அருள்மிகு இலட்சுமி நாராயணப்பெருமாள் கோயில், சின்னமனூர்

அருள்மிகு இலட்சுமி நாராயணப்பெருமாள் கோயில், சின்னமனூர், தேனி மாவட்டம்.

+91- 4554 – 247 486, 247 134 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 7.30 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

இலட்சுமிநாராயணர்

தாயார்

ஸ்ரீதேவி, பூதேவி

தல விருட்சம்

மகிழம்

தீர்த்தம்

சுரபி நதி

ஆகமம்

பாஞ்சராத்ரம்

பழமை

500 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்

அரிகேசவநல்லூர்

ஊர்

சின்னமனூர்

மாவட்டம்

தேனி

மாநிலம்

தமிழ்நாடு

முற்காலத்தில் இப்பகுதியில் வசித்த பெருமாள் பக்தர்கள், ஸ்ரீரங்கம் அரங்கநாதர் அமைப்பில் இங்கு சுரபி நதிக்கரையில் சிலை வடித்துக் கோயில் எழுப்பினர். அந்நியர் படையெடுப்பின்போது, கோயில் சேதமடைந்தது. பின்பு இப்பகுதியை சேர மன்னர்கள் ஆண்டு வந்தனர். அப்போது ஸ்ரீதேவி, பூதேவியுடன் மன்னர் கனவில் தோன்றிய பெருமாள், தனது இருப்பிடத்தைச் சுட்டிக்காட்டி இங்கு கோயில் எழுப்பும்படி கூறினார். அதன்பின்பு இங்கு குருவாயூரப்பன் அமைப்பில் சுவாமிக்கு சிலை வடித்த மன்னர், தாயார்களுடன் பிரதிஷ்டை செய்தார். குருவாயூரில் சின்னக்கண்ணனாக காட்சி தரும் பெருமாள் இங்கு, தாயார்களுடன் காட்சி தருவது விசேஷமான தரிசனம். பொதுவாக மகாலட்சுமி தாயாருடன் மட்டும் காட்சி தரும் மூர்த்தியே, “லட்சுமி நாராயணர்என்ற பெயரில் அழைக்கப்படுவார். ஆனால், இங்கு சுவாமியின் மார்பிலுள்ள மகாலட்சுமி பிரதான தாயாராக கருதப்படுவதால், சுவாமிக்கு இப்பெயரே அமைந்துவிட்டது.

கருவறையில் லட்சுமிநாராயணர், நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தருகிறார். பல்லாண்டுகளுக்கு முன்பு இக்கோயிலில் ஆஞ்சநேயருக்கு சன்னதி அமைக்க முற்பட்டனர். அதற்காக சிலை வடித்து, சன்னதியும் எழுப்பப்பட்டது. சன்னதியில் ஆஞ்சநேயரை பிரதிஷ்டை செய்யும் முன்பாக, பக்தர் ஒருவர் மூலமாக அசரீரியாக ஒலித்த பெருமாள், தன் பக்தனான ஆஞ்சநேயரை தனக்கு அருகில் பிரதிஷ்டை செய்யும்படி கூறினார். அதன்படி ஆஞ்சநேயர் சிலையை மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்தனர். தற்போதும் ஆஞ்சநேயரை, மூலஸ்தானத்தில் சுவாமிக்கு அருகில் தரிசிக்கலாம். இவர் சுவாமியின் பாதத்தைவிட, உயரம் குறைவானவராக காட்சி தருவது விசேஷம். இவருக்காக அமைக்கப்பட்ட சன்னதி, பிரகாரத்தில்இருக்கிறது. அனுமன் ஜெயந்தியன்று இவருக்கு விசேஷ பூஜைகள் நடக்கும். ஞாயிற்றுக் கிழமைகளில் இவருக்கு வடை மாலை அணிவித்து வழிபடுவது விசேஷம்.

தீராத நோய், வயிற்று வலி நோயால் அவதிப்படுபவர்கள், தங்களுக்குரிய நட்சத்திர நாளில் சுவாமிக்கு துண்டு கட்டி வேண்டிக்கொள்கிறார்கள். பக்தர்கள் கொடுக்கும் துண்டை, சுவாமியின் மடியில் கட்டி திருமஞ்சனம் செய்கின்றனர். பின்பு ஈரமான துண்டை, பக்தர்களிடம் கொடுத்து விடுகிறார்கள். இதை வீட்டில் விரித்து, அதன் மீது படுத்துக்கொண்டால், நோய் நிவர்த்தியாவதாகச் சொல்கிறார்கள். திருமஞ்சனம் செய்வதற்கு கட்டணம் உண்டு. இப்பகுதி விவசாயம் செழித்த பகுதியென்பதால் பக்தர்கள், தங்கள் வயலில் நெல் விதைக்கும் முன்பாக சுவாமியின் பாதத்தில் வைத்து பூஜித்துச் செல்கிறார்கள். மேலும் விவசாய நிலம் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்பதற்காக, காவலுக்கு கொண்டு செல்லும் கம்புகளை சுவாமியிடம் வைத்து, சஹஸ்ரநாம அர்ச்சனை செய்து வேண்டிக்கொள்ளும் வழக்கமும் இருக்கிறது.

திருமணத்தடை உள்ள பெண்கள் பெருமாளுக்கும், ஆண்கள் ஸ்ரீதேவிக்கும் மாலை அணிவித்து வேண்டிக் கொள்கிறார்கள். நிலம் தொடர்பான பிரச்னை நீங்க, பூமாதேவிக்கு செவ்வாய் கிழமைகளில், செவ்வாய் ஓரை நேரத்தில் குங்கும அர்ச்சனை செய்து, அதை தங்களது நிலத்தில் தூவி வேண்டிக் கொள்கிறார்கள். சுரபிநதியின் கிழக்கு கரையில் அமைந்த கோயில் இது. சுவாமி குருவாயூர் அமைப்பில் காட்சி தருவதால், அக்கோயிலைப்போலவே இங்கும் இலட்சுமிநாராயணர் கையில் வைத்திருக்கும் சந்தனத்தையே பிரசாதமாகத்தருகிறார்கள். கிருஷ்ண ஜெயந்தியன்று சுவாமிக்கு கிருஷ்ணரைப்போல் அலங்காரம் செய்து விசேஷ பூஜைகள் செய்வர். அன்று உற்சவர் குழந்தை கிருஷ்ணராக அலங்காரத்தில், கையில் வெண்ணெய் தாழியுடன் புறப்பாடாவார். சுவாமி இங்கு பிரதானம் என்பதால், பரிவார மூர்த்திகள் இல்லை. சுவாமிக்கு எதிரே கருடாழ்வார் மட்டும் இருக்கிறார். பிரகாரத்தில் மகிழ மரத்தின் கீழ் சிவலிங்கம், நாகர் இருக்கின்றனர். சனி, குரு பெயர்ச்சி காலத்தில் உலக நன்மைக்காக விசேஷ ஹோமங்கள் நடக்கும். சித்ராபவுர்ணமி விழா, சுவாமிக்கு விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. அன்று சுவாமி குதிரை வாகனத்தில் பெரியாற்றில் எழுந்தருளுவார். சிவனுக்குரிய மகிழ மரம் இத்தலத்தின் விருட்சமாகும்.

இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் திரிதளம் எனப்படும். இங்கிருந்து சற்று தூரத்தில் சிவன், பூலாநந்தீஸ்வரர் என்ற பெயரில் கோயில் கொண்டிருக்கிறார். இங்குள்ள சிவன், சன்னதிக்கு வெளியில் எங்கிருந்து பார்த்தாலும் ஒரே அளவில் காட்சி தருவார் என்பது சிறப்பான அம்சம்.

திருவிழா:

சித்ராபவுர்ணமி, புரட்டாசி சனிக்கிழமை.

கோரிக்கைகள்:

குடும்பத்தில் ஐஸ்வர்யம் உண்டாக, விவசாயம் செழிக்க, முதலாளிகளிடம் விசுவாசம் நிலைத்திருக்க இங்கு வேண்டிக் கொள்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:

சுவாமிக்கு சர்க்கரைப்பொங்கல் நைவேத்யம் படைத்து, நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *