அருள்மிகு விண்ணவராய பெருமாள் திருக்கோயில், வள்ளாளர் தெரு, பழைய அம்பத்தூர்

அருள்மிகு விண்ணவராய பெருமாள் திருக்கோயில், வள்ளாளர் தெரு, பழைய அம்பத்தூர், கொரட்டூர், சென்னை, திருவள்ளூர் மாவட்டம்.

+91 44 262 46790, 94444 62610 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

விண்ணவராய பெருமாள்

உற்சவர்

ஸ்ரீனிவாசன்

தாயார்

கனகவல்லி

ஆகமம்

வைகானசம்

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

பழைய அம்பத்தூர்

மாவட்டம்

திருவள்ளூர்

மாநிலம்

தமிழ்நாடு

இந்தப் பகுதியை ஆட்சி செய்த நவாப் ஒருவர், தன் நாட்டைச் சுற்றிப் பார்த்தார். கொண்டு வந்த உணவு தீர்ந்து விட்டது. குறிப்பிட்ட ஓரிடத்தில் உணவுப்பொருள் ஏதும் கிடைக்காமல் பசியில் களைத்துப் போனார். அவருடன் வந்த வீரர்களும் பசி தாளாமல், ஓரிடத்தில் அமர்ந்து விட்டனர். அவர்களது கண்ணில் ஒரு கோயில் தென்பட்டது. அங்கே ஏதாவது உணவு கிடைக்குமா என பார்த்து வரும்படி வீரர்களுக்கு ஆணையிட்டார். அவர்கள் பெருமாள் கோயிலைக் கண்டனர். அர்ச்சகரிடம் தங்கள் நிலையைக் கூறினர். சுவாமிக்கு நைவேத்யம் செய்த வரகரிசி பிரசாதத்தை வீரர்களிடம் அர்ச்சகர் வழங்கினார். சுவாமிக்கே இவ்வளவு எளிய உணவா என எண்ணிய நவாப், அர்ச்சகரை அழைத்து விபரம் கேட்டார். பஞ்சம் காரணமாக வரகரிசியை சமைத்து சுவாமிக்கு நைவேத்யம் செய்வதாக அர்ச்கர் தெரிவித்தார். அந்தக் கோயிலுக்கு திருப்பணி செய்து, நைவேத்யம் செய்ய பணஉதவியும் செய்வதாக வாக்களித்தார். அப்போது, வரகரிசி பிரசாதம் உயர்ரக அரிசி பிரசாதமாக மாறியது. கண் எதிரில் நிகழ்ந்த அந்த அதிசயத்தைக் கண்ட நவாப், பெருமாளின் பேரருளை எண்ணி மெய்சிலிர்த்துப் போனார்.

கரி என்னும் இருளாகிய தீவினையை நீக்கி, வாழ்விற்கு ஒளிதரும் மாணிக்கமாகப் பிரகாசிக்கக் கூடியவர் என்னும் பொருளில், திருமாலுக்கு, கரியமாணிக்க பெருமாள் என்ற திருநாமம் இருந்தது. பிற்காலத்தில் விண்ணவராய பெருமாள் என்று திருநாமம் சூட்டப்பட்டது.

பெருமாள் எதிரிலுள்ள கருடாழ்வாரை சுவாதி நட்சத்திரத்தன்று வலம் வந்து வழிபட்டால் சர்ப்பதோஷம் விலகும். அத்துடன் தடைப்பட்ட திருமணங்கள், தடை நீங்கி கைகொடுக்கும். தாயார் கனகவல்லிக்கு வெள்ளிக்கிழமை வில்வத்தால் அர்ச்சனை செய்வதால் திருமணத்தடை விலகுவதுடன், குழந்தை பாக்கியமும் கிடைக்கிறது. விண்ணவராயப் பெருமாளை 11 வாரம் சென்று பக்திப்பூர்வமாக வணங்கினால், வீட்டில் செல்வ செழிப்பு ஏற்படுவதுடன், உணவுக்குப் பஞ்சம் வராது என்ற நம்பிக்கை உள்ளது.

கோயில் மண்டபத்தில் காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலில் இருப்பது போன்று பல்லி வடிவம் மேற்கூரையில் செதுக்கப்பட்டு இருந்தது. தற்போது மண்டபம் இடிந்து போனதால், பல்லி உருவம் பொறித்த விதானக்கல்லை தனியே வைத்துள்ளனர். தலையில் பல்லி விழுதல் போன்றவற்றால் மனக்கஷ்டம் அடைந்துள்ளவர்கள், இதனை 11 வாரம் சென்று பூஜித்து, பெருமாள் தாயாருக்கு திருமஞ்சனம் செய்வதன் மூலம் தோஷம் விலகுவதாக நம்பிக்கையுள்ளது. கருவறையில் கரியமாணிக்கப்பெருமாள் என்ற தன் முந்தைய திருநாமத்திற்கு ஏற்ப, கரிய நிறத்துடன், அருள்ஒளி வீச நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். திருமகளும், பூமகளும் அவரருகில் உள்ளனர். மூலவருக்கு முன் கருணை விழிகளுடன், அபயவரதகரங்களுடன் அன்பே வடிவாக கனகவல்லிதாயார் அருள்பாலிக்கிறாள். தாயாருக்கான தனிச்சன்னதி புனரமைக்கப்பட்டு வருவதால், பெருமாள் அருகில் தாயார் அருள்பாலிக்கிறார். திருவோணத்தன்று இந்தப் பெருமாளை வணங்கினால் நினைத்தவை கைகூடும்.

இங்கு ஸ்ரீதேவி, பூதேவி, கனகவல்லி தாயார், பெருமாள், கருடாழ்வார், இராமானுஜர் சன்னதிகள் உள்ளன. நம்மாழ்வார் தியானக் கோலத்தில் இருப்பது சிறப்பு.

திருவிழா:

புரட்டாசி சனிக்கிழமை, புரட்டாசி திருவோணம், வைகுண்ட ஏகாதசி விழா தமிழ்ப்புத்தாண்டு, ஆடிப்பூரம், கிருஷ்ணஜெயந்தி, நவராத்திரி, கார்த்திகை தீபம், மார்கழி மாத பூஜை, பங்குனி உத்திரம், வைகுண்ட ஏகாதசி.

கோரிக்கைகள்:

திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிடைக்க, சர்ப்ப தோஷம் நீங்க இங்குள்ள கருடாழ்வாரை வழிபடுகின்றனர். வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படவும், உணவு பஞ்சம் ஏற்படாமல் இருக்கவும் இங்குள்ள பெருமாளை வழிபடுகின்றனர்.

நேர்த்திக்கடன்:

பெருமாள் மற்றும் தாயாருக்கு திருமஞ்சனம் செய்வதன் மூலம் தோஷம் விலகுவதாக நம்பிக்கையுள்ளது. பிரார்த்தனை நிறைவேறியவுடன் துலாபாரம் நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *