அருள்மிகு காமாட்சி உடனுறை ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், மதுரை

அருள்மிகு காமாட்சி உடனுறை ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில்மதுரை-625 001.
******************************************************************************************

+91 98651 51099 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6.30 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – காமாட்சி, ஏகாம்பரேஸ்வரர்

தல விருட்சம்: – மாமரம்

பழமை: – 500 வருடங்களுக்கு முன்

ஊர்: – மதுரை

மாவட்டம்: – மதுரை

மாநிலம்: – தமிழ்நாடு

முற்காலத்தில் மதுரை மீனாட்சி கோயிலுக்குத் தெற்கே மாந்தோப்பு இருந்தது. அந்த தோப்பில் வனகாளி இருந்து வந்தாள். இந்த காளியை விசுவகர்ம குல மக்கள் வழிபட்டு வந்தனர்.

ஒரு முறை இந்த கோயில் பூசாரி இரவு பூசைக்குப் பின், மறதியாக தன் மகனை இந்தக் கோயிலுக்குள் வைத்து பூட்டிவிட்டு வீட்டிற்கு வந்து விட்டார். வீட்டிற்கு வந்தவுடன் பூசாரியின் மனைவி, மறந்து விட்டு வந்த தன் மகனை மீண்டும் அழைத்து வர வேண்டும் என்று கூற, பூசாரியும் மகனை அழைக்க பூட்டிய கதவை திறந்தார். அங்கு காளியின் உக்கிரம் தாங்க முடியாத பூசாரி அதே இடத்தில் இறந்தார்.

பின் காளிக்கு பெரிய அளவில் கோயில் கட்ட நினைத்து, அங்குள்ள மாமரத்தின் அடியில் தோண்டினார்கள். அப்போது சுயம்புவாக ஈசன் தோன்றினார். “ஆம்ரஎன்றால் வடமொழியில் மாமரம்என்று பொருள். மாமரத்தின் அடியில் பாணலிங்கம் தோன்றியதால் இங்குள்ள ஈசன் ஏகாம்பரேசுவரர் ஆனார். எனவே காளிக்காக கட்ட நினைத்த சன்னதி, சிவ ஆகம விதிப்படி காமாட்சி உடனுறை ஏகாம்பரேசுவரர் சன்னதியாக மாறியது.

இந்த உலகின் ஆதி நாயகி பராசக்தி. இந்த பூமியில், பராசக்தியான நான் தனியாக இருந்து எப்படி ஆளப்போகிறேன் என்று நினைத்து முதலில் பிரம்மனை படைக்கிறார். பிரம்மனும் பராசக்தியை வணங்குகிறார். பின் திருமாலைப் படைக்கிறார். திருமாலும் பராசக்தியை வணங்குகிறார். அதன் பின்னரே சிவனைப் படைக்கிறார்.

சிவனோ பராசக்தியை கண்டு வணங்காமல், அவரது கண் அழகில் மயங்கி சிரிக்கிறார். (காமாட்சி என்பது ஆசையை உண்டு பண்ணக்கூடிய அட்சி(கண்). இருந்தாலும் பராசக்தியால் படைக்கப்பட்ட பிரம்மனும், திருமாலும் வணக்கம் தெரிவிக்க நாம் மட்டும் வணங்காமல், அவளது அழகைக் கண்டு மயங்கி சிரித்து விட்டோமே என நினைத்து சக்தியிடம் நீயும் என்னை விரும்பினால், என்னில் பாதியாக இருக்க வேண்டும் என்றவுடன் சக்தியும் சம்மதித்து சிவனின் பாதியாக கலந்து விட்டார்.

பிரம்மனின் கர்வம்:

முன்பொரு சமயம் மீனாட்சிக்கும், சுந்தரேசுவரருக்கும், திருமால் தாரை வார்க்க, பிரம்மன் திருமணத்தை நடத்தி வைத்தார். திருமணத்தை நடத்திக் கொடுத்த பிரம்மனுக்கு தட்சணையாக என்ன வேண்டும் என சிவன் கேட்டார். அதற்கு பிரம்மன் கர்வத்துடன், என் படைப்புக்குக் கட்டுப்படாததை எனக்கு தட்சணையாக தர வேண்டும் என பரிகாசம் செய்தார். சிவனும் பிரம்மனின் கர்வத்தை அடக்க, “உமது படைப்புக்குக் கட்டுப்படாத வறுமையையே உமக்கு தட்சணையாகத் தருகிறோம்,” என்ற கூறிச் சென்றார்.

இதனால், அதிர்ச்சியடைந்த பிரம்மன் அன்னை மீனாட்சியிடம்,”தாயே! ஈசன் எனக்கு இப்படி ஒரு விபரீதமான தட்சணை தந்து எனது கர்வத்தை அடக்கி விட்டார். எனது இந்த தரித்திரத்தை தீர்க்க ஒரு வழி கூற வேண்டும்என வேண்டினார்.

அன்னை மீனாட்சியும்,”பிரம்மனே. தாங்கள் இது குறித்து கவலைப்பட வேண்டாம். நான் இந்த மதுரை மாநகரில் காமாட்சியாக வருவேன். அப்போது என்னை வழிபட்டு உமது தரித்திரத்தை போக்கி கொள்ளுங்கள் ” என்று அருளினார்.

மிகவும் பழமையான இந்த கோயிலுக்கு கிழக்கு, வடக்கு என இரு வாயில்கள் இருந்தாலும் அம்மன் நோக்கியிருக்கும் வடக்கு வாசல் தான் பிரதான வாசல்.

கோயிலில் நுழைந்தவுடன் கொடிமரம் தாண்டி உள்ள மண்டபத்தில் துவார பாலகிகள். இவர்களுக்கு இடதுபுறம் கணபதி, சரசுவதி, பிரம்மா. வலதுபுறம் முருகன், இலக்குமி, திருமால். இவர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் தரிசிக்கலாம். அதே போல அடுத்துள்ள மண்டபத்தில் சிவகாமி உடனுறை நடராசரும், பாணலிங்கமும் இருக்க அருகே ஆதிகாலத்து உக்கிர காளி தற்போது சாந்த சொரூப காளியாக வீற்றிருக்கிறார்.

மேலும் ஐந்துமுகம், பத்து கைகள், முன்று பாதங்களுடன் காயத்ரி தேவி வீற்றிருக்க, அருகே ஏகாம்பரேசுவரர் தனி சன்னதியில் கிழக்கு நோக்கி தரிசனம் தருகிறார்.

அன்னை காமாட்சி, பிற சிவ ஆலயங்களில் கிழக்கு அல்லது தெற்கு நோக்கி வீற்றிருக்கிறார்.

இங்கு காமாட்சியையும், ஏகாம்பரேசுவரரையும் ஒரே இடத்தில் நின்று கொண்டு தரிசித்து, இருவரின் அருளையும் ஒரே சமயத்தில் பெறலாம்.

கோயில் சுற்றுப் பிரகாரத்தில் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி, ஆஞ்சநேயர், தட்சிணாமுர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை, சண்டிகேசுவரர் இருக்க, இராமலட்சமணருக்கு உதவிய நளபிரம்மா தனி மண்டபத்தில் வீற்றிருக்கிறார்.

திருவிழா:

நவராத்திரி, கார்த்திகை மாதத்தில் ஏகாம்பரேசுவரரும் அம்மனும் திருவீதி உலா, மார்கழி மாதத்தில் தனுர் மாத விழா, திருவாதிரை ஆருத்ரா தரிசனம், தை மாத சங்கராந்தி.

கோரிக்கைகள்:

குடும்பத்தில் ஏற்படும் வறுமை தீர, குழப்பங்கள் நீங்க, தரித்திரத்தை போக்கி கொள்ள, அடுத்தவர்களை பரிகசிப்பதை நிறுத்திக் கொள்வதோடு துன்பங்களை போக்க இக்கோயிலுக்கு சென்று வழிபடலாம்.

நேர்த்திக்கடன்:

தங்களது கோரிக்கை நிறைவேறியவுடன் சிவனுக்கும் அம்பாளுக்கும் திருமுழுக்காட்டு, ஆராதனை செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *