அருள்மிகு காமாட்சியம்மன் திருக்கோயில், சத்திரம் கிராமம்

அருள்மிகு காமாட்சியம்மன் திருக்கோயில், சத்திரம் கிராமம்புதுக்கோட்டை மாவட்டம் .
**************************************************************************************************

+91 98435 90356 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – காமாட்சியம்மன்

பழமை: – 500 வருடங்களுக்கு முன்

ஊர்: – சத்திரம் கிராமம்

மாவட்டம்: – புதுக்கோட்டை

மாநிலம்: – தமிழ்நாடு

சிதம்பரம் அருகேயுள்ள நல்லினம் கிராமத்தில், சில நூறு ஆண்டுகளுக்கு முன் ஒரு பூசாரி இருந்தார். அவரது குடும்பத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆவுடையார்கோவிலில் (மாணிக்கவாசகரை சிவன் ஆட்கொண்டு உருவமின்றி அருவமாய் இருக்கும் தலம்) வசித்து வந்தார். அவருக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்தது. புகுந்த வீட்டில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அப்பெண் அங்கிருந்து கைக்குழந்தையான மகனுடன் வெளியேற்றப்பட்டாள். வீட்டில் வைத்து வணங்கிய காமாட்சி அம்மன் திருவுருவத்துடன் அவள் தன் உடன்பிறந்தவர்கள் வசித்த காளையார்கோவிலுக்கு வந்தாள். இவ்வூர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது.

வரும் வழியில், அவள் சில குடுகுடுப்பைக்காரர்களைச் சந்தித்தாள். அவர்கள் அவள் ஊர் வரை பாதுகாப்பாக கொண்டு வந்து சேர்த்தனர். பின்னர் அவ்வூரிலேயே தங்கி விட்டனர்.

அவளது குழந்தை வளர்ந்து பத்து வயதை எட்டினான். விளையாடுவதற்காக தாயிடம் உடுக்கு ஒன்று வாங்கித் தரும்படி கேட்டான். அம்மாவும் மகனுக்கு அதை அன்புடன் வாங்கிக் கொடுத்தாள். அதை அடித்துக் கொண்டே சிறுவன் விளையாடிய போது, வீட்டில் சிலையாய் இருந்த அன்னை காமாட்சி அதை ரசித்துக் கேட்டாள். அதற்கு பரிசாக அக்குழந்தை உடுக்கடித்தபடியே எது சொன்னாலும், பலிக்கும் பாக்கியத்தை கொடுத்தாள். இது குழந்தைக்கோ, குழந்தையின் தாய்க்கோ தெரியாது. ஊரிலுள்ளோர், “இந்த குழந்தை இவ்வளவு அழகாக குறி சொல்கிறானே! இவன் என்ன சொன்னாலும் பலிக்கிறதே!, எல்லாம் அவனது அன்னை பூஜிக்கும் காமாட்சியின் மகிமைதான் என எண்ணினர்.

இதனிடையே காளையார்கோவிலை அச்சமயம் ஆண்ட மன்னரின் மனைவிக்கு நோய் ஏற்பட்டது. அரண்மனை வைத்தியர்கள் எவ்வளவோ முயன்றும், நோய் தீரவில்லை. தீர்க்க முடியாத அந்த நோய்க்கான காரணத்தை அறிய குடுகுடுப்பைக்காரர்களை மன்னர் வரவழைத்தார். அவர்கள் தங்கள் சக்தியைப் பயன்படுத்தி, சில காரணங்களைக் கூறினர்.

ஆனால், அவை ஏற்றுக்கொள்ளக் கூடிவைகளாக இல்லை. அவர்கள் கூறிய காரணங்களின் அடிப்படையில், பரிகாரம் செய்தும் பலனில்லை. எனவே, மன்னர் குடுகுடுப்பைக்காரர்களை சிறையில் அடைத்து விட்டார். தன் தாயை சிறுவயதில் காப்பாற்றிய குடுகுடுப்பைக்காரர்கள் சிறையில் அடைக்கப்பட்டதை அறிந்த சிறுவன், அவர்களை வெளியே கொண்டு வர திட்டமிட்டான்.

அவன் நேரடியாக அரசனிடம் சென்று, காமாட்சியின் அருளுடன் நோய்க்கான காரணத்தையும், அது தீர்வதற்கான வழியையும் சொன்னான். நோய் குணமானது. மனம் மகிழ்ந்த மன்னன், “”உனக்கு என்ன வேண்டும்?’ என கேட்க, குடுகுடுப்பைக்காரர்களை விடுவிக்க வேண்டுமெனவும், தனக்கு ஓர் உடுக்கு பரிசாகத் தர வேண்டும் எனவும் கேட்டான்.

அவ்வாறே மன்னரும் செய்தார். காமாட்சியின் அருளால் குறி சொல்லி வந்த அச்சிறுவனின் மரபில் வந்த நான்கு பேர், காமாட்சிக்குப் பிற்காலத்தில் புதுக்கோட்டையில் கோயில் எழுப்பினர். உயிருள்ள பெண் போல, அலங்கார கோலத்தில் காட்சியளிக்கிறாள் அன்னை காமாட்சி.

பொதுவாக சிவன் கோயில்களில் தான் சிவராத்திரி விழா நடக்கும். அம்மன் கோயில்களில் நவராத்திரியே பிரதானம். ஆனால், சக்தியின்றி சிவமில்லை என்ற அடிப்படையில், புதுக்கோட்டை மாவட்டம் சத்திரம் கிராமத்தில் 64 பரிவார தெய்வங்களுடன் கொலு வீற்றுள்ள காமாட்சியம்மன் கோயிலில் சிவராத்திரி விழா சிறப்புடன் கொண்டாடப்படுகிறது.

இக்கோயிலில் ஒவ்வொரு பவுர்ணமியன்றும் சிறப்பு பூசை உண்டு. சிவாரத்திரியை ஒட்டி பால்குடம், காவடி பவனி நடக்கும். மாலையில் திருவிளக்கு பூசை நடத்தப்படும்.

கோரிக்கைகள்:

திருமணம் நடக்க, குழந்தைச் செல்வம் கிட்ட வேண்டுகின்றனர்.

நேர்த்திக்கடன்:

கோரிக்கை நிறைவேறியதும் அம்மனுக்கு அபிசேகம் செய்தும், புத்தாடை சாத்தியும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *