அருள்மிகு கம்பராயப்பெருமாள், காசிவிஸ்வநாதர் திருக்கோயில், கம்பம்

அருள்மிகு கம்பராயப்பெருமாள், காசிவிஸ்வநாதர் திருக்கோயில், கம்பம், தேனி மாவட்டம்.

+91-94864 69990, 93612 22888

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் கம்பராயப்பெருமாள், காசிவிஸ்வநாதர்
தாயார் அலமேலுமங்கை, காசிவிசாலாட்சி
தல விருட்சம் வன்னி
தீர்த்தம் சுரபி
ஆகமம் பாஞ்சராத்ரம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் கம்பம்
மாவட்டம் தேனி
மாநிலம் தமிழ்நாடு

இப்பகுதியை ஆண்ட சிற்றரசருக்கு, சிவனுக்கும், பெருமாளுக்கும் ஒரே இடத்தில் கோயில் கட்ட வேண்டுமென்ற ஆசை இருந்தது. அவரது கனவில் தோன்றிய பெருமாள், மேற்கு மலைத்தொடர்ச்சியின் அடிவாரத்தில் ஒரு கல் கம்பம் இருப்பதைச் சுட்டிக்காட்டி, அவ்விடத்தில் தனது சிலை வடிவம் இருப்பதை உணர்த்தினார். அதன்படி மன்னர் சிலையை எடுத்து வந்து, இங்கு பிரதிஷ்டை செய்தார். கம்பம் அருகில் கிடைத்தவர் என்பதால் சுவாமிக்கு, “கம்பராயப் பெருமாள்என்ற திருநாமம் சூட்டினார். அந்த ஊருக்கும், “கம்பம்என்றே பெயர் வைத்தார். பின்னர் காசியிலிருந்து iலிங்கம் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்து, இருவருக்கும் ஒரே நாளில் கும்பாபிஷேகம் செய்வித்தார். இங்குள்ள தல விருட்சம் வன்னி. இந்த மரத்தை பிரம்மாவாக கருதுகின்றனர். ஆக, மும்மூர்த்திகளையும் வணங்க ஏற்ற தலம் இது.

திருமங்கை நாட்டை ஆண்ட நீலன் என்னும் மன்னன், தினமும் 1008 பெருமாள் அடியார்களுக்கு அன்னமிட்டு உபசரிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் அவரிடமிருந்த செல்வம் குறைந்து, அப்பணியைச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. ஆனாலும் கலங்காத அவர் ஒருகட்டத்தில் திருடி அடியார்களுக்கு அன்னமிடும் சேவையைத் தொடர்ந்தார். அவரது பக்தியை வெளிப்படுத்துவதற்காக பெருமாள், திருமணக்கோலத்தில் சென்று எட்டெழுத்து மந்திரத்தை உபதேசித்தார். அதன்பின் அவர் ஆழ்வார்களில் ஒருவராகி, “திருமங்கையாழ்வார்என்று பெயர்பெற்றார். திருமங்கை ஆழ்வாரின் பக்தியையும், அவரது வாழ்க்கையையும் சிறப்பிக்கும் விதமாக, இக்கோயிலில் ஆனி மாதம் நடக்கும் பிரம்மோற்ஸவத்தில், “திருமங்கையாழ்வார் திருடிய வைபவம்நடத்துகின்றனர். அன்று திருமங்கையாழ்வார் திருடுவது போல பாவனை செய்து, காவலர்கள் அவரை பிடித்துச் சென்று சுவாமி முன்பு நிறுத்துகின்றனர். அவ்வேளையில் அவர் திருடிய பொருட்களின் பட்டியல் வாசிக்கப்படும், இதை பட்டோலை வாசித்தல்என்பர். அதன்பின் பெருமாள் திருமங்கையாழ்வாருக்கு காட்சி தருவார்.

சிவன், பெருமாள் கோயில்கள் ஒரே வளாகத்தில், தனித்தனி கொடிமரங்களுடன் உள்ளன. திருவோண நட்சத்திர நாட்களில் பெருமாள் சன்னதியில் ஓண தீபம்ஏற்றப்படும். அர்ஜுனனுக்கு தேரோட்டியாக இருந்ததால் திருவல்லிக்கேணியில் பார்த்த சாரதி பெருமாள் மீசையுடன் காட்சி தருகிறார். இந்த அமைப்பில் வைகுண்ட ஏகாதசியன்று ஒருநாள் மட்டும் சுவாமிக்கு மீசையுடன் அலங்காரம் செய்கின்றனர். திருவிழா நாட்களில் பெருமாள் சிலை கிடைக்கப்பெற்ற இடத்திலுள்ள கம்பத்திற்கு முதல் பூஜை செய்கின்றனர். இவ்வூரில் தேரோட்டம் மூன்று நாட்கள் நடக்கும். தாயார் அலமேலுமங்கை தனிச்சன்னதியில் இருக்கிறாள். விமானத்துடன் தரிசிக்கும் வகையில் இவளது சன்னதி அமைக்கப்பட்டிருக்கிறது. சக்கரத்தாழ்வாருக்கும் சன்னதி இருக்கிறது. இவருக்கு பின்புறமுள்ள நரசிம்மர், நான்கு கைகளிலும் சக்கரங்களுடன் காட்சி தருகிறார். ஆனி மாத சித்திரை நட்சத்திரத்தில் சக்கரத்தாழ்வாருக்கு விசேஷ ஹோமத்துடன், பூஜை நடக்கிறது.

சிவன் கோயிலில் காசி விஸ்வநாதர் சதுர வடிவ ஆவுடையாருடன் காட்சி தருகிறார். காசி விசாலாட்சிக்கும் சன்னதி இருக்கிறது. கோஷ்டத்திலுள்ள தட்சிணாமூர்த்தி கமண்டலத்துடன் காட்சி தருகிறார். யோக பட்டை அணிந்திருக்கும் இவரது தலைக்கு மேலே கல்லால மரம், காலுக்கு கீழ் முயலகன் மற்றும் சீடர்கள் கிடையாது. பீடத்தில் நாகம் மட்டும் இருக்கிறது. குருப்பெயர்ச்சியின்போது ஹோமம் நடத்தி விசேஷ பூஜை செய்கின்றனர். குருப்பெயர்ச்சியால் பரிகாரம் செய்ய வேண்டிய ராசிக்காரர்கள் இவருக்கு வன்னி இலையால் அர்ச்சனை செய்து வழிபடுகிறார்கள். காசி விநாயகர், காவல் தெய்வம் வடமலை மொட்டையாண்டி ஆகிய தெய்வங்களுக்கும் சன்னதி இருக்கிறது.

இங்குள்ள முருகப்பெருமான் சண்முகநாதர்என்றழைக்கப்படுகிறார். ஆறுமுகங்களைக் கொண்ட இவருக்கு முன்புறம் ஐந்து முகங்களும், பின்புறம் ஒரு முகமும் இருப்பது வித்தியாசமான அமைப்பு. செவ்வாய் தோஷ நிவர்த்தி பெற, திருமணத்தடை நீங்க இவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள். மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் திரிதள விமானம் எனப்படும். இத்தலவிநாயகர் சித்தி விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

திருவிழா:

பெருமாள் கோயிலில் கிருஷ்ணஜெயந்தி, நவராத்திரி, அனுமன் ஜெயந்தி, ராமநவமி ஆகிய விழாக்களும், சிவனுக்கு சிவராத்திரி, ஆடிப்பெருக்கு, ஐப்பசியில் அன்னாபிஷேகம், ஆருத்ரா தரிசனம் ஆகிய விழாக்களும் நடக்கிறது.

கோரிக்கைகள்:

குடும்பத்தில் ஐஸ்வர்யம் உண்டாக, திருமண தடை நீங்க, புத்திர தோஷங்கள் நீங்க இங்கு வேண்டிக்கொள்ளலாம்.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியதும் சிவன், பெருமாளுக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்தும் பிரகாரத்தில் உள்ள ஆஞ்சநேயருக்கு எண்ணெய்காப்பு செய்து, தயிர்சாதம், வடை மாலை படைத்தும் வழிபாடு செய்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *