சென்று நியாயம் கேட்டாள். தன் தீர்ப்பில் தவறு இருந்ததை உணர்ந்த மன்னனும், அவனது மனைவியும் உயிர் விட்டனர்.
ஆனாலும், உக்கிரம் தணியாத கண்ணகி மதுரையை எரித்தாள்.

பிறகு, தென்திசை வழியாக 14 நாட்கள் நடந்து இவ்விடத்துக்கு வந்தாள். அப்போது விண்ணுலகிலிருந்து மலர் விமானத்தில் வந்த கோவலன், கண்ணகியை அழைத்துச் சென்றான். இதைக்கண்டு ஆச்சரியமடைந்த மலைவாழ் மக்களான வேடுவர்கள், அவளைத் தெய்வமாக பாவித்து மங்கல தேவிஎன்ற பெயரில் வணங்கினர்.

ஒருசமயம் சேரன் செங்குட்டுவன், இப்பகுதிக்கு வேட்டையாட வந்தான். அவனிடம் மக்கள் தாங்கள் கண்ட அதிசயத்தைக் கூறினர்.

மகிழ்ந்த மன்னன், இங்கு வந்தது கண்ணகி என அறிந்து மகிழ்ந்தான். சிலப்பதிகாரம் சொல்லும் உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்என்னும் வாசகத்துக்கு ஏற்ப, இங்கு அவளுக்கு கோயில் எழுப்ப விருப்பம் கொண்டான். இதற்காக இமயத்திற்கு சென்று கல் எடுத்து, அதை கங்கையில் நீராட்டி, கண்ணகிக்கு சிலை வடித்தான். இங்கு கோயில் கட்டி சிலையைப் பிரதிட்டை செய்தான்.

ஒருநாள் தரிசனம்:

கடல் மட்டத்திலிருந்து 4 ஆயிரத்து 380 அடி உயரத்தில், மேற்கு தொடர்ச்சிமலையின் மீது அமைந்த கோயில் இது. கண்ணகி தனிசன்னதியில் நின்ற நிலையில் காட்சி தருகிறாள். கண்ணகியை தெய்வமாக வணங்கிய வேடுவர்கள், சித்ரா பவுர்ணமியன்று விழா எடுத்தனர்.

இதன் அடிப்படையில் தற்போதும் அன்று ஒருநாள் மட்டும் விழா நடக்கிறது. அன்று ஐந்து கால பூசை நடக்கும். அப்போது சுருளி அருவியில் இருந்து சுரபி தீர்த்தம் எடுத்து வந்து கண்ணகிக்கு அபிசேகம் செய்வர்.

கண்ணகி உக்கிரமாக வந்து நின்ற தலமென்பதால் சந்தனக்காப்பு அலங்காரம் செய்து, தயிர்சாதம் நைவேத்யம் செய்வர். மேலும் அவல், நெய், பால், கற்கண்டு, வாழைப்பழம், பேரீச்சை, சர்க்கரை, ஏலம் சேர்ந்த கலவையை அட்சயம் எனப்படும் ஒரு அகன்ற பாத்திரத்தில் வைத்து நிவேதனம் செய்வர்.
கேரள மக்கள் கண்ணகியை பகவதி அம்மனாக பாவித்து வழிபடுகிறார்கள்.

கண்ணகி கோட்டம்:

சேரன் செங்குட்டுவன் இங்கு கோட்டை போல பெரிய சுவர்களுடன் கற்கோயிலாகக் கட்டினான். இதனால் இக்கோயில் கண்ணகி கோட்டம்என பெயர் பெற்றது. “கோட்டம்என்றால் கோட்டை போல அமைந்த கட்டடத்தைக் குறிக்கும். இக்கோயிலில் பல கல்வெட்டுக்கள் உள்ளன.

விநாயகருக்கும், சிவனுக்கும் சன்னதி உள்ளது. ஆனால், பீடம்(ஆவுடையார்) மட்டுமே உண்டு. லிங்கபாணம் கிடையாது. கடல் மட்டத்திலிருந்து 4 ஆயிரத்து 380 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

உருவமில்லாத கருப்பசுவாமி உள்ளார். கோயிலுக்கு அருகில் தீர்த்தக் கிணறும், கண்ணகி நீராடிய மங்கல தீர்த்தக்குளமும் இருக்கிறது.

திருவிழா: சித்ரா பவுர்ணமி

கணவனைப் பிரிந்திருக்கும் பெண்கள் மீண்டும் ஒன்று சேரவும், தீர்க்க சுமங்கலியாக இருக்கவும் இவளிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.

அம்மனுக்கு அபிசேகம் செய்தும், புத்தாடை அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *