அருள்மிகு வாசுதேவ பெருமாள் திருக்கோயில், கடகம்பாடி

அருள்மிகு வாசுதேவ பெருமாள் திருக்கோயில், கடகம்பாடி, திருவாரூர் மாவட்டம்.

+91 4366 273600 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

வாசுதேவபெருமாள்

தாயார்

ஸ்ரீதேவி, பூதேவி

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

கடகம்பாடி

மாவட்டம்

திருவாரூர்

மாநிலம்

தமிழ்நாடு

இராமபிரானுக்கு எவ்வித எதிர்பார்ப்புமின்றி சேவை செய்தவர் அனுமன். மற்றவர்களெல்லாம், இராமனின் மூலமான ஸ்ரீமன் நாராயணனிடம் வைகுண்டம் வேண்டி பிரார்த்தித்தனர். அனுமன் மட்டும் மறுத்து விட்டார். காரணம், பூலோகத்தில் இராமநாமம் சொல்ல வழியிருக்கிறது. வைகுண்டத்துக்குச் சென்றால் நாராயணாஎன்ற கோஷம் தானே கேட்கும் என்பதால், என்றும் அழியாத சிரஞ்சீவியாக பூலோகத்திலேயே தங்கியிருக்க ஸ்ரீராமனிடம் வரம் பெற்றார். சோழ மன்னர் ஒருவர் காவேரி ஆற்றின் கிளைநதியான அரசலாற்றின் கரையோரம் ஸ்ரீதேவி, பூதேவி தாயார் சமேத வாசுதேவபெருமாளுக்கு கோயில் எழுப்பினார். அங்கே பவ்ய ஆஞ்சநேயருக்கு சன்னதியும் எழுப்பப்பட்டது. இவர் பக்தர்களின் தேவையை நிறைவேற்றி வருகிறார். சரபோஜிராஜபுரம் என அழைக்கப்படும் கடகம்பாடியில் இக்கோயில் உள்ளது.

ஆஞ்சநேயர் கைகட்டி, வாய்பொத்தி, பவ்ய ஆஞ்சநேயராக சேவை சாதித்து வருகிறார். மக்களின் குறைகளை போக்கி அருள்பாலித்து வரும் இவரை வழிபட சனி மற்றும்
வியாழக்கிழமைகள் ஏற்றவை. இந்த நாட்களில் பக்தர்கள் தங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்து குறைகளை ஆஞ்சநேயரிடம் எடுத்துச் சொல்லி நிவர்த்தி அடைகிறார்கள். அமாவாசை அன்று ஆஞ்சநேயருக்கு சிறப்பு திருமஞ்சனம் (அபிஷேகம்) நடக்கிறது. அன்று இவரை 11 முறை வலம் வந்து பிரார்த்தனை செய்து கொண்டால் எதிரிகள் தொல்லைகளில் இருந்து விடுபடலாம் என்பது நம்பிக்கை.

பவ்ய ஆஞ்சநேயருக்கு மாதம்தோறும் மூல நட்சத்திரத்தன்று விசேஷ ஹோமம் நடக்கிறது. மாசிமாத புனர்பூசம் துவங்கி மூல நட்சத்திரம் வரை லட்சார்ச்சனை நடக்கிறது. மூர்த்தி சிறிதென்றாலும் கீர்த்தி பெரியது.

திருவிழா:

மூல நட்சத்திரத்தன்று விசேஷ ஹோமம், மாசிமாதம் இலட்சார்ச்சனை, அனுமன் ஜெயந்தி, ஆனி திருமஞ்சனம்.

கோரிக்கைகள்:

திருமணத்தடை, உடல் உபாதை, மனசஞ்சலம், வியாபாரத்தில் சரிவு, குழந்தையின்மை போன்ற குறைகள் நீங்கவும், ஞானம், பலம், பக்தி, வீரம், கீர்த்தி, சேவை, அடக்கம் ஆகிய குணங்களைப் பெறவும் இங்குள்ள பவ்ய ஆஞ்சநேயரை வழிபட்டு வரலாம்.

நேர்த்திக்கடன்:

ஆஞ்சநேயருக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்தும், இவரை 11 முறை வலம் வந்து பிரார்த்தனை செய்தும் வேண்டிக்கொள்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *