அருள்மிகு நவநீதகிருஷ்ணன் திருக்கோயில், மருதூர்

அருள்மிகு நவநீதகிருஷ்ணன் திருக்கோயில், மருதூர், திருநெல்வேலி மாவட்டம்.

காலை 7- 10 மணி வரை, மாலை 5-8 மணி வரையிலும் கிருஷ்ணரை தரிசனம் செய்யலாம்.

மூலவர்

நவநீதகிருஷ்ணன்

தல விருட்சம்

மருதமரம்

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

மருதூர்

மாவட்டம்

திருநெல்வேலி

மாநிலம்

தமிழ்நாடு

கிருஷ்ணன் குழந்தையாக இருந்த போது, அவனது தாய் மருத மரத்தில்தான் உரலில் கட்டி போட்டார். கிருஷ்ணனோ அந்த உரலை இழுக்க மருத மரம் இரண்டு துண்டாகி, அதிலிருந்த தேவர்கள் முக்தியடைந்தார்கள். மருத மரங்கள் இப்பகுதியில் அதிகம் இருப்பதால் இந்த ஊர் மருதூர் ஆனது. மருதமரம் நிற்கும் இடங்களில் கிருஷ்ணன் கோயில் அமைக்க வேண்டும் என்ற ஐதீகத்தின் அடிப்படையில் இந்தக் கோயிலும் அமைக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் நவதிருப்பதிகள் உள்ளன. இவை அனைத்தும் திருநெல்வேலியை ஒட்டிய பகுதிகளே. நவதிருப்பதி தரிசனத்துக்காக செல்பவர்கள், மருதூர் நவநீதகிருஷ்ணரையும் தரிசித்து வரலாம்.

கோவிந்தா என சொன்னால் குழந்தை வரம் தரும் கிருஷ்ண சுவாமி, திருநெல்வேலி மாவட்டம் மருதூரில்அருள்பாலிக்கிறார். தாமிரபரணி நதி புனிதமான கங்கைக்கு நிகரானது. இந்நதியின் கரையிலுள்ளது மருதூர் கிராமம். இவ்வூர் அணைக்கட்டின் அருகில் பல நூறு ஆண்டுகளுக்கு முன் நிர்மாணிக்கப்பட்டது நவநீத கிருஷ்ணன் கோயில்.

இங்கு மூலவர் நவநீதகிருஷ்ணன் 4 அடி உயரத்தில் சிரித்த முகத்துடன் கேட்டவருக்கு கேட்டவரம் தருபவராக நின்று அருள்பாலிக்கிறார். அருகே இரண்டடி உயரத்தில் ஐம்பொன்னால் ஆன கிருஷ்ணர் இரண்டு வயது பாலகனாக அரை சலங்கையுடன், இருகைகளிலும் வெண்ணெய் ஏந்தி சிறு தொந்தி வயிற்றுடன் அருள் பாலிக்கிறார்.எதிரில் நாலடி உயரத்தில் ஐம்பொன்னால் ஆன கருடாழ்வார், பக்தர்களின் குறைதீர்க்கும் கிருஷ்ணன் அழைக்கும் குரலுக்கு ஓடி வரத் தயாராக நிற்கிறார்.

திருவிழா:

கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமைகள், வைகுண்ட ஏகாதசி மற்றும் கிருஷ்ணருக்குரிய அனைத்து விழாக்களும் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

கோரிக்கைகள்:

குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் வைகுண்ட ஏகாதசி, கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமைகள் மற்றும் கிருஷ்ணருக்குரிய விசேஷ நாட்களில் இத்தலத்திற்கு வந்து தாமிரபரணி ஆற்றில் நீராடி விட்டு கிருஷ்ணரை தரிசித்து, பால்பாயாசம், வெண்ணெய் நைவேத்தியம் செய்து வழிபட்டால், கிருஷ்ணர் தன்னைப்போலவே ஒரு அழகான குழந்தை பிறக்க வரமளித்திடுவார் என்பது ஐதீகம்.

நேர்த்திக்கடன்:

குறிப்பாக ஏகாதசி விரதமிருந்து மருதூர் கிருஷ்ணரை தரிசித்தால் பிறப்பற்ற வாழ்வை அருள்வார். மருதூரில் கிருஷ்ணன் கோயிலைத்தவிர, ஆதி மருதீஸ்வரர் கோயில், வடக்கு வாசல் செல்வி கோயில், சாஸ்தா கோயில் ஆகியவை உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *