அருள்மிகு காளியம்மன் திருக்கோயில், காளியூர்

அருள்மிகு காளியம்மன் திருக்கோயில், காளியூர், நாகப்பட்டினம் மாவட்டம்.
*************************************************************************************

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – காளியம்மன்

அம்மன்: – துர்கை, காளியம்மன், மாரியம்மன், அஷ்டபுஜகாளி, பாலசுகாம்பாள், அபிராமி

பழமை: – 500 வருடங்களுக்கு முன்

ஊர்: – காளியூர்

மாவட்டம்: – நாகப்பட்டினம்

மாநிலம்: – தமிழ்நாடு

இந்த ஊர் ஒரு காலத்தில் சீனிவாசபுரம் என அழைக்கப்பட்டது . திடீரென ஒரு நாள் ஊர்மக்கள் பலரும் நச்சுக்காய்ச்சலாலும், வாந்திபேதியாலும் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் வெள்ளம் வந்து வயல்களுக்குள் பாய்ந்து பயிர்களையெல்லாம் அழித்தது. வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்ததால் மக்கள் ஊர் எல்லையில் தஞ்சம் அடைந்தனர். இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களின் துயர்களைப் போக்க இங்கு காளி எழுந்தருளினாள். மகிசாசுரனை வதம் செய்த தேவி எருமையென வந்த அசுரனின் தலை பூமியில் விழக்கூடாது; விழுந்தால் பூமிக்கு ஆபத்து என்று அசுரனின் தலையைக் கொய்ததுடன், பூமியில் விழாமல் கரங்களில் ஏந்தி நின்றாளாம். அப்படி அவன் நின்ற இடம் தான் கிடாத்தலைமேடு என்று திகழ்கிறது. இங்கே காளிதேவி, துர்கையாக எழுந்தருள்கிறாள். மிகுந்த உக்கிரமும், அளவற்ற கருணையும் கொண்ட துர்க்கையாக அனைவரையும் காக்கிறாள். ஊரின் நுழைவுவாயிலில் மந்தகரை காளியம்மனும், இன்னொரு எல்லையில் நத்தம் மாரியம்மனும், வடக்கு எல்லையில் வடகாளியம்மனும் வீற்றிருக்கின்றனர். இந்த வடகாளியம்மனுக்கு வெக்காளியம்மன், பத்ரகாளியம்மன் என பல திருநாமங்கள் உண்டு.

காளியூர் கிராமத்தின் நான்கு எல்லைகளிலும் நான்கு தேவியராகக் கோயில் கொண்டு ஊரை செழிக்கச் செய்வது மட்டுமின்றி, ஊருக்கு நடுவிலும் கோயில் கொண்டு அருள்பாலிக்கிறாள் எட்டுக்கை காளி. வடக்கு எல்லையில் உள்ள வடகாளியம்மன் கோயிலில் சப்தகன்னியர்கள் பரிகார தெய்வங்களாக உள்ளனர். ஐந்து காளிகளும், இரண்டு அம்பிகைகளும் அருள்பாலிக்கும் அற்புத தலம். கரங்களில் ஆயுதங்கள் ஏந்தியிருந்தாலும் சாந்தமுகமாக காட்சியளிக்கிறாள். இவளை மகாகாளி எனப் போற்றுகின்றனர்.

கிராமத்தின் நடுவே காமேசுவரர் கோயில் உள்ளது.

இக்கோயிலில் பாலசுகாம்பாள், அபிராமியம்பிகை என்று இரண்டு அம்பிகைகள் உள்ளனர். இங்கு கல்யாண வரம் தரும் நித்திய கல்யாணப் பெருமாள் அருள்பாலிக்கிறார். ஏழு தேவியரையும், காமேசுவரரையும், நித்திய கல்யாணப் பெருமாளையும் ஒரேநாளில் தரிசித்து, பெருமாளுக்குத் திருமஞ்சனம் செய்து வழிபட்டால் எதிரிகள் பயம் நீங்கும். பில்லிசூனியப் பிரச்சனைகள் தீரும்.

இந்த காளியூர் கிராமத்தில் ஏழு அம்மன்கள் ஒரே ஊரில் அமர்ந்து அருள்பாலிப்பதும், இங்குள்ள துர்கா தேவி திருமேனி மூக்கின் நுனியில் மூக்குத்தி போடுவது போன்ற துளையுடன் இருப்பதும் இத்தலத்தின் சிறப்பு.

திருவிழா:

ஆடி அமாவாசை, ஆடித்திருவிழா, பொங்கல்

கோரிக்கை:

திருமண தோடங்கள் நீங்க மந்தக்கரை காளியம்மனையும், வியாபாரம், இல்லறம் செழிக்க வடக்கு எல்லை வடகாளியம்மனையும் வழிபடுகின்றனர். மேலும் மாதவிடாய் பிரச்சனைகள் தீர பாலசுகாம்பாளையும், கல்வி ஞானத்தில் சிறக்க அபிராமியம்பிகையையும் வழிபடுகின்றனர்.

நேர்த்திகடன்:

கோரிக்கை நிறைவேறிய பக்தர்கள் வடகாளி அம்மனுக்கு எலுமிச்சை மாலை சாற்றியும், குங்குமத்தால் அர்ச்சனை செய்தும், பாலசுகாம்பாளுக்கு நெய்தீபம் ஏற்றியும், பொங்கல் வைத்தும் மற்றும் அபிராமியம்மைக்கு பச்சைநிற புத்தாடை சாற்றியும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *