அருள்மிகு புருஷோத்தமப்பெருமாள் திருக்கோயில், அம்பாசமுத்திரம்

அருள்மிகு புருஷோத்தமப்பெருமாள் திருக்கோயில், அம்பாசமுத்திரம், திருநெல்வேலி மாவட்டம்.

+91- 4634 – 255 609 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7.30 மணி முதல் 10 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

புருஷோத்தமப்பெருமாள்

உற்சவர்

புருஷோத்தமர்

தாயார்

அலர்மேலுமங்கை

தல விருட்சம்

புன்னை

தீர்த்தம்

பொங்கிகரை தீர்த்தம்

ஆகமம்

பாஞ்சராத்ரம்

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

அம்பாசமுத்திரம்

மாவட்டம்

திருநெல்வேலி

மாநிலம்

தமிழ்நாடு

முற்காலத்தில் இப்பகுதியை பராந்தகசோழ மன்னன் ஆட்சி செய்து வந்தான். அவனுக்கு புத்திரப்பேறு இல்லை. குழந்தை வரம் வேண்டி தேவர்களைப் பிரார்த்தித்து, பல யாகங்கள் செய்தும் பயனில்லை. ஒரு சமயம் மகரிஷி ஒருவர் இப்பகுதிக்கு வந்தார். அவரை வணங்கிய மன்னன், தனது நிலையை விவரித்து, எதிர்காலத்தில் நாடாள புத்திரன் ஒருவன் பிறக்க வழி சொல்லுமாறு ஆலோசனை கேட்டான். மகரிஷி மன்னனிடம், எந்த பரிகாரத்தாலும் குழந்தை பிறக்க வழியில்லாதவர்கள், சிவனுக்கும், விஷ்ணுவிற்கும் கோயில் எழுப்பி வழிபட்டால் புத்திரப்பேறு கிடைக்கும் என்றார். அதன்படி மன்னன் தாமிரபரணி நதிக்கரையில் பல கோயில்களைக் கட்டினான். இதில் முதன்முதலில் கட்டிய கோயில் இது. இங்கு சுவாமி, மடியில் மகாலட்சுமி தாயாரை அமர்த்திய கோலத்தில், “புருஷோத்தமர்என்ற பெயரில் அருளுகிறார்.

தாமிரபரணி நதியின் வடகரையில், வயல்களின் மத்தியில் இக்கோயில் அமைந்திருக்கிறது. இந்திர விமானத்தின் கீழ் எழுந்தருளியுள்ள சுவாமி, கருடாழ்வாரின் தோள் மீது அமர்ந்திருக்கிறார். கருடாழ்வாரின் வலதுகையில் சுவாமியின் பாதமும், இடதுகையில் உள்ள மலர் மீது தாயாரின் பாதமும் இருக்கிறது. தாயையும், தந்தையையும் பாதுகாப்பது ஒரு பிள்ளையின் கடமை என்பதற்கு உதாரணம் இது. கருடாழ்வாருக்கு கீழே தாமரை மலர் பீடம் இருக்கிறது. சுவாமி கருடாழ்வாரின் மீது காட்சி தருவதால் இவருக்கு, “நித்ய கருடசேவை பெருமாள்என்றும் பெயர் உண்டு. சுவாமியின் தலைக்கு மேலே, ஆதிசேஷன் ஏழு தலைகளுடன், குடை போல காட்சி தருகிறார். இத்தலத்தில் சுவாமி ஒரு தாயாருடன் காட்சி தருவதால், “புருஷோத்தமர்என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு, “ஏகபத்தினி விரதர்என்றும் பெயருண்டு. புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள், தாயாரையும் சுவாமியையும் வணங்கினால் வாழ்க்கை முழுவதும் இணைபிரியாமல் இருப்பர் என்பது நம்பிக்கை.

ஒரு சங்கு, சக்கரத்துடன்தான் பெருமாள் காட்சி தருவார். ஆனால், இங்கு இரண்டு சங்கு மற்றும் இரண்டு சக்கரத்துடன் காட்சி தருகிறார். சங்கு செல்வத்தின் வடிவம், சக்கரம் ஆற்றலின் வடிவம். பெரும் பணம் சம்பாதித்தாலும் அதை அடக்கியாளும் ஆற்றல் வேண்டும் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது. கடன்தொல்லையால் சிரமப்படுவோர் இவரை வணங்கி நிவாரணம் பெறலாம். இந்த அமைப்புடன் பெருமாளை தரிசிப்பது அபூர்வம். எட்டு கரங்களுடன் இருப்பதால் இவருக்கு, “அஷ்டபுயக்கர பெருமாள்என்றும் பெயருண்டு. சுவாமி சன்னதி சுற்றுச்சுவரின் பின்புறம் ஒரு கண்ணாடியில், நரசிம்மர் பாதம் வரையப்பட்டிருக்கிறது. புரட்டாசி சனிக்கிழமைகளில் சுவாமி, கருட வாகனத்தில் எழுந்தருளி சேவை சாதிக்கிறார்.

முற்காலத்தில் இங்கு வசித்த மகரிஷி ஒருவர், காசிக்குச் சென்று கங்கை தீர்த்தம் எடுத்து வந்து சுவாமிக்கு திருமஞ்சனம் செய்து வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒருசமயம் அவரால் காசிக்குச் சென்று தீர்த்தம் கொண்டு வரமுடியவில்லை. இதனால் அவர் மனம் வருந்திய நிலையில், சுவாமி அவருக்கு காட்சி தந்து, தாமிரபரணி நதிக்கரையில் ஓரிடத்தில், “கங்கையே வருகஎன்றார். பெரும் ஊற்றெடுத்து தண்ணீர் பொங்கியது. மகிழ்ந்த மகரிஷி, அந்த தீர்த்தத்தைக் கங்கையாகப் பாவித்து, சுவாமிக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்து வழிபட்டார். இந்த தீர்த்தம், “பொங்கிகரை தீர்த்தம்என்று அழைக்கப்படுகிறது.

இங்குள்ள இறைவன் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் இந்திரவிமானம் எனப்படுகிறது.

பிரகாரத்தில் ஜோதி ஆஞ்சநேயர், ஆழ்வார்கள், ராமானுஜர், நம்மாழ்வார் மற்றும் விஸ்வக்ஷேனர் ஆகியோருக்கு சன்னதிகள் இருக்கிறது. வேணுகோபாலர் ஒரு தூணில் சிற்ப வடிவில் காட்சி தருகிறார்.

திருவிழா:

புரட்டாசியில் கருடசேவை.

கோரிக்கைகள்:

குடும்பத்தில் ஐஸ்வர்யம் உண்டாகவும், தொழில் சிறப்பாக இருக்கவும், உயர்பதவி கிடைக்கவும் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியவர்கள் சுவாமிக்கு வஸ்திரம் அணிவித்து, விசேஷ பூஜை செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *