அருள்மிகு அன்னபூரணி உடனுறை நரசிம்ம சாஸ்தா திருக்கோயில், அங்கமங்கலம்

அருள்மிகு அன்னபூரணி உடனுறை நரசிம்ம சாஸ்தா திருக்கோயில், அங்கமங்கலம், தூத்துக்குடி மாவட்டம்.

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

நரசிம்ம சாஸ்தா

தல விருட்சம்

இலுப்பை மரம்

தீர்த்தம்

சரப தீர்த்தம்

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

அங்கமங்கலம்

மாவட்டம்

தூத்துக்குடி

மாநிலம்

தமிழ்நாடு

மகாவிஷ்ணு, தன் பக்தன் பிரகலாதனின் துயர்போக்க தூணிலிருந்து நரசிம்ம மூர்த்தியாக கடும் உக்கிரத்துடன் வெளிப்பட்டார். சந்தியாகால வேளையில் தனது திருக்கரங்களால் இரண்யனைத் தூக்கி, தன் தொடையில் இருத்தி, கூரிய நகத்தால் தொடையையும், மார்பையும் பிளந்து வதம் செய்தார். அதன் பின்னரும் நரசிம்மருக்கு கோபம் குறையவில்லை. மகா உக்கிரமாக அனல் பறக்க நின்ற அவரைக் கண்டு, தேவர்களும் அஞ்சினர். முனிவர்களும், தேவர்களும் ஒன்றுகூடி திருவடிகளைத் தொழுது பல துதிகளால் போற்றி சாந்தப்படுத்த முயன்றார். ஆனால் நரசிம்மரோ நெருங்க முடியாத அளவுக்கு கோபக் கனலுடன் காட்சியளித்தார். தேவேந்திரன் உட்பட அனைவரும் பிரம்மாவை வணங்கி சாந்தப்படுத்த வேண்டினர். பிரம்மாவோ, என்னிடம் வரம் பெற்ற இரண்யனை சம்ஹாரம் செய்ததால் ஏற்பட்ட சினத்தைத் தணிக்க என்னால் இயலாது என்றார். நரசிம்மரின் தோற்றத்திற்குக் காரணமான பிரகலாதனிடம் சொல்லி சாந்தப்படுத்தமாறு யாவரும் வேண்டினர். தன்னைப் போற்றித் துதித்த பிரகலாதனை அழைத்து தன் மடிமேல் வைத்துக் கொண்டார் நரசிம்மர். ஆனாலும் அவரது கோபம் முழுவதுமாகக் குறையவில்லை. நரசிம்மரின் உக்கிரம் தொடர்ந்தால் உலகமே அழிந்துவிடுமோ என எல்லோரும் அஞ்சினர். மகாலட்சுமியும் தன் பங்கிற்கு அவரது சினத்தினைப் போக்க உதவினாள். சினம் தணிந்தார் சிங்கவேள். இதுவரை புராணங்கள் சொல்கின்றன. அதன் பின்னரும் சிறிதளவு சினம் நரசிம்மருக்கு இருந்ததாகவும், அதனைப் போக்க அவரது தங்கையான அன்னபூரணி உதவியதாகவும் சொல்கிறது இக்கோயிலின் தலபுராணம். தேவர்கள் வேண்டுகோளின்படி அன்னபூரணி, நரசிம்ம மூர்த்தியிடம் சினம் தணிந்திட வேண்டினாள். தங்கையின் விருப்பத்திற்கேற்ப சாந்தரூபமாக மாறினார், நரசிம்மர். பின்னர் சரப தீர்த்தத்தில் நீராடி, இலிங்கப் பிரதிஷ்டை செய்து வணங்கி சாந்தமானார். இதனால் இவ்வூரில் உள்ள இலிங்கம் நரசிங்க நாத ஈஸ்வரன் என்றும், இங்குள்ள சிவாலயம் நரசிங்க நாத ஈஸ்வரன் கோயில் கோயில் என்றும் பெயர் பெற்றது.

ஒரு சமயம் தென்காசியைச் சேர்ந்த பக்தர் ஒருவர் நரசிம்ம சாஸ்தாவுக்கு நாய் வாகனத்தை நேர்த்திக்கடனாக செய்து கொண்டு வந்தார். கோயிலில் வைத்து திறந்து பார்த்த போது அது நந்தி வாகனமாக மாறியிருந்ததைக் கண்டு அனைவரும் வியந்தனர். அப்போது புறையூர் கிராமத்தில் புதிதாகக் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கத்தை அயனாதீசுவரர் கோயிலில் பிரதிஷ்டை செய்யவிருந்தனர். இந்த நந்தியை அங்கு பிரதிஷ்டை செய்தால் நல்லது என பலரின் ஆலோசனைப்படி புறையூருக்குக் கொண்டு சென்று உரிய முறையுடன் பிரதிஷ்டை செய்தனர். தினமும் அதிகாலை பிரம்ம முகூர்த்தத்திலேயே முறைப்படியான பூஜைகள் தொடங்கி விடுகின்றன. புரட்டாசி மாத நவராத்திரி பூஜையின் போது 1008 தீபம் இலுப்பை எண்ணெயில் ஏற்றி வழிபடுவது சிறப்பு. இதனால் துன்பங்கள், தடைகள், எதிர்ப்புகள் விலகி முன்னேற்றம் உண்டாகும். ஆடிப்பூரமும் ஆவணி மாதம் விநாயகர் சதுர்த்தியும், ஆவணி மூலம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. நரசிம்ம ஜெயந்தியின் போது நரசிம்மருக்க பானக அபிஷேகம் செய்யப்படுவது சிறப்பானது. தாமிரபரணி ஓடை கடம்பா குளத்தில் தென்திசை நோக்கி நரசிம்ம சாஸ்தாவும், அவருக்கு வலப்புறம் அன்னபூரணியும் சேர்ந்து அருள்பாலிக்கின்றனர்.

பிரகாரத்தில் மகாகணபதி, பாலசுப்ரமணியர், அகத்தியர், பேச்சியம்மன் மற்றும் பிரம்மசக்தி ஆகியோர் உள்ளனர். இக்கோயிலில் நரசிம்மர், சாந்தமான நரசிம்ம சாஸ்தாவாக தங்கை அன்னபூரணியுடன் வீற்றிருக்கிறார்.

திருவிழா:

நரசிம்ம ஜெயந்தி.

கோரிக்கைகள்:

பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறவும், திருமணம், குழந்தை பாக்கியம், குடும்பத்தில் ஐஸ்வரியம் கிடைக்கவும் இங்கு வேண்டிக் கொள்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:

பக்தர்கள் நரசிம்மருக்கு வடைமாலை சாற்றியும், அவரது உக்கிரத்தைப் போக்க வெட்டிவேர் மாலை சாற்றியும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *