அருள்மிகு காட்டழகிய சிங்கர் திருக்கோயில், ஸ்ரீரங்கம்

அருள்மிகு காட்டழகிய சிங்கர் திருக்கோயில், ஸ்ரீரங்கம், திருச்சி மாவட்டம்.

+91- 431- 243 2246 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6.15 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.15 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

காட்டழகிய சிங்கர்

தல விருட்சம்

வன்னி மரம்

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

ஸ்ரீரங்கம்

மாவட்டம்

திருச்சி

மாநிலம்

தமிழ்நாடு

முன்காலத்தில் இப்பகுதி காடாக இருந்தது. காட்டு யானைகளின் தொந்தரவை சமாளிக்க முடியாமல் மக்கள் திண்டாடினர். யானைகளை அடித்து விரட்டுவது இயலாத காரியம். அவற்றை அழிக்க எண்ணுவதே பாவ காரியம் என்பதால் இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவித்த மக்கள், நரசிம்மருக்கு கோயில் எழுப்பி வழிபாடு செய்த பின் யானைகளின் தொந்தரவு குறைந்தது. எனவே இங்குள்ள பெருமாள் காட்டழகிய சிங்கர் எனப்பட்டார்.

கர்ப்பகிரகத்தில் சுமார் 8 அடி உயரத்தில் லட்சுமி நரசிம்மர், மகாலட்சுமியை தன் இடது தொடையில் உட்கார வைத்து ஆலிங்கன நிலையில் உள்ளார். வலது கையில் அபயஹஸ்தம் காட்டுகிறார். “என்னை நம்பியவர்களை நான் கைவிட்டதில்லைஎன்பது போல் இந்த அமைப்பு உள்ளது. பொதுவாக, கிழக்கு பார்த்திருக்கும் பெருமாள் இங்கு மேற்கு பார்த்த சன்னதியில் உள்ளார். விஜயதசமியன்று ஸ்ரீரங்கம் பெருமாள் இங்குள்ள பெரிய மண்டபத்தில் எழுந்தருளி, காலை முதல் மாலை வரை அருள்பாலிக்கிறார். அதன்பின் குதிரை வாகனத்தில் புறப்பட்டு, வீதியில் உள்ள வன்னி மரத்தை நோக்கி அம்பெய்த பின் தெற்கு வாசல் வழியாக மூலஸ்தானம் செல்கிறார். இது ஒரு பிரார்த்தனை ஸ்தலம். சுவாதி நட்சத்திரம் பெருமாளின் ஜென்ம நட்சத்திரம். அன்று பெருமாளுக்கு சிறப்பாக திருமஞ்சனம் செய்யப்படுகிறது. இந்த நாளில் வழிபடுவோர்களுக்கு கேட்ட வரம் கிடைக்கும், தீராத நோய் தீரும் என்பது ஐதீகம். இது தவிர பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க, அவர்கள் குறிப்பிடும் நாள்களிலும் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்யப்படுகிறது. பிரதோஷ நேரத்தில் இவரை வழிபட்டால் குழந்தையில்லாதவர்களுக்கு குழந்தை வரம் நிச்சயம் என்கிறார்கள்.

இராமானுஜருடைய சீடரும், ஸ்ரீரங்கத்தில் பிறந்தவருமான பிள்ளை லோகாச்சாரியார் இக்கோயிலில் இருந்து ஸ்ரீவசநபூஷணம்முதலிய 18 இரகசிய கிரந்தங்களை இயற்றியுள்ளார்.

திருவிழா:

வைகாசியில் நரசிம்ம ஜெயந்தி, ஆனி சுவாதி, ஆடி ஜேஷ்டாபிஷேகம், பங்குனி யுகாதி ஆகிய நான்கு நாட்களிலும் ஸ்ரீரங்கத்திலிருந்து தைலகாப்பு, திருப்பணியாரங்கள் அனுப்பப்பட்டு நிவேதனம் செய்யப்படுகிறது.

கோரிக்கைகள்:

பிரதோஷ காலங்களில் வழிபாடு செய்தால் உத்தியோகம், மகப்பேறு, திருமணத் தடை நீங்க வைக்கும் வரபிரசாதியாக இருப்பவர் ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கர் பெருமாள்.

பெருமாள் கோயில் ஒன்றில் பிரதோஷ காலத்தில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது என்றால் அது விசேஷமான ஒன்றுதான்.

நேர்த்திக்கடன்:

பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *