அருள்மிகு சித்திர ரத வல்லபபெருமாள் கோயில், சோழவந்தான் வழி, குருவித்துறை

அருள்மிகு சித்திர ரத வல்லபபெருமாள் கோயில், சோழவந்தான் வழி, குருவித்துறை, மதுரை மாவட்டம்.

+91- 98425 06568 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7.30 மணி முதல் 1.30 மணி வரை, மாலை 3.30 மணி முதல் 5.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

சித்திரரத வல்லப பெருமாள்

தாயார்

செண்பகவல்லி

பழமை

1000 வருடங்களுக்கு முன்

ஊர்

குருவித்துறை

மாவட்டம்

மதுரை

மாநிலம்

தமிழ்நாடு

முன்னொரு காலத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் போர் நடந்து கொண்டிருந்தது. அசுரர்களில் நிறைய பேர் மாண்டனர். மாண்டுபோன அசுரர்களை எல்லாம் அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியார் மிருத்யசஞ்சீவினி என்ற மந்திரம் மூலம் உயிர் பெறச்செய்து காப்பாற்றி வந்தார். அந்த மந்திரத்தை கற்றுக்கொள்ள விரும்பிய தேவர்கள், வியாழ பகவானின் (குரு) மகன் கசனை அழைத்து, “உனது தியாகத்தால் தான் அசுரர்களை வெல்ல முடியும். எனவே நீ அசுர குரு சுக்கிராச்சாரியாரிடம் சென்று குருகுல வாசம் செய்து மிருத்யசஞ்சீவினி மந்திரத்தை உபதேசம் பெற்று வர வேண்டும்என்றார்கள். தேவர்கள் கூறியதுபோலவே கசனும் தன் தந்தை வியாழபகவானிடம், “நான் திரும்பி வரும் போது பிரம்மச்சாரியாகத்தான் வருவேன்என்று சபதம் செய்து விட்டு, அவரது ஆசியுடன் அசுரகுருவிடம் சென்றான். அசுரலோகம் சென்ற அவன், சுக்ராச்சாரியாரின் மகள் தேவயானியிடம் அன்பு செலுத்துவது போல நடித்தான். அவள் மூலமாக சுக்ராச்சாரியாரிடம் மந்திரம் கற்றுக் கொண்டான். இதையெல்லாம் கண்காணித்து வந்த அசுரர்கள் கசன் உயிரோடு இருந்தால் அசுரர்குலத்திற்கு ஆபத்து வந்துவிடும் என நினைத்து கசனை கொன்றுவிடத் தீர்மானித்தார்கள். அதன்படி கசனை கொன்று தீயிலிட்டு சாம்பலாக்கி அசுரகுரு குடிக்கும் பானத்தில் கலக்கி கொடுத்து விட்டார்கள். அசுரகுருவும் ஏதும் அறியாமல் குடித்து விட்டார். கசனை காணாத தேவயானி, தன் தந்தை சுக்கிராச்சாரியாரிடம் கசனின் இருப்பிடத்தை கண்டறியும்படி வேண்டினாள். அசுரகுருவும் தன் ஞான திருஷ்டியால் கசன் தன் வயிற்றில் இருப்பதை அறிந்து தன் மகளை தேற்றினார். தேவயானியின் விருப்பப்படி மிருத்யசஞ்சீவினி மந்திரம் மூலம் கசனை உயிர் பெறச் செய்தார்.

உயிர்பெற்று வந்த கசன், தன் உயிரைக்காப்பாற்றிய அசுரகுரு இறந்து கிடப்பதைக் கண்டு தான் அவரிடம் கற்ற மந்திரம் மூலம் அசுரகுருவை உயிர்பெறச் செய்தான். அசுரகுரு உயிர் பெற்றவுடன், “குருவே நான் வந்த காரியம் முடிந்து விட்டது எனக்கு விடை தாருங்கள். நான் செல்ல வேண்டும்என்று கூறினான். சுக்கிராச்சாரியார் தன் மகள் தேவயானியை மணம் முடித்து செல்ல வேண்டும் என்று கூற, அதற்கு கசன் தன் தந்தையிடம் பிரம்மசாரியாக திரும்பி வருவதாக சத்தியம் செய்திருப்பதாகவும், மேலும் சுக்கிராச்சாரியாரின் வயிற்றிலிருந்து மீண்டு வந்துள்ளதால் தேவயானி எனக்கு சகோதரி முறை வேண்டும் என பக்குவமாகக் கூறி தேவலோகம் கிளம்பினான். தேவயானி எவ்வளவு தடுத்தும் பயனில்லாமல் போகவே, கடும்கோபம் கொண்ட அவள், தன் இஷ்ட தேவதைகளைப் பிரார்த்தித்து கசனை சப்த மலைகளாலும் தடுத்து நிறுத்தி தேவலோகம் செல்ல முடியாமல் அசுரலோகத்திலேயே தங்க வைத்தாள். கசனைக் காணாத குரு, மகனை மீட்டுத்தரும்படி இத்தலத்தில் பெருமாளை வேண்டி தவமிருந்தார். பெருமாள், சக்கரத்தாழ்வாரை அனுப்பி கசனை மீட்டார். பின்பு அவரது வேண்டுதலுக்காக இங்கேயே எழுந்தருளினார். பெருமாள், குரு பகவானுக்கு ஒரு சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரத்தன்று (சித்ரா பவுர்ணமி), சித்திரத் தேரில் எழுந்தருளி காட்சி தந்தார். இதனால் இவர், சித்திரரத வல்லப பெருமாள் என்று அழைக்கப்படுகிறார். தாயார்களுடன் சந்தன மரச்சிலையால் ஆன மூர்த்தியாக காட்சி தருவது விசேஷமான அம்சம். கோயிலுக்கு எதிரே குருபகவான், சக்கரத்தாழ்வாருடன் இருக்கிறார். இவர்களுக்கு முன்புறம் சுயம்பு வடிவ சிலைகள் உள்ளன. சுயம்பு மற்றும் பிரதிஷ்டை மூர்த்திகளை ஒரே இடத்தில் காண்பது அபூர்வமான விஷயம்.

நமக்கு குருபெயர்ச்சி பாதிப்பு என்றால் குருவிடம் சென்று முறையிடுவோம். அந்த குருவுக்கே பாதிப்பு என்றால் யாரிடம் போய் முறையிடுவார். குருபகவானும் தன் மகன் கசனுக்காக உலக நாயகன் நாராயணனை நோக்கித் தவம் செய்த இடம் தான் குருவித்துறை சித்திரரத வல்லபபெருமாள் கோயிலாகும். உலகில் வியாழ பகவானே நாராயணனை நோக்கி தவம் செய்யும் இடம் இந்த திருத்தலம் என்றும் வியாழன் சுயம்புவாக தவக்கோலத்தில் வீற்றிருப்பதும் இங்குதான் என நம்பப்படுகிறது. 12 ஆழ்வார்களின் சிலைகள் ஒன்று சேர்ந்து அமைந்துள்ளது. சக்கரத்தாழ்வார் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். வியாழன் (குரு) தன் மகனுக்காக வைகை நதிக்கரையில் துறை அமைத்து நாராயணனை நோக்கி தவம் செய்ததால் இந்த இடம் குருவி(ன்)த்துறை ஆனது. குருவின் தவத்தால் மகிழ்ந்த நாராயணனும் சித்திர வேலைப்பாடுடன் அமைந்த தேரில் வியாழ பகவானுக்கு காட்சி தந்து, கசனை மீட்டு தந்தார். இதனாலேயே இங்குள்ள இறைவன் சித்திர ரத வல்லப பெருமாள் என அழைக்கப்படுகிறார். இத்தலத்தில் நவக்கிரகத்தில் வியாழன் கிரகம் யோக குருவாக அருள்பாலிக்கிறார்.

திருவிழா:

வைகுண்ட ஏகாதசி, குருபெயர்ச்சி.

கோரிக்கைகள்:

வியாழனே இங்கு வந்து தவம் செய்த தலம் என்பதால், குரு(வியாழன்) தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டு பரிகாரம் செய்தால் தோஷம் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம். வியாழன் பார்க்க விரைந்திடும் திருமணம் என்றும், புண்ணிய குரு பார்க்க புத்திர பாக்கியம் கிட்டும் என்றும் இங்கு வந்து பலனடைந்தவர்கள் கூறுகின்றனர்.

நேர்த்திக்கடன்:

பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.

2 Responses to அருள்மிகு சித்திர ரத வல்லபபெருமாள் கோயில், சோழவந்தான் வழி, குருவித்துறை

  1. Rajeswari Ramasamy says:

    ingu valipada prethiyegamana slogam unda?

  2. Appadi onRum iruppathaakath theiyavillaiyE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *