அருள்மிகு கல்யாணராமர் திருக்கோயில், மீமிசல்

அருள்மிகு கல்யாணராமர் திருக்கோயில், மீமிசல், புதுக்கோட்டை மாவட்டம்.

+91 99658- 64048 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

கல்யாணராமர்

தீர்த்தம்

கல்யாண புஷ்கரணி

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

மீமிசல்

மாவட்டம்

புதுக்கோட்டை

மாநிலம்

தமிழ்நாடு

இலங்கையில் இருந்த சீதையை மீட்க வானரப்படை சகிதமாக இராம, இலட்சுமணர்கள் சென்றனர். அவர்கள் மீமிசல் பகுதிக்கு வந்தனர். அப்பகுதி மக்கள் இராமருக்கு உதவி செய்தனர். இதற்கு கைமாறாக சீதையை மீட்டு வரும் போது, மீமிசலில் திருமணக் கோலத்தில் இராமர், சீதை ஆகியோர் இலட்சுமணனுடன் இங்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அந்த இடத்தில் சரபோஜி மன்னர் கல்யாணராமர் சுவாமி கோயிலைக் கட்டி திருப்பணிகள் செய்தார். இராவணனிடம் போரிட்டு வெற்றி பெற்ற கல்யாணராமர் எழுந்தருளியிருப்பதால், தினமும் கடலுடன் போராடி தங்கள் வாழ்க்கையை ஓட்டும் மீனவ சமுதாயத்தினரும் தங்களுக்கும், தொழிலுக்கும் பங்கம் ஏற்படாமல் இருக்க இவரை வழிபாடு செய்கின்றனர். இலங்கை இருக்கும் திசை நோக்கி காட்சியளிக்கும் இராமர் கோயில் கர்ப்பக் கிரகத்தில் இராமர், சீதை, இலட்சுமணன் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கின்றனர். அருகில் ஆஞ்சநேயரும் எழுந்தருளியுள்ளார். இதேவடிவில் உற்சவ மூர்த்திகளும் காணப்படுகின்றனர்.

சீதையை மீட்கும்போது ராவணனுடன் ஏற்பட்ட போரில் இலட்சுமணன் மயக்கமடைந்து விட்டார். அவருக்கு மயக்கம் தெளிவிக்க மூலிகைகள் நிரம்பிய சஞ்சீவிமலையை எடுத்து வர ஆஞ்சநேயர் சென்றார். மலையை எடுத்து வரும் வழியில், சனிபகவான் ஆஞ்சநேயரிடம், உன்னை பிடிக்க வேண்டிய கால கட்டம் வந்ததால், உன்னுடைய சரீரத்தை (உடம்பை) பிடிக்க அனுமதிக்க வேண்டும், என்றார். தன்னுடைய காலை பிடித்து கொள் என்று ஆஞ்சநேயர் கூறியதால் அவருடைய காலை சனிபகவான் பற்றிக் கொண்டார். இதனால் இங்குள்ள ஆஞ்சநேயரை வழிபட்டால் சனி பகவானின் பார்வை குறையும் என்ற நம்பிக்கையுள்ளது.

இங்கு வரும் குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகளுக்கு, கேதுவின் தானியமான கருப்பு உளுந்தை, முகுந்தமாலா என்று கூறப்படும் மந்திரத்தை உச்சரித்து 90 நாட்களுக்கு தேவையான அளவு பிரசாதமாகத் தருகின்றனர். இதனை 90 நாட்கள் சாப்பிடுவதன் மூலம் குழந்தை பாக்கியம் கிடைப்பதாகவும் நம்பிக்கையுள்ளது. அத்துடன் இராமர் சன்னதியில் தவழ்ந்த நிலையில் இருக்கும் ஐம்பொன்னால் செய்யப்பட்ட சந்தானகிருஷ்ணன் விக்ரகத்தை பூஜித்து, குழந்தை பாக்கியம் கோரி வரும் பக்தர்களுக்கு விக்கிரகத்தை வழங்குகின்றனர். விக்கிரகத்தை மடியில் வைத்திருக்கும் பக்தர்கள் பூஜை முடிந்து வீடு திரும்பும் போது அதைக் கோயிலில் வழங்கிவிட்டு செல்கின்றனர். இவ்வாறு சந்தான கிருஷ்ணனை மடியில் சுமப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

நாகதோஷம், செவ்வாய் தோஷம், கார்க்கோடகதோஷம், மாங்கல்ய தோஷம், பித்ருக்கள் தோஷம் நீங்க பரிகார பூஜைகள் நடக்கிறது. இதற்காக பக்தர்கள் அருகிலுள்ள மீமிசல் கடலில் குளித்துவிட்டு, கோயில் வளாகத்தில் உள்ள கல்யாண புஷ்கரணியிலும் குளித்து ஈரத்துடன் கல்யாணராமர் சுவாமியை அர்ச்சனை செய்து வழிபட்டால் தோஷங்கள் நிவர்த்தியாகிறது.

திருவிழா:

இராம நவமி, வைகுண்ட ஏகாதசி, அனுமன் ஜெயந்தி, கிருஷ்ண ஜெயந்தி.

கோரிக்கைகள்:

மீனவ சமுதாயத்தினர் தங்களுக்கும், தொழிலுக்கும் பங்கம் ஏற்படாமல் இருக்க கல்யாணராமரை வழிபாடு செய்கின்றனர். நாகதோஷம், செவ்வாய் தோஷம், கார்க்கோடகதோஷம், மாங்கல்ய தோஷம், பித்ருக்கள் தோஷம் நீங்க பரிகார பூஜைகள் நடக்கிறது. இங்குள்ள ஆஞ்சநேயரை வழிபட்டால் சனி பகவானின் பார்வை குறையும் என்ற நம்பிக்கையுள்ளது.

நேர்த்திக்கடன்:

இராமருக்கும், சீதைக்கும் திருமஞ்சனம் செய்து, புது வஸ்திரம் சாற்றி சிறப்பு அர்ச்சனை செய்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *