அருள்மிகு காத்ர சுந்தரேஸ்வரர் திருக்கோயில், கஞ்சாநகரம்

அருள்மிகு காத்ர சுந்தரேஸ்வரர் திருக்கோயில், கஞ்சாநகரம், தரங்கம்பாடி தாலுக்கா, கீழையூர் வழி, நாகப்பட்டினம் மாவட்டம்.

+91 4364- 282 853, 94874 43351

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 10 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

காத்ர சுந்தரேஸ்வரர்

தாயார்

துங்கபாலஸ்தானம்பிகை

பழமை

2000 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்

காஞ்சன நகரம்

ஊர்

கஞ்சாநகரம்

மாவட்டம்

நாகப்பட்டினம்

மாநிலம்

தமிழ்நாடு

பத்மாசுரன், சிங்கமுகன் உள்ளிட்ட அசுரர்களால் பாதிக்கப்பட்ட முனிவர்களும், தேவர்களும் தங்களைக் காப்பாற்றும்படி பார்வதி தேவியிடம் முறையிட்டனர். இவர்களது குறைபோக்க பார்வதி சிவனை வேண்டினாள். சிவபெருமான் காத்ரஜோதி (நெருப்பு வடிவம்) யோகம் பூண்டு தவம் செய்து கொண்டிருந்த காலம் அது. அம்மனின் வேண்டுதலால் தவம் கலைந்த சிவன், காத்ர சுந்தரேஸ்வரர் (கார்த்திகா சுந்தரேஸ்வரர்) என்னும் பெயர் கொண்டு தன் நெற்றிக் கண்ணைத் திறந்தார். அதிலிருந்து ஆறு ஜோதிகள் புறப்பட்டன. அந்தப் பொறிகள் ஒன்றிணைந்து கார்த்திகேயன் ஆயின. முருகன் பிறக்க காரணமான, இத்தல இறைவனிடமிருந்து ஆறு தீப்பொறிகளின் காஞ்சனப்பிரகாசம் தோன்றியதால் இவ்வூர் காஞ்சன நகரம் என்று பெயர் பெற்றிருந்தது. காலப் போக்கில் கஞ்சாநகரம் (பொன் நகரம்) ஆனது. தான் தோன்றக் காரணமாக இருந்த இத்தல இறைவனை கார்த்திகேயன் தினமும் வழிபாடு செய்வதாக ஐதீகம். எனவே, இத்தலம் கார்த்திகை நட்சத்திரத்திற்குரிய தலமானது. கார்த்திகா சுந்தரேஸ்வரர் என்றால் ஆறுவிதஜோதிகளை உருவாக்கும் சக்தி படைத்தவர் என்று பொருள்.

கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் கார்த்திகை நட்சத்திரத்தன்றோ, பிரதோஷ நாட்களிலோ இந்தக் கோயிலில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் வாழ்க்கை வளம் பெறும் என்பது நம்பிக்கை. திருமணத்தடை உள்ள கார்த்திகை நட்சத்திரப்பெண்கள் புண்ணிய நதிகளின் தீர்த்தத்தால் இத்தல அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், சுமங்கலி பூஜை செய்தும் வழிபட்டால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.

மதுரை மீனாட்சியைப் போலவே இங்குள்ள அம்மன் துங்கபாலஸ்தானம்பிகையின் கையில் கிளி இருக்கிறது. இதற்கு வேதாமிர்த கீரம் என்று பெயர். மற்ற கரங்களில் நீலோத்பவ மலர், சங்கு, சக்கரம் வைத்திருக்கிறாள். சிவனே வேதசக்தியாகக் கிளி வடிவில் அம்மனின் இடதுதோளில் அமர்ந்திருப்பது சிறப்பு. இது வேதமோதும் கிளியாகும். இத்தல அம்மனை வியாசரும், சுகப்பிரம்ம மகரிஷியும் வழிபாடு செய்துள்ளனர். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் வெள்ளிக்கிழமை அல்லது கார்த்திகை நட்சத்திர நாட்களில் இந்தக் கிளியை தரிசனம் செய்தால் சிறந்த மணவாழ்க்கை அமையும். மூலஸ்தான விமானத்தின் மேல் சட்டநாதருக்கு தனி சன்னதி உள்ளது. வெள்ளிக்கிழமை தோறும் இரவு சட்டநாதருக்கு சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.

கோயில் பிரகாரத்தில் செல்வ விநாயகர், நர்த்தன விநாயகர், சுப்பிரமணியர், துர்க்கை, பிரம்மா, சண்டிகேஸ்வரர், மேதா தட்சிணாமூர்த்தி, நந்தி, நவக்கிரக சன்னதிகள் உள்ளன. மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில், வள்ளலார் கோயில், திருஇந்தளூர், பல்லவனீஸ்வரர் ஆகிய கோயில்கள் இத்தலத்தின் அருகில் உள்ளன.

சிவபெருமான் இத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாக மேற்கு நோக்கி அருள்பாலிப்பது முக்கிய சிறப்பாகும். 63 நாயன்மார்களில் மானகஞ்சார நாயனார் இத்தலத்தில் தான் அவதாரம் செய்து முக்தி அடைந்துள்ளார். கார்த்திகைப்பெண்கள் அறுவரும் இங்கு அவதாரம் செய்ததாகக் கூறப்படுகிறது.

கோரிக்கைகள்:

கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். திருமணத்தில் தடை உள்ள பெண்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் வழிபாடு செய்கிறார்கள். சொத்து தகராறு, பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேர இங்க வழிபாடு செய்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:

தங்களுக்கு விரைவில் திருமணம் நடக்க பெண்கள் இத்தலத்தில் சுமங்கலி பூஜை செய்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *