அருள்மிகு உத்தமராயப்பெருமாள் திருக்கோயில், பெரிய அய்யம்பாளையம்

அருள்மிகு உத்தமராயப்பெருமாள் திருக்கோயில், பெரிய அய்யம்பாளையம், ஆரணி தாலுகா, திருவண்ணாமலை மாவட்டம்.

+91 4181-248 224, 248 424, 93455 24079

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். சனிக்கிழமைகளில் காலை 7.30 முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். முன்கூட்டிய போனில் தொடர்பு கொண்டால், மற்ற வேளைகளில் சுவாமியைத் தரிசிக்கலாம்.

மூலவர்

உத்தமராயப்பெருமாள்

உற்சவர்

ஸ்ரீதேவி, பூதேவியருடன் உத்தமராயப் பெருமாள்

ஆகமம்

வைகானசம்

தீர்த்தம்

பெருமாள்குளம்

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

பெரிய அய்யம்பாளையம்

மாவட்டம்

திருவண்ணாமலை

மாநிலம்

தமிழ்நாடு

பல்லாண்டுகளுக்கு முன், இங்கிருந்த மலையில் சிறுவன் ஒருவன் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தான். அப்போது, ஒரு பெரியவர் அங்கு வந்தார். சிறுவன் முன் சென்று நின்றார். அந்த கிராமத்தில் அதுவரையில் தான் பார்த்திராத அந்த பெரியவரைக் கண்ட சிறுவனுக்கு ஆச்சரியம். சிறுவனின் தலை மீது கை வைத்த பெரியவர், “ஊருக்குள் போய் நான் வந்திருக்கிறேன் எனச் சொல்என்றார். மந்திரத்திற்கு கட்டுப்பட்டதுபோல சிறுவன், குன்றிலிருந்து இறங்கி ஊருக்குள் சென்றான். அங்கிருந்தவர்களை அழைத்து, “நம்ம ஊரு மலைக்கு ஒரு பெரியவர் வந்திருக்காருஎன்றான். வாய் பேசாத ஊமைச்சிறுவன் பேசியதைக் கேட்டவர்களுக்கு, ஆச்சர்யம் தாங்கவில்லை. அவனிடம் பேசும் தன்மை வந்தது குறித்து கேட்டபோது, மலைக்கு வந்த பெரியவர் தன் தலையில் கை வைத்து ஆசிர்வதித்ததைக் கூறினான். வியந்த மக்கள், குன்றுக்கு வந்தனர். அங்கு, பெருமாள் தானே பெரியவராக வந்ததை உணர்த்தி சங்கு, சக்கரத்துடன் காட்சி தந்தார். மகிழ்ந்த மக்கள் அவருக்கு கோயில் எழுப்பினர். ஊமைச் சிறுவனுக்கு பேசும் தன்மையைக் கொடுத்ததால் இவர் ஊமைக்கு வாய் கொடுத்த உத்தமராயப் பெருமாள்என்று பெயர் பெற்றார். விஜயநகர பேரரசு மன்னர்கள் இக்கோயிலுக்கு பல திருப்பணிகள் செய்துள்ளனர்.

இத்தல பெருமாள் சிறுவனுக்கு காட்சி கொடுத்தவர் என்பதால், உத்தமராயப்பெருமாள் சிறுவன் போலவே பால்ய மூர்த்தியாக காட்சியளிப்பது சிறப்பான அமைப்பு. இவர் சங்கு, சக்கரம் ஏந்தி, ஆவுடையார் மீது நின்றிருக்கிறார். சுவாமி தனியே வந்து தங்கியவர் என்பதால், தாயாருக்கு சன்னதி கிடையாது. சனிக்கிழமைதோறும் சுவாமிக்கு திருமஞ்சனம் நடக்கும். மனதில் இருக்கும் தீய சிந்தனைகள் விலகவும், திருமணமாகாதோர் உத்தமமான வரன் அமையவும் இங்கு வழிபடுகிறார்கள்.

சில குழந்தைகள் பிறந்ததில் இருந்தே பேசும் தன்மையற்ற ஊமைகளாக இருப்பர். இன்னும் சிலர் திக்குவாய் பிரச்னையுடனோ, சரியான உச்சரிப்பு இல்லாதவர்களாகவோ இருப்பர். இவர்கள் நன்கு பேசவும், ஊமைக்குழந்தைகளுக்கு பேச்சு வரவும் இங்கு அதிகளவில் வேண்டிக்கொள்கின்றனர். பேசாத குழந்தைகளுக்காக சுவாமிக்கு தேனபிஷேகம் செய்கின்றனர். அபிஷேக தேனை சுவாமி முன்பாக குழந்தையின் நாக்கில் துளசியால் தொட்டு வைக்கின்றனர். பின், அந்த தேனையே பிரசாதமாகத் தருகின்றனர். தினமும் தேனைப் பருகி, சுவாமியை வழிபட விரைவில் பேசும் தன்மை கிடைக்கும் என்பது நம்பிக்கை. பேச்சாளர்கள், பாடகர்கள் தாங்கள் குரல் வளத்துடன் இருக்கவும் இங்கு அதிகளவில் வேண்டிக்கொள்கிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியதும் சுவாமிக்கு அபிஷேகம் செய்தும், துலாபாரம் செலுத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

உத்தமராயப்பெருமாள் எதிரே கருடாழ்வார் மட்டும் இருக்கிறார். மற்ற பரிவார மூர்த்திகள் கிடையாது. இங்குள்ள துவாரபாலகர்கள் சிலை விசேஷமானது. இவர்களது சிலை அரிதாக கிடைக்கும் சிவப்பு நிறமான ஒரு வகை கற்களால் செய்யப்பட்டதாகும். சுவாமி சன்னதிக்கு இருபுறமும் உள்ள பாறையில் புடைப்புச் சிற்பமாக நாகர் இருக்கிறார். நாகதோஷம் உள்ளவர்கள், தோஷ நிவர்த்திக்காக இதற்கு மஞ்சள் காப்பிட்டு வழிபடுகின்றனர். சன்னதிக்கு வலப்புறம் தியான குகை உள்ளது. இதன் முகப்பின் இருபுறமும் பெருமாளின் வாகனமான கருடாழ்வார் மற்றும் ஆஞ்சநேயர் உள்ளனர். பெருமாள், சிறுவனுக்கு இந்த குகையில்தான் காட்சி தந்ததாக தல வரலாறு சொல்கிறது.

சிறுவனுக்கு சுவாமி காட்சி தந்த விழா, தை மாதம் காணும் பொங்கலுக்கு மறுநாள் நடக்கும். இதை மகரத்திருவிழா” (மகரம் என்பது தை மாதத்தைக் குறிக்கும்) என்கின்றர். அன்று சுவாமிக்கு விசேஷ அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் காட்சி தருவார். மாலையில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் சுவாமி புறப்பாடும் உண்டு. தவிர, விஜயதசமி, விஷ்ணு கார்த்திகை (திருக்கார்த்திகைக்கு மறுநாள்) ஆகிய நாட்களிலும் சுவாமி வீதியுலா செல்வார். முன் மண்டபத்தில் வைணவ ஆச்சாரியார் சன்னதி உள்ளது.

சுற்றிலும் மலைகள் சூழ்ந்திருக்க, 300 படிகளுடன் கூடிய குன்று மீது அமைந்த கோயில் இது. தை, புரட்டாசி சனிக்கிழமைகளில் பக்தர்கள் அதிகளவில் மாவிளக்கு ஏற்றி வழிபடுகிறார்கள்.

திருவிழா:

நவராத்திரி, விஷ்ணு தீபம், வைகுண்ட ஏகாதசி, தை மாதம் மகரத்திருவிழா.

கோரிக்கைகள்:

மனதில் இருக்கும் தீய சிந்தனைகள் விலகவும், திருமணமாகாதோர் உத்தமமான வரன் அமையவும், ஊமைக்குழந்தைகளுக்கு பேச்சு வரவும் இங்கு வழிபடுகிறார்கள். நாகதோஷம் உள்ளவர்கள், தோஷ நிவர்த்திக்காக இதற்கு மஞ்சள் காப்பிட்டு வழிபடுகின்றனர்.

நேர்த்திக்கடன்:

மாவிளக்கு, தேன் அபிஷேகம் செய்தும், துலாபாரம் செலுத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *